உலகக்கோப்பை கால்பந்து இங்கிலாந்தில் குடும்ப வன்முறையை அதிகரிக்கிறதா?

2018 உலகக்கோப்பை தொடங்கியபோது ஒரு மீம் மிகவும் பரவலாக பகிரப்பட்டது. இதுவொரு வேடிக்கையான அல்லது நகைச்சுவையான மீம் அல்ல.

படத்தின் காப்புரிமை Thomas Dowse

1966ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து வெற்றிபெறவில்லை என்கிற உண்மையான ஏக்கத்தை காட்டும் வரைகலை படமும் அல்ல.

குடும்ப வன்கொடுமை பற்றிய புள்ளிவிவரம்தான் இவ்வாறு மிகவும் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டை எல்லாரும் உற்று கவனித்து கொண்டிருந்தபோது, குடும்ப வன்கொடுமை பிரச்சினைக்கு கவன ஈர்ப்பு கொண்டுவருவதற்காக குடும்ப வன்கெொடுமைக்கு எதிரான அறக்கட்டளை ஒன்று இந்தப் புள்ளிவிவரத்தை வெளியிட்டது.

2013ம் ஆண்டு லன்காஸ்டர் பல்கலைகழக ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து இந்தப் புள்ளிவிபரம் எடுக்கப்பட்டிருந்தது.

2002, 2006 மற்றும் 2010 உலகக்கோப்பை போட்டிகளில் (2014க்கு பிந்தைய தரவுகள் இல்லை) இங்கிலாந்து கால்பந்து அணி தோற்ற தினங்களில் ஆங்கிலேய காவல்துறை பிரிவுகளில் ஒன்றான லன்காஸ்டர் பிரிவில் பதிவான குடும்ப வன்முறை வழக்குகள் வழக்கத்தைவிட 38 சதவீதம் அதிகரித்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற அல்லது ஆட்டத்தை சமன் செய்த நாள்களில் குடும்ப வன்கொடுமை 26 சதவீதம் அதிகரித்திருந்தது.

இங்கிலாந்து அணி போட்டியில் விளையாடிய அடுத்த நாளும் குடும்ப வன்கொடுமையில் 11 சதவீதம் அதிகரிப்பு இருந்ததையும் இந்த ஆய்வு கண்டறிந்தது.

இந்த ஆய்வில் ஒரு காவல்துறை பிரிவின் புள்ளிவிவரங்களே எடுத்துகொள்ளப்பட்டாலும், அந்நாட்டிலுள்ள பிற காவல்துறைப் பிரிவுகளும் இந்த உரையாடலில் கலந்து கொண்டு குடும்ப வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொண்டுள்ளன.

கடந்த உலகக் கோப்பை போட்டியின்போது குடும்ப வன்முறையில் அதிகரிப்பு இருந்ததே மக்கள் வன்முறை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டதற்கு காரணமாகும்.

இருப்பினும், பதற்றமானதொரு கால்பந்து போட்டி மட்டுமே குடும்ப வன்கொடுமையை தூண்டுவதில்லை. குடிப்பழக்கம், போதைப்பெருள் மற்றும் சூதாட்டம் ஆகியவை கலந்து உருவாகிற நடத்தைகளாக இவை இருக்கலாம்.

"இவை எல்லாம் குடும்பங்களில் வன்கொடுமை நிகழ செய்யலாம். குறிப்பாக, கால்பந்து ரசிகர் ஒருவர் மது குடித்திருந்தால் அல்லது சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டால் கொடுமை நடைபெறலாம்" என்று பாத்வே பணித்திட்டத்தில் பெண்களின் பணியாளருமான லெயன்டிரா நேஃபின் கூறுகிறார்.

2006/2017ம் ஆண்டில் இங்கிலாந்திலும், வேல்ஸிலும் 16 முதல் 59 வயது வரை 7 லட்சத்து 13 ஆயிரம் ஆண்களும், 12 லட்சம் பெண்களும் என சுமார் 1.9 மில்லியன் வயதுவந்தோர் குடும்ப வன்கொடுமைகளை அனுபவித்துள்ளனர்.

அத்தகைய வன்கொடுமையை அனுபவித்தவர்களில் ஒருவர்தான் பென்னி. அவர் தன்னுடைய காதலரோடு 2 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தபோது, வீட்டில் கொடுமைகளை அனுபவித்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.

தொலைக்காட்சியில் கால்பந்து போட்டி விளையாடப்படும் சத்தம் கேட்கிறபோது, காதலரிடம் இருந்து மிகவும் தொலைவில் இருக்க முயல்வதுதான் அவரது எதிர்வினையாக அமைந்தது.

அவர்கள் ஓர் அறையுடைய குடியிருப்பில் வாழ்ந்ததால், அவ்வாறு தொலைவில் இருப்பது எளிதாக இருக்கவில்லை.

தன்னுடைய காதலருக்கு வேறு நண்பர்கள் இருக்கவில்லை என்று நினைவுகூரும் பென்னி, அவருடைய பொழுதுபோக்கை பகிர்ந்துகொள்ளும் வகையில், உடனிருந்து விளையாட்டை பார்ப்பதை விரும்புவார் என்கிறார்.

அவ்வாறு பென்னி உடனிருக்கும்போது, காதலரின் கால்பந்து அணி (செல்சா) வெற்றியடைய வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அமைதியாக இருப்பாராம். அந்த அணி தோல்வியடைந்து விட்டால் என்ன நிகழும் என்பது அவருக்குத் தெரியும்... உடல் மற்றும் உணர்ச்சி ரீதியாக அவர் அனுபவிக்கும் கொடுமைகள் அதிகரிக்கும் என்கிறார்.

"இதைப் பற்றி திரும்பவும் எண்ணி பார்க்கையில், கால்பந்து என்பது வெறுமனே ஒரு சாக்குப்போக்குதான்," என்று பென்னி குறிப்பிடுகிறார்.

"குளிர்சாதனப் பெட்டியில் பொருட்களை நான் தவறாக வைத்துவிட்டாலும், என் காதலர் என்னிடம் அப்படித்தான் நடந்து கொள்வார்" என்று கூறுகிறார் பென்னி.

பென்னியின் காதலரின் கால்பந்து அணி தோல்வியடைந்துவிட்டால், கொடுமைகள் மிகவும் அதிகமாகும்.

"நான் என்ன சொன்னாலும், என்னோடு சண்டையிட்டு கொண்டு அமைதியாக 4 அல்லது 5 நாட்களுக்கு என்னை முற்றிலும் கண்டுகொள்ளவே மாட்டார். அப்போது இரவு சாப்பாட்டை சமைப்பது போன்ற செயல்களை செய்யும் அவர், அதில் தனக்கு எதுவும் கொடுக்கமாட்டர்" என்று பென்னி தெரிவித்திருக்கிறார்.

'உமன்ஸ் எய்டு' அறக்கட்டளையின் கூற்றுப்படி இது உணர்ச்சி ரீதியிலான கொடுமை. 2015ம் ஆண்டு குற்றமாக மாறிய 'பலவந்த கட்டுப்பாடு' என்ற வரையறையின் கீழ் இந்த கொடுமை வருகிறது.

படத்தின் காப்புரிமை Thomas Dowse

பிறரை கட்டுப்படுத்தி, ஆதிக்கம் செலுத்த கொடுமையாளர் பயன்படுத்தும் உத்தி இதுவாகும்.

பென்னியின் கதையை இவ்வாறான பல நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கலாம்.

ஆனால், பரவலாக பகிரப்பட்ட உலகக்கோப்பை புள்ளிவிவரம் செய்திருப்பது, இந்த அழகான விளையாட்டுக்கும், இத்தகைய வன்கொடுமைகளுக்கு இடையிலான தொடர்பை குறித்துகாட்டியிருப்பது மட்டுமல்ல. குடும்ப வன்கொடுமையின் சிக்கலான பிரச்சனையை அதிக விரிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

"உணர்ச்சி, பெருமை, வலுவான இளைஞரின் கலாசாரம் அனைத்தும் கலந்ததுதான் கால்பந்து விளையாட்டு" என்கிறார் லெயன்டிரா.

இந்த நிலைமையில் இளம் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படலாம்.

குடும்ப வன்கொடுமையை அனுபவித்துள்ளதாக கூறும் அளவுக்கு வயதுவந்தவர்களாக இருக்கிறபோதிலும், 16 முதல் 19 வயதுக்குள்ளான பெண்கள் இந்தப் பிரச்சனைக்கு உள்ளாகும்போது, அடைக்கலம் தேடுவது அல்லது சமூகத்தின் பாரம்பரிய உதவிகளை நாடுவது மிகவும் குறைவாகும்.

இணைய சேவைகளை எளிதாக பெற்றுகொள்வோராக இருப்பதால் இவ்வாறு இருக்கலாம்.

படத்தின் காப்புரிமை Thomas Dowse

17 வயதான இளம் பெண் தன்னுடைய 21 வயதான ஆண் நண்பருடன் சுற்றுலாவுக்கு சென்ற சம்பவம் தமக்குத் தெரியும் என்று லெயன்டிரா என்பவர் கூறுகிறார்.

"அவர்கள் இங்கிலாந்து ஆடிய கால்பந்து போட்டி ஒன்றை பார்த்து ரசித்தார்கள். இந்த அணி தோல்வியடைந்துவிட்டது. அன்று மாலை, காதலர் உடல் ரீதியாக கொடுமைப்படுத்தியதால், இளம் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதாயிற்று" என்று அவர் தெரிவிக்கிறார்,

இதுபோல காதலரின் கால்பந்து அணி போடுகின்ற ஒவ்வொரு கோலும் பென்னிக்கு நிவாரணமாக அமையும். சிவப்பு அட்டை கொடுத்து வீரர் வெளியேற்றப்படுவதும், கோல் அடிக்கும் வாய்ப்பை தவற விடுவதும் கொடுமைகளை அனுபவிக்க செய்யும் தொடக்கமாகிவிடும்.

செல்சியா அணி விளையாடாதபோது, தன்னுடைய காதலர் ஆத்திரத்தை காட்டுவதற்கு பிற வழிமுறைகளை கையாள்வார் என்று பெற்றி தெரிவிக்கிறார்.

வேலையில் இருந்து வீட்டுக்கு வருகிறபோது, சமையலறை கத்திகள் எல்லாம் பக்கத்தில் இருக்கும் அல்லது கண்ணாடியில் கேலி வசனங்கள் எழுதப்பட்டிருக்குமாம்.

அதோடு முடிந்துவிடவில்லை. வேலையில் இருந்து திரும்பி வருகிறபோது அல்லது இரவு வெளியே சென்றுவிட்டு வருகிறபோது, எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டிருக்கும். வீடு முழுவதும் இருளாக இருக்கும். ஆனால் அவரது காதலர் அங்கு ஒளிந்து, மறைந்து இருப்பாராம்.

படத்தின் காப்புரிமை Thomas Dowse

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணியின் நிலை எவ்வாறு சிலரை எதிர்மறையாக பாதிக்கிறது என்பதை எண்ணி பார்க்க இந்த விரிவான உரையாடல் உதவுகிறது.

ஆனால், கால்பந்து விளையாட்டும், மதுப்பழக்கமும்தான் குடும்ப வன்கொடுமைக்கான காரணங்கள் என்று எண்ணிவிடக் கூடாது என்று பென்னி வாதிடுகிறார்.

எல்லா குடும்ப வன்கொடுமைகளும் குடிப்பழக்கத்தால் ஏற்படும் வன்முறை அல்லது 'ஆண் கலாசாரம்' என்று எளிதாக இனங்காணக் கூடாது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கால்பந்துதான் குடும்ப வன்கொடுமைக்கு ஆணிவேர் என்று குறிப்பிட்டு காட்டுவது, எதற்கும் உதவப்போவதில்லை. தவறாகவே வழிநடத்தும் என்று 'ரிஃபுஜ்' அறக்கட்டளையின் குடும்ப வன்கொடுமைக்கான தலைமை செயலதிகாரி சன்டிரா ஹோர்லே தெரிவிக்கிறார்.

குடும்ப வன்கொடுமைக்கு மதுவையும், விளையாட்டையும் அல்லது இவை இரண்டையும் காரணமாக காட்டுவது, கொடுமை செய்வோரை இந்த செயல்பாட்டில் இருந்து விலக்கி வைக்கிறது மற்றும் அவர்களின் செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்பதை தடுக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.

கால்பந்து, குடிப்பழக்கம், போதை மருந்து அல்லது சூதாட்டம் ஆகியவை குடும்ப வன்முறைக்கு காரணங்கள் அல்ல. வெறும் சாக்குப்போக்கு மட்டுமே என்று சான்டிரா மேலும் கூறுகிறார்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் முடிந்த பின்னரும், ஒவ்வொரு நாளும் தங்களின் காதலர்களால் வன்முறையையும், கொடுமைகளையும் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.

தொலைக்காட்சியில் கால்பந்து போட்டிகளை பார்க்கும்போது மட்டுமே இது நடைபெறுவதில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்,

இதனை பென்னி ஒப்புக்கொள்கிறார். இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளை அவர் மகிழ்சியாக பார்த்தபோது, சில நடத்தைகள் குடும்ப வன்கொடுமைகளுக்கு தூண்டுதலாக வருவதை அவர் கண்டுள்ளார்.

மது குடித்திருக்கும்போது, அல்லது முரடனாக இருக்கும்போது மற்றும் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டால், குடும்ப வன்கொடுமைகள் எளிதாக நிகழ்வதை மக்கள் மனதில் கொள்ள வேண்டியது முக்கியமானது என்று பென்னி குறிப்பிடுகிறார்.

ஒரு புள்ளிவிபரம் இவ்வளவு பெரிய விழிப்புணர்வை உருவாக்கியிருப்பதால் பென்னி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இது மிகவும் நல்ல விடயம். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும்போது அதிக மக்கள் காவல்துறையினரை தொலைபேசியில் அழைப்பதை நீங்கள் பார்த்தால், குடும்ப வன்கொடுமை மிகவும் அதிகமாகிறது என்று எண்ண மறந்து விடாதீர்கள். இவ்வாறு சொல்வதன் மூலம், முன்னால் இந்தப் பிரச்சனை நிலவவில்லை அல்லது கால்பந்து போட்டிகள் முடிந்த பின்னர் இவை நிகழாது என்று பொருளில்லை என்று பென்னி கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :