தெரிசாவின் பிரெக்ஸிட் திட்டத்தால் பிரிட்டன்-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தங்கள் முறியலாம்: டிரம்ப்

  • 13 ஜூலை 2018

பிரிட்டன் பிரதமரின் தற்போதைய பிரெக்ஸிட் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் ஒருவேளை முறிந்துவிடும். அதாவது அமெரிக்கா பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள நேரிடும் என தி சன் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் டொனால்டு டிரம்ப்.

படத்தின் காப்புரிமை WILL OLIVER

பிரிட்டன் பிரதமர் அலுவலகம் டிரம்பின் கருத்துக்கு இதுவரை எதிர்வினையாற்றவில்லை.

அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரிட்டன் சென்றுள்ளார். தெரீசா மே அமெரிக்காவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள முனைப்போடு இருக்கிறார். அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு வளர்ச்சியை உருவாக்க பிரெக்ஸிட் ஒரு சிறந்த வாய்ப்பு என மே குறிப்பிடுகிறார்.

அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினாவுக்கு வியாழக்கிழமை மாலை பிளென்ஹீம் அரண்மனையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிபர் டிரம்ப் நாளிதழுக்கு கொடுத்த நேர்காணல் பெல்ஜியத் தலைநகர் பிரெஸெல்ஸில் இருந்தபோது எடுக்கப்பட்டது.

முன்னாள் வெளியுறவுச் செயலாளர் போரிஸ் ஜான்சன் பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரதமர் தெரீசா மே-வுடன் கருத்து மாறுபாடு கொண்டு பதவி விலகினார். அவர் பிரதமரானால் சிறப்பாகச் செயல்படுவார் என்று தமது பேட்டியில் புகழந்திருந்தார் டிரம்ப்.

இந்த பேட்டி வெளியிடப்பட்ட பிறகு வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் '' அதிபர் டிரம்ப் பிரதமர் தெரீசா மேவை மிகவும் மதிக்கிறார். அவர் பிரதமரைப் பற்றி தவறாக எதுவும் கூறவில்லை'' என்றார்.

பிரெக்ஸிட்டின் நீண்டகால ஆதரவாளரான டிரம்ப் தி சன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய உறவு குறித்த பிரிட்டனின் செயல் திட்டமானது மக்கள் வாக்களித்ததற்கு முற்றிலும் மாறான ஒப்பந்தத்தை கொண்டிருக்கிறது . பிரதமர் மேவின் இந்த முன்மொழிவு அமெரிக்காவுடனான மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்த உறவை முடிவுக்கு கொண்டுவரக்கூடும்''

படத்தின் காப்புரிமை Reuters

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நிறைய சிரமங்கள் எங்களுக்கு உள்ளன. அவர்கள் வர்த்தகத்தை பொறுத்தவரையில் அமெரிக்காவை நேர்மையாக நடத்தவில்லை'' என்றார் டிரம்ப்.

எப்படி பிரெக்ஸிட் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என நான் தெரீஸாவுக்குச் சொன்னேன். அவர் அதை ஏற்கவில்லை. நான் சொன்னதை கேட்கவில்லை. அவர் வித்தியாசமான வழியில் செல்ல விரும்புகிறார்'' என பேட்டியளித்துள்ளார் டிரம்ப்.

''டிரம்ப் பிரிட்டனுக்கு வருவதற்கு முன்னர் பேட்டியளித்த விடயம் இது. தற்போது அந்நிலை கடந்துவிட்டது. பிளென்ஹீம் அரண்மனை இரவு உணவு விருந்து சிறப்பாக, நேர்மறையாக இருந்தது . அங்கே வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது'' என்கிறார் வெளியுறவு அமைச்சர் சர் ஆலன் டங்கன்.

''அரசு டிரம்ப்பின் நடத்தையை மூர்க்கமானதாக பார்க்கவில்லை. டொனால்டு டிரம்ப் சர்சைக்குரியவர் . அதுதான் அவரது பாணி'' என்கிறார் சர் ஆலன்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான நீண்டகால உறவுக்கான முன்மொழிவை பிரிட்டன் அரசு வெளியிட்ட அதே தினத்தில் டிரம்பின் இக்கருத்து வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :