வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் எழுதிய கடிதத்தை புகழ்ந்த டிரம்ப்

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் தற்போது எடுத்து வரும் முயற்சிகள் புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்புவதாக வடகொரியா தலைவர் அதிபர் கிம் ஜாங்-உன் அமெரிக்க அதிபருக்கு எழுதிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் டிரம்ப்.

படத்தின் காப்புரிமை NurPhoto

கிம் எழுதிய கடிதத்தை (ஜூலை ஆறு தேதியிட்டது) வெளியிட்டுள்ள டிரம்ப் ''மிகவும் அருமையான குறிப்பு இது '' எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த வரலாற்று உச்சிமாநாட்டில் இரு நாட்டுத்தலைவர்களும் விவாதித்தவற்றில் அடிப்படை விஷயமான, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத நீக்கம் செய்வதற்கு பியாங்கியாங் எந்த வித முயற்சியில் ஈடுபடுகிறது என்பது குறித்து எந்தவொரு குறிப்பும் அக்கடிதத்தில் இல்லை.

இன்னொருபுறம், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்கள் மீதான அமெரிக்காவின் தடையை வடகொரியா மீறுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. 89 வடகொரியா எண்ணெய் கப்பல்கள் வாயிலாக கடலில் ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பல் வழியாக எண்ணெய் பொருட்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக அமெரிக்க கூறியுள்ளது. எந்தெந்த நாடுகள் வடகொரியாவுக்கு சட்டவிரோதமாக பொருட்களை வழங்குகிறது என அமெரிக்கா கூறவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் வடகொரியாவுக்கு ஒரு வருடத்துக்கு ஏற்றுமதி செய்யும் எண்ணெய் அளவை 5 லட்சம் பீப்பாய் அளவாக குறைத்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

வியாழக்கிழமை நடந்த இருதரப்புக்கும் இடையிலான இன்னொரு முன்னேற்றத்துக்கான முயற்சியில் 1950-53 கொரிய போரில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களை தவிர எஞ்சிய அமெரிக்க வீரர்களை அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்புவது குறித்து அமெரிக்க குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்த வடகொரிய அதிகாரிகள் தவறிவிட்டனர்.

கிம்மின் கடிதத்தில் இருப்பது என்ன?

நான்கு பத்தி கொண்டிருக்கும் அந்த கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆவணத்தை அதிபர் டிரம்ப் வியாழக்கிழமையன்று வெளியிட்டுள்ளார்.

'' மாண்புமிகு அதிபரின் ஆற்றல்மிகுந்த மற்றும் அசாதாரண முயற்சியை நான் மிகவும் பாராட்டுகிறேன்'' என அக்கடிதத்தில் வடகொரிய தலைவர் கிம் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பு நம்பிக்கையானது நடைமுறைக்குரிய செயல்பாடுகளை எடுப்பதற்கான எதிர்கால செயல்முறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

''இரு தரப்பு உறவுகளை ஊக்குவிப்பதில் புதியதொரு சகாப்தத்துக்கான தொடக்க செயல்முறையானது, நம்முடைய அடுத்த சந்திப்பை முன்னெடுத்துச் செல்லும்'' என கிம் கூறியுள்ளார்.

இக்கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்ட டிரம்ப் '' பெரிய முன்னேற்றம் நடந்துகொண்டிருக்கிறது'' என குறிப்பிட்டார். ஆனால் மேலும் விவரிக்கவில்லை.

ஜூன் 12 அன்று நடந்த சிங்கப்பூர் உச்சிமாநாட்டில் டிரம்ப் மற்றும் கிம் இடையே கையெழுத்தான ஆவணத்தில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத நீக்கம் செய்வது குறித்து வடகொரியா உறுதிமொழி அளித்திருந்தது. அதற்கு பதிலாக, தென் கொரியாவில் ராணுவ பயிற்சிகளை செய்வதை நிறுத்துவதாக வாஷிங்டன் ஒப்புக்கொண்டது.

எப்படியிருந்தாலும், வடகொரியா ஆணு ஆயுத ஒழிப்பு குறித்த அதன் பொறுப்பில் ஈடுபடுவதை உறுதிசெய்ய டிரம்ப் தவறிவிட்டதாக விமர்சகர்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

அணு ஆயுத ஒழிப்பை நோக்கித் தள்ளுவதில் அமெரிக்கா ஒரு தாதா போல தந்திரங்களை கையாள்வதாக வடகொரியா கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தது.

அமெரிக்க படை வீரர்கள் உடல் ஒப்படைப்பு குறித்து திட்டமிடப்பட்ட சந்திப்பு என்ன ஆனது?

வியாழக்கிழமையன்று கொரிய சமாதான கிராமமான பன்முன்ஜோமில் இந்த சந்திப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

வடகொரியா மற்றும் அமெரிக்க குழுவினர் மற்றும் ஐநா அதிகாரிகள் இந்த மீள்குடியேற்ற விவரங்கள் குறித்து விவாதிக்கவிருக்கிறார்கள்.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சுமார் 200 அமெரிக்க படை வீரர்கள் உடல்களை உடனடியாக அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஜூனில் நடந்த உச்சிமாநாட்டில் கிம் ஒப்புக்கொண்டார்.

கொரிய நாடுகளுக்கு இடையேயான எல்லையில் நூறு சவப்பெட்டிகள் தயாராக இருப்பதாக அமெரிக்க ராணுவம் அறிவித்திருக்கிறது.

ஆனால், அமெரிக்க ஜெனெரல் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் வகையில் இருக்க வேண்டும் என வடகொரியா ஐநா போர் நிறுத்த ஆணையத்திடம் கூறியதாக தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 15 அன்று சந்திக்கலாம் என வடகொரியா கூறியதாக பின்னர் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் கூறுகையில் ''நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

கொரிய போரில் முப்பதாயிரம் அமெரிக்க படைவீரர்கள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போரில் 7,700 அமெரிக்க வீரர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

1996 மற்றும் 2005-க்கு இடையில் சுமார் 33 மீட்பு நடவடிக்கைகள் வடகொரியாவால் எடுக்கப்பட்டது. அதில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அணுசக்தி திட்டம் குறித்த இரண்டு நாடுகளுக்கும் இடையே உறவு மோசமானபோது வடகொரியா உடல்களை மீட்கும் நடவடிக்கைகளை நிறுத்தியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :