தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்றியவர்கள் இவர்கள்தான்

தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறார்களையும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரையும் மீட்டு வெளியே கொண்டு வருவதற்கு தாய்லாந்து கடற்படையோடு சர்வதேச முக்குளிப்போர் பலர் இணைந்து செயல்பட்டனர்.

படத்தின் காப்புரிமை AFP/GETTY
Image caption வெளிநாட்டு முக்குளிப்போர் மீட்பு நடவடிக்கையில் பெரும் பகுதியாக செயல்பட்டனர்.

சிக்குண்டிருந்த இந்த சிறார்களும், பயிற்சியாளரும் முதன்முறையாக பிரிட்டிஷ் முக்குளிப்போரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

ஆனால், அவர்களை வெளியே கொண்டு வந்த மீட்பு நடவடிக்கை உண்மையிலேயே உலக நாடுகளின் முயற்சியாகவே அமைந்தது.

இந்த மீட்புதவி நடவடிக்கையில் தாய்லாந்து கடற்படையை சேர்ந்த முக்குளிப்போர் பலர் பங்கேற்றனர்.

தாய்லாந்து கடற்படையின் முன்னாள் அதிகாரிகளில் ஒருவரான சமான் குனன் கடந்த வெள்ளிக்கிழமை மீட்புதவி நடவடிக்கையின்போது, ஆக்ஸிஜன் குடுவையை விநியோகித்த பின்னர் திரும்பி வரும் வழியில் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழந்தார்.

இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டோர் பற்றி குறைவான தகவல்களே வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஈடுபட்டோர் பலரும் அது பற்றி பேச விரும்பாததே இதற்கு காரணமாகும்.

தாய்லாந்து மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த டஜன் கணக்கான முக்குளிப்போர் இந்த முயற்சியில் பங்கெடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அவர்களில் சிலரை பற்றி இங்கு குறிப்பிடுகின்றோம்.

தாய்லாந்து சீல் கடற்படை

படத்தின் காப்புரிமை FACEBOOK/THAI NAVY SEALS
Image caption தாம் லுயாங் குகைளில் இருந்து கடைசியாக வெளியேறிய, தாய்லாந்து சீல் கடற்படையை சேர்ந்த 3 முக்குளிப்போர் மற்றும் ஒரு மருத்துவர்.

தாய்லாந்தின் சிறப்பு படைப்பிரிவுகள் பல மீட்புதவி முயற்சிகளின் பகுதியாக செயல்பட்டன.

பாக் லோஹார்ஷூன் என்று இனம்காணப்பட்டுள்ளவர், ஒரு வாரத்திற்கு முன்னால் குகைக்குள் இந்த 13 பேர் சிக்குண்டிருந்ததை கண்டுபிடித்த பின்னர், சிறுவர்களுடனே தங்கியிருக்க தன்னார்வத்துடன் முன்வந்தார். இன்னும் பெயர் வெளியிடப்படாத மூன்று முக்குளிப்போர் இந்த நடவடிக்கையில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

கடந்த வாரம்,தாய் நேவி சீல் எனப்படும், தாய்லாந்து கடற்படையின் சிறப்பு பிரிவு அதனுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், மாணவர்களுக்கு ஏற்பட்டிருந்த சிறிய காயங்களுக்கு மருத்துவர் பாக் மருந்து போடும் காட்சியை காண முடிகிறது.

செவ்வாய்க்கிழமை மாலையில் 4 தாய்லாந்து நேவி சீலை சோந்த 4 பேர் இந்த குகையை விட்டு கடைசியாக வெளியே வந்தனர்.

இந்த சீல் கடற்படை அணியினரை தளபதி அர்பகோன் யுகுங்க்காவ் வழிநடத்தினார்.

முக்குளிப்போர் இந்த மாணவர்களை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டிருந்தபோது, மெதுவாக ஏற்படும் முன்னேற்றத்தை செய்தியாளர்களுக்கு சொல்லி வந்தவர் இவர்தான்.

Image caption இந்த ஆபத்தான மீட்பு நடவடிக்கையின்போது, தளபதி அர்பகோன் யுகுங்க்காவ் சீல் கடற்படையின் பொறுப்பாளராக செயல்பட்டார்.

ஜான் வோலான்தென் மற்றும் ரிச்சர்ட் ஸ்டாண்டன்

9 நாட்களாக குகைக்குள் சிக்குண்டிருந்த இந்த மாணவர்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் பிரிட்டனை சேர்ந்த ஜான் வோலான்தெனின் குரலைதான் முதல்முறையாக கேட்டனர்.

பிரிட்டனை சோந்த குகை ஆய்வு நிபுணர் ராபர்ட் ஹார்பரோடு, இவரையும், அவரது சக முக்குளிப்பவர் ரிச்சர்ட் ஸ்டாண்டனையும் தாய்லாந்து அதிகாரிகள் அழைத்திருந்தனர்.

இந்த கால்பந்து குழு காணாமல்போன 3 நாட்களில் இந்த மூவரும் தாய்லாந்தை வந்தடைந்தனர்.

தகவல் தொடர்பு ஆலோசகர் வோலான்தெனும், முன்னாள் தீயணைப்பு வீர்ருமான ஸ்டாண்டனும் சௌத் மற்றும் மத்திய வேல்ஸ் குகை மீட்புதவி அணியின் ஒரு பகுதியாக இருந்தனர்.

நார்வே, பிரான்ஸ் மற்றும் மெக்ஸிகோ உட்பட பல குகை முக்குளிப்பு மீட்பு நடவடிக்கைகளில் இவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ரிசார்ட் ஹாரிஸ்

ஆஸ்திரிரேலியாவை சேர்ந்த மருத்துவர் ஹாரிஸ் பல தசாப்த கால முக்குளிப்பு அனுபவம் பெற்றவர்.

குகைக்குள் சிக்கியிருந்த சிறார்களை பரிசோதனை செய்த இவர்தான் மீட்பு நடவடிக்கை தடையின்றி மேற்கொள்ளப்படலாம் என்று பரிந்துரை செய்தவர்.

இந்த சிறார்கள் மிகவும் பலவீனமாக இருந்திருந்தால், முக்குளித்து மீட்கின்ற நடவடிக்கை மிகவும் ஆபத்தானதாக அமைந்திருக்கலாம்.

ஆஸ்திரேலியா, சீனா, கிறிஸ்மஸ் தீவுகள் மற்றும் நியூசிலாந்தில் முக்குளித்து மீட்புதவி நடவடிக்கைகளில் மருத்துவர் ஹாரிஸ் பங்கேற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மயக்க மருந்து நிபுணரான இவர், ஆய்வுப் பயண மருத்துவம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் சிறப்பு பயிற்சி பெற்றவராவார்.

2011ம் ஆண்டு தன்னுடைய நண்பரும், மிகவும் அனுபவம் வாய்ந்த குகைகளில் முக்குளிப்பவரான ஆக்னஸ் மிலோவ்காவின் சடலத்தை இவர் கண்டுபிடித்து மீட்டெடுத்தார்.

தென் ஆஸ்திரேலியாவில் மிகவும் கடினமான ஆய்வுப் பயணத்தின்போது காற்று தீர்ந்துபோய் அவர் காலமானார்.

தாய்லாந்து குகையில் நடைபெற்ற மீட்பு நடவடிக்கையில் இந்த மருத்துவரின் உதவி மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் முக்குளிப்போரால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சமன் குனன்

படத்தின் காப்புரிமை Thai navy seal/Facebook
Image caption மீட்புப் பணியில் உயிரிழந்த பணி ஓய்வு பெற்ற 38 வயதான அதிகாரி சமன் குனன்

தாய்லாந்து கடற்படை முக்குளிப்பவராக இருந்து பணி ஓய்வு பெற்ற 38 வயதான அதிகாரி சமன் குனன், இந்த மீட்புதவி நடவடிக்கைகளில் உதவ தன்னார்வத்துடன் முன்வந்தார்.

ஜூலை 6ம் தேதி ஆக்ஸிஜன் குடுவைகளை விநியோகித்த பின்னர், லுயாங் குகை வளாகத்தில் இருந்து திரும்பி வெளியே வருகையில் அவர் சுயநினைவிழந்தார்.

அவருடன் முக்குளித்து சென்ற சக வீரர் ஒருவர் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. சடலமே குகைக்கு வெளியே கொண்டு வரப்பட்டது.

"அவர் செய்த செயலுக்காக ஹீரோவாக புகழப்படுகிறார். சேரிட்டி பணிகள் மற்றும் காரியங்களை செய்து முடித்தல் மூலம் பிறருக்கு அவர் உதவி வந்தார்" என்று கணவனை இழந்த மனைவி பிபிசியிடம் தெரிவித்தார்.

"குனனின் தியாகத்தை வீணாக போகவிட மாட்டோம்" என்று தளபதி அர்பகோன் யுகுங்க்காவ் குனனின் இறப்பின்போது தெரிவித்தார்.

பென் ரெமெனன்ஸ்

படத்தின் காப்புரிமை FACEBOOK.COM/BEN.REYMENANTS
Image caption ஆளுநர் நொங்கொங்காக் அசோட்டானகோரன் மற்றும் சக முக்குளிப்பவர் மக்சிம் போலேகாவுடன் பென் ரெமெனன்ஸ்

பெல்ஜியத்தை சோந்த பென் ரெமெனன்ஸ், ஃபுகெட்டில் டைவிங் (முக்குளிப்பு) கருவிகளை விற்கின்ற கடையை நடத்தி வருகிறார்.

குகையில் சிக்குண்ட பின்னர் திங்கள்கிழமை முதல்முறையாக இந்த சிறார்களை கண்டறிந்த குழுவில் இவர் இருந்தார் என்று நம்பப்டுகிறது.

க்ளாஸ் ராஸ்முஸென்

தாய்லாந்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற டென்மார்க்கை சேர்ந்த க்ளாஸ் ராஸ்முஸென் முக்குளிப்பதை கற்றுகொடுக்கும் பல பள்ளிகளில் பணிபுரிந்துள்ளார்.

'புளூ லேபல் டைவிங்' என்கிற பென் ரெமெனன்ஸின் நிறுவனத்தில் வழிநடத்துநராக தற்போது அவர் வேலை செய்து வருகிறார்.

ஆசிய நாடுகளில் முக்குளிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அவர், தென் கிழக்கு ஆசியாவிலுள்ள பல நாடுகளிலும் பணிபுரிந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK.COM/MIKKO.PAASI.3
Image caption குகையில் க்ளாஸ் ராஸ்முஸென் இருப்பதை காட்டும் புகைப்படத்தை மிக்கோ பாசி தன்னுடைய ஃபேக்புக்கில் பதிவிட்டார்.

மிக்கோ பாசி

பின்லாந்தை சேர்ந்த மிக்கோ பாசி தாய்லாந்தின் சிறிய தீவான கோக் தாவில் முக்குளிப்பு மையத்தை நிறுவியவர் ஆவார்.

இதன் மூலம் முக்குளிப்பதிலுள்ள தொழில்நுட்பங்கைளை சிறந்த முறையில் கற்றுகொடுத்து வருகிறார்.

இடிபாடுகள் மற்றும் குகை முக்குளிப்பில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

ஜூலை 2ம் தேதி இந்த 13 பேரும் குகைக்குள் பாதுகாப்பாக இருப்பதை கண்டறிந்த அன்று, அவர்களின் மீட்பு முயற்சிகளில் பங்கெடுக்க தன்னுடைய கணவரை விமானம் மூலம் சியாங் ராய்க்கு அனுப்பியதாக மிக்கோவின் மனைவி பேஸ்புக்கில் தெரிவித்தார்.

அன்றைய தினம் அவர்களின் 8வது திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை FACEBOOK.COM/MIKKO.PAASI.3
Image caption குகையில் சிக்கியிருந்தோர் பாதுகாப்பாக வெளிவர உழைத்த பல முக்குளிப்போரில் மிக்கோ பாசி ஒருவராவார்.

இவான் கரத்சிக்

டென்மார்க்கை சேர்ந்த இவான் கரத்சிக், மிக்கோ பாசி குடியேறிய சில ஆண்டுகளுக்கு பின்னர் கோக் தாவ் தீவில் குடியேறினார்.

இப்போது இவர்கள் இருவரும் முக்குளிப்பதை கற்றுகொடுக்கும் மையத்தை இணைந்து நடத்தி வருகின்றனர்.

முக்குளிப்பவர் ஒருவர் மீட்கப்பட்ட முதல் சிறுவனோடு இவரை நெருங்கி வருவதை சற்று தொலைவில் இருந்து பார்த்தபோது, அந்த சிறுவன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்று பயந்ததாக இவான் கரத்சிக் பிபிசியிடம் தெரிவித்தார்.

அந்த சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டதை உணர்ந்த தருணத்தில் அவரது மகிழ்ச்சியை அவர் பகிர்ந்து கொண்டார்.

படத்தின் காப்புரிமை Facebook

மீட்பு பணிகள் தொடங்குவதற்கு முன்னால் குனன் இறந்தபோது, "அமைதியில் இளைபாறுக. நீங்கள் ஒரு ஹீரோ. உங்கள் தியாகத்தை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம்" என்று இவான் கரத்சிக் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

எரிக் பிரவுண்

படத்தின் காப்புரிமை FACEBOOK.COM/MIKKO.PAASI.3
Image caption மீட்பு நடவடிக்கையின் வெற்றியை கொண்டாடும் எரிக் பிரவுண் (இடது), மிக்கோ பாசி (நடுவில்), க்ளாஸ் ராஸ்முஸென் (வலது).

கனடாவை சேர்ந்த எரிக் பிரவுண் வான்கூரை சேர்ந்த தொழில்நுட்ப முக்குளிப்பு வழிநடத்துநராக இருக்கிறார்.

ஒரு தசாப்த காலத்திற்கு முன்னரே முக்குளிக்கும் பணிகளை தொடங்கிய அவர், எகிப்தில் இருக்கும் டைவிங் பற்றிய தொழில்நுட்ப பள்ளியான புளூ இமேர்சன் அணியின் இணை-நிறுவனர் ஆவார்.

தாய்லாந்து குகை மீட்பு நடவடிக்கையின் 9 நாட்களில் 7 முக்குளிப்புகளை மேற்கொண்டுள்ளதாக, செவ்வாய்க்கிழமை இரவு அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். இதன் மூலம் அவர் 63 மணிநேரம் தாம் லுயாங் குகைகளுக்குள் இருந்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :