இந்நகரத்தில் உங்கள் குடும்பம் 1.17 லட்சம் டாலர் சம்பளம் பெற்றாலும் குறைந்த வருமானமே- ஏன்?

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் ஒரு குடும்பம் 117,400 டாலர் சம்பளம் பெற்றாலும், அரசின் கணிப்பின் படி அது 'குறைந்த வருமானமாக' கருதப்படும். அது எப்படி முடியும்?

படத்தின் காப்புரிமை George Rose

ஆறு இலக்க சம்பளம் பெறும் ஊழியர்களும் ஏழைகளாகக் கருதப்படுவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வருமானம் மற்றும் வீட்டு வாடகை செலவை கணக்கிட்டுப் பார்க்கும் போது, சில குடும்பங்களை பொறுத்த வரை இது உண்மைதான் என்று அமெரிக்காவின் வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகின்றன.

சான் பிரான்சிஸ்கோ மற்றும் அருகிலுள்ள சான் மேட்டியோ மற்றும் மரின் கண்ட்ரிஸில் நான்கு பேரை கொண்ட ஒரு குடும்பம் 117,400 டாலர் சம்பளம் பெற்றால் குறைந்த வருமானமாக' கருதப்படுகிறது. 73,300 டாலர் சம்பளம் பெற்றால், 'மிகக்குறைந்த வருமானமாக' கருதப்படுகிறது. அமெரிக்காவை மற்ற பகுதிகளை விட, இங்கே வருமான வரையறை மிக அதிகமாக உள்ளது.

அமெரிக்காவில் வருவாயும் வேலையும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எவ்வாறு வேறுபடுகின்றன என்பது பற்றிய தகவல்கள் ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் `ஹமில்டன் பராஜக்ட்` எனும் ஆய்வை நடத்தியபோது ஆராயப்பட்டது.

சான் பிரான்சிஸ்கோவில் குறைந்த வருமானமாகக் கருதப்படும் 117,400 டாலரை விட, குறைந்த வருமானத்தையே அமெரிக்காவின் மூன்றில் இரண்டு குடும்பங்கள் ஈட்டுகின்றன. அமெரிக்கா முழுவதிலும் நான்கு நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம் 91,000 டாலராகும்.

படத்தின் காப்புரிமை Getty Images

326 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில், 40 மில்லியன் பேர் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். 25,100 டாலர் வருமானம் பெறுபவர்கள் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்பவர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.

வேலை மற்றும் சம்பளத்தை பார்த்தால், சில இடங்களில் அதிகமாகவும் நாட்டின் மற்ற இடங்களில் குறைவாகவும் உள்ளது.

தொழில்நுட்ப துறையின் மையமாக இருக்கும் சான் பிரான்சிஸ்கோ, ஒரு பொருளாதார ஏற்றத்தை அளித்து வருகிறது. நாட்டில் அதிக சம்பளம் பெறும் ஊழியர்கள் வாழும் பகுதியாக சான் பிரான்சிஸ்கோ உள்ளது.

2008 முதல் 2016 ஆண்டு வரை சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் வாழும் 25-64 வயதுடைய ஊழியர்களின் வருமானம் 26% உயர்ந்துள்ளது. இது அமெரிக்காவின் மற்ற பெரு நகரங்களை விட மிக அதிகம். 2016-ல் ஊழியர்களின் சராசரி வருமானம் 63,000 டாலராக உயர்ந்துள்ளது

நிச்சயமாக, அமெரிக்காவின் பிற பகுதிகளிலும் அதிக ஊதியம் பெரும் ஊழியர்கள் வாழ்கின்றனர்.

25-64 வயதுடைய முழுநேர ஊழியர்கள், சேன் ஜோஸ் நகரத்தில் 65,000 டாலரும், வாஷிங்டனில் 60,600 டாலரும், பாஸ்டனில் 55,700 டாலரும் சராசரி வருமானமாகப் பெறுகின்றனர். இப்பகுதிகளில் அதிக வருமானம் தரும் பல வேலைகள் உள்ளன.

சான் பிரான்சிஸ்கோவில் மருத்தவர்களே அதிக சம்பளத்தை பெறுகின்றனர். இங்கு மருத்துவர்கள் 193,400 டாலர் வருமானத்தை எதிர்பார்க்கலாம். மென்பொருள் உருவாக்குபவர்கள் 117,100 டாலர் வருமானத்தையும், ஒரு தலைமை நிர்வாகி 167,300 டாலர் வருமானத்தையும் எதிர்பார்க்கலாம்.

ஆனால், இங்கு பலர் மிகக்குறைந்த வருமானத்தைப் பெறுகின்றனர்.

சான் பிரான்சிஸ்கோவில் பண்ணை தொழிலாளர்களே மிகக்குறைந்த வருமானத்தைப் பெறுகின்றனர். இவர்கள் 18,500 டாலர்கள் வருமானமாகப் பெறுகின்றனர். குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் 22,300 டாலர் வருமானமாகப் பெறுகின்றனர்.

அமெரிக்காவின் மற்ற பெரிய நகரங்களில், ஊதியம் குறைவாக உள்ளது.

டெட்ராய்ட் பகுதியில் ஒரு மருத்துவர் பொதுவாக 144,300 டாலர் சம்பாதிக்கிறார். குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் 15,000 டாலர் வருமானமாகப் பெறுகின்றனர்.

ஊழியர்களின் வருமானத்தில் குறிப்பாக வீட்டு வாடகை உட்பட வாழ்க்கை செலவுகள் முக்கிய பங்காற்றுகின்றன.

அமெரிக்காவின் மற்ற பகுதிகளை விட, சான் பிரான்சிஸ்கோவில் வாழ்க்கை செலவு 25% அதிகமாக உள்ளது.

இருந்தாலும், மற்ற பகுதிகளில் இருக்கும் ஊழியர்களை விட சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் ஊழியர்கள் 45% அதிக சம்பளம் பெறுவதால், இவர்களே முன்னணியில் உள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோவில் 6 இலக்க சம்பளமும், 'குறைந்த வருமானமாக' கருதப்படுவதற்குக் காரணம் அதிக வீட்டு வாடகைகளே.

சான் பிரான்சிஸ்கோவில் இரண்டு அறை கொண்ட வீட்டின் மாத வாடகை 3,121 டாலராகும். 2008-ல் மாத வாடகை 1,592 டாலராக இருந்த நிலையில், தற்போது இரு மடங்கு உயர்ந்துள்ளது. சின்சினாட்டி, ஒஹாயோ பகுதிகளில் வீட்டு வாடகை 845 டாலர் மட்டுமே.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், நல்ல வாழ்க்கைத் தரத்திற்காக பலர் அதிக பணத்தை செலவிட முன்வருவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

சான் பிரான்சிஸ்கோ, வாழ்வதற்கு விலையுயர்ந்த இடமாக இருந்தாலும், நல்ல வானிலை மற்றும் வளமான கலாசார வாழ்க்கை பல குடியிருப்பாளர்களை ஈர்க்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்