முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிப்பு

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

ராட்சத டைனோசர்

முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, பத்து டன் எடை கொண்ட ராட்சத டைனோசரின் புதை படிவங்கள் அர்ஜென்டினாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமக்கு ஏற்கெனவே தெரிந்த டைனோசர்களுக்கு முந்தையது இது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அதுமட்டுமல்லாமல், டைனோசரின் காலம் குறித்து நாம் கணித்த காலத்திற்கும் முன்பே இந்த புவியில் அவை வாழ்ந்துள்ளன என்பதை இந்த புதைபடிவங்கள் நிரூபிப்பதாக கூறுகிறார்கள் அவர்கள்.

அகதிகள் குறித்த நகைச்சுவை

ஜெர்மன் உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீஹூஃபர் ஆஃப்கன் அகதிகள் குறித்து கேலி செய்திருக்கிறார். அதாவது, தனது 69வது பிறந்தநாள் அன்று 69 அகதிகள் ஜெர்மனைவிட்டு வெளியேறியதாக கூறி உள்ளார். இந்த 69 அகதிகளும் விமானத்தில் ஜூலை 4 ஆம் தேதி அன்று ஆஃப்கன் அனுப்பப்பட்டனர். அகதிகள் குறித்து 'குடியேறிகள் சிறப்புத்திட்டம்' என்ற ஒரு திட்டம் குறித்து பேசும்போது இவ்வாறாக கூறி உள்ளார். ஆனால், இந்த திட்டமானது ஜெர்மன் எதிர்கட்சிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கன் இன்னும் பாதுக்காப்பற்ற நாடாகதான் விளங்குகிறது. தாலிபன், இஸ்லாமியவாத குழுக்கள் அரசு படைகளுக்கு எதிராக அங்கு சண்டையிட்டு வருகின்றன.

நிலவுக்குவிண்கலம்

இஸ்ரேலிய அரசுசாரா நிறுவனம் ஒன்று இந்த ஆண்டு இறுதியில் ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. எலான் முஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஃபால்கன் 9 ஏவுகணை மூலம் டிசம்பர் 9 ஆம் தேதி ஃப்ளோரிடா மாகாணத்திலிருந்து இந்த விண்கலத்தை செலுத்த இருப்பதாக ஸ்பேஸ்ஐஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த விண்கலம் 2019 பிப்ரவரி மாதம் நிலவில் தரை இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக்-குக்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம்

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா தரவுகள் திருட்டு விவகாரத்தில் பிரிட்டன் தகவல்கள் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு ஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளது. அப்படி அபராதம் விதிக்கப்படும்பட்சத்தில் இதுதான் ஃபேஸ்புக்கிற்கு எதிரான முதல் மிகப்பெரிய தண்டத் தொகையாக இருக்கும்.

தொடர்புடைய தகவல்கள்

அமெரிக்கா-சீனா மீண்டும் பொருளாதார சண்டை

இருநூறு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய 6000 சீனா பொருட்களுக்கு வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து வரிவிதிக்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏற்கெனவே பல பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது அமெரிக்கா. 34 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு சீனா வரி விதித்ததை அடுத்து, இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அமெரிக்கா. இருநாட்டு வணிகத்தில் சீனாவின் மோசமான போக்கிற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறுகிறது வெள்ளை மாளிகை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :