நேட்டோ பாதுகாப்பு செலவினம்: டிரம்ப் பாராட்டும், சந்தேகங்களும்

ராணுவ செலவுக்கு மேலதிகமாக 33 பில்லியன் டாலர் செலவழிக்க ஒப்புக்கொண்ட நேட்டோ கூட்டணி நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டியுள்ளார்.

நேட்டோ நாடுகளின் தலைவலர்கள்

பட மூலாதாரம், Reuters

ஆனால், வழங்கப்பட்டுள்ள இந்த வாக்குறுதியின் உறுதிப்பாடு பற்றிய சந்தேகம் உடனடியாக எழுந்துள்ளது.

பாதுகாப்பிற்கு சிக்கனமாக செலவழிக்கும் நாடாக இருப்பதால் வெட்கப்படுவதாக தெரிவித்திருந்த ஜெர்மனியை புகழ்ந்தும், இராணுவ செலவு பற்றி ஒரு திட்டமிடப்படாத கூடுதல் அமர்வில் கிடைத்த உத்தரவாதத்தால் மகிழ்ச்சியடைவதாகவும் பிரசல்ஸில் செய்தியாளர் கூட்டத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மனம் திறந்த, வெளிப்படையான உரையாடல் நோட்டா நாடுகளை வலுவாக்கியுள்ளதோடு, அவசர செயல்பாட்டுக்கான புதிய உணர்வை வழங்கியுள்ளதாகவும் நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் கூறியுள்ளார்.

ஆனால், ஏற்கெனவே ஒப்புக்கொண்டதைவிட அதிகமாக செலவு செய்ய எந்த வாக்குறுதியும் தான் வழங்கவில்லை என்று இத்தாலி பிரதமர் ஜூசெப்பே கோன்டே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஊடகமான சி.என்.என்.னிடம் பேசும்போது தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்புச் செலவினத்துக்கு ஒதுக்க நேட்டோ நாடுகள் ஒப்புக்கொண்டதாக ஸ்டோல்டன்பர்க் தெரிவித்தார். ஆனால், நான்காண்டுகளுக்கு முன்பு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இந்த இலக்கை 2024ல் எட்டுவதாக நேட்டோ நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

பிரசல்ஸில் நடந்துவரும் நேட்டோ உச்சி மாநாட்டில் பேசிய பேசிய டிரம்ப் பாதுகாப்பு செலவினத்தில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகப் பாராட்டினார்.

இந்தக் கூட்டணி குறித்து முன்பு கடுமையாக விமர்சித்துவந்தார் டிரம்ப். மற்ற உறுப்பு நாடுகளை விட அமெரிக்காவே அதிகம் பாதுகாப்புக்கு செலவிடவேண்டியிருக்கிறது என்பது அவரது முந்தைய விமர்சனத்துக்குக் காரணமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :