பாகிஸ்தான்: சிறையில் கால் பதிக்க நாடு திரும்பும் நவாஸ் ஷெரீஃப்

சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெளிநாட்டில் இருந்து தண்டனையை எதிர்கொள்வதற்காகவே பாகிஸ்தான் திரும்புகிறார்.

நவாஸ் ஷெரீஃப்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் திரும்புவதை முன்னிட்டு லாகூரில் கூடிய அவரது ஆதரவாளர்கள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு ஊழல் வழக்கு ஒன்றில் அண்மையில் பாகிஸ்தான் நீதிமன்றம் பத்து ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நிலையில், வெளிநாட்டில் தற்போது இருக்கும் அவர் வெள்ளிக்கிழமை தாயகம் திரும்புகிறார்.

லண்டன் சொகுசு குடியிருப்பு வளாகம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் நவாஸ் இருவரும் ஊழல் குற்றவாளிகள் என்று பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நவாஸ் ஷெரீஃப்புக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம், மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இருபது லட்சம் பவுண்ட் (ஒன்றே முக்கால் கோடி இந்திய ரூபாய்) அபராதமும் விதித்துள்ளது.

அத்துடன் மரியம் இனி தேர்தலில் போட்டியிட முடியாது. மரியம் நவாசின் கணவர் கேப்டன் சஃப்தர் அவன் என்பவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 25 அன்று பாகிஸ்தானில் தேர்தல்கள் நடக்கும் நிலையில் இந்த தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்று நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், PMLN

மூன்று முறை பிரதமர் பதவியிலிருந்த நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தானின் சக்திவாய்ந்த ராணுவத்துறை தனக்கு எதிராக சதி செய்வதாக நவாஸ் ஷெரீஃப் குற்றம் சாட்டினார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முறைகேடாக சொத்து சேர்த்ததை உறுதி செய்ததால், கடந்த ஆண்டு ஜூலை 28ல் நவாஸ் ஷெரீஃபை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.

லண்டனில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆதரவாளர்களை புதன்கிழமையன்று சந்தித்தபோது, "அரசுக்குள் ஓர் அரசு என்று நாம் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது அரசுக்கு மேல் ஓர் அரசு இருக்கிறது" என்று கூறியிருந்தார் நவாஸ்.

அவர் வெளியிட்ட வீடியோ செய்தியில், `விமானநிலையத்தில் இருந்து நான் நேரடியாக சிறைக்கு அழைத்துச் செல்லப்படலாம்` என்பது தனக்குத் தெரியும் என்று அவர் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீஃப் வந்து இறங்கும்போது அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் வந்து கூடுவதை தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் பெருமளவில் வரவேண்டும் என்று நவாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து வியாழன்னறு லாகூரில் கூடிய பி.எம்.எல்-என் கட்சியின் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

நவாஸ் ஷெரீஃப் நாடு திரும்புவது ஏன்?

தேர்தல்கள் எதிர்வரவிருக்கும் நிலையில் "நெருக்கடியான சூழ்நிலையில்" இருக்கும் பாகிஸ்தான் மக்களுக்காக தான் நாடு திரும்புவதாக நவாஸ் ஷெரீஃப் கூறுகிறார்.

ஆனால், பாகிஸ்தான் நீதிமன்றத்தால் பத்து ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், தேசிய பொறுப்புணர்வு அமைப்பில் (நேஷனல் அக்கவுண்டபிளிட்டி பீரோ) சரணடைந்தால்தான் அவர் பிணை வாங்கமுடியும் என இஸ்லாமாபாதில் இருந்து பிபிசி செய்தியாளர் இல்யாஸ் கான் கூறுகிறார்.

எட்டிஹாட் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டனில் இருந்து அபுதாபி வழியாக நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவாஸ் ஷெரீஃப் ராணுவத்தை ஏன் குறை கூறுகிறார்?

67 வயதான நவாஸ் ஷெரீஃப் கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். அதிக மக்கள் தொகை கொண்ட, தேர்தலில் முக்கியத்துவம் பெற்ற பஞ்சாப் மாகாணத்தில் ஷெரீஃப் பிரபலமானவர்.

நவாஸுக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் பின்னணியில் ராணுவம் இருப்பதாக அவரும், அவரது கட்சியினரும் குற்றம் சாட்டுகின்றனர். ராணுவத்தின் பாதுகாப்பு நிலைமையை விமர்சித்ததும், இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்தும் தங்களது கட்சியின் கொள்கைகளுமே, ராணுவம் தங்கள் கட்சியை குறி வைப்பதற்கு காரணம் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி குற்றம் சாட்டுகிறது.

பட மூலாதாரம், SS MIRZA/AFP/GETTY IMAGES

படக்குறிப்பு,

பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ராஹில் ஷெரீஃப் மற்றும் நவாஸ் ஷெரீஃப்

கடந்த மே மாதம் 'டான்' பத்திரிகை நவாஸ் ஷெரீஃபை பேட்டிக் கண்டது. அதில், 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை கடந்து மும்பைக்கு சென்று 150 பேரை கொன்றதை அனுமதித்தது பற்றி அவர் கேள்வி எழுப்பினார்.

பாகிஸ்தானின் 70 ஆண்டு கால வரலாற்றில் பாதி காலத்திற்கு மேல் நாட்டை ஆட்சி புரிந்திருக்கும் பாகிஸ்தான் ராணுவம், தேர்தலிலோ அல்லது அரசியல் நடவடிக்கைகளிலோ தங்களுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்று மறுப்பு வெளியிட்டுள்ளது.

சிறை செல்லும் நவாஸ் ஷெரீஃப்

இஸ்லாமாபாதில் இருந்து பிபிசி செய்தியாளர் இல்யாஸ் கான்.

1999ஆம் ஆண்டு ராணுவத்தால் ஆட்சிக் கவிழ்க்கப்பட்ட பிறகு நவாஸ் ஷெரீஃப்புக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. செளதி அரேபியா முன்னெடுத்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, மன்னிப்பு கோரி நாட்டில் இருந்து வெளியேற ஒப்புக் கொண்டார் அவர்.

பாகிஸ்தானில் அரசியல்வாதியாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; அதை, பணக்கார தந்தையின் செல்ல மகனான, மென்மையான சுபாவம் கொண்ட நவாஸ் ஷெரீஃப்பால் முடியாது என்று அப்போது நினைத்தேன்.

ஆனால் இந்த முறை, ஆனால், அவர் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டும் வகையில் அவரது செயல்பாடுகள் இருக்கின்றன; இந்த முறை அவர் சிறைக்கு செல்கிறார்.

ஷெரீஃபின் கட்சி எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக ராணுவம் போதுமான ஏற்பாடுகளை செய்துவிட்டதாக பலரும் நம்புகின்றனர். எனவே தேர்தலுக்குப் பிறகு நவாஸ் ஷெரீஃப் பெரிய அளவிலான எதிர்ப்புக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.

பட மூலாதாரம், ARIF ALI

படக்குறிப்பு,

நவாஸ் ஷெரிஃப்பின் மனைவி மற்றும் மகள்

இதனால் நவாஸ் ஷெரீஃப் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய அளவிலான இழப்புகளை சந்திக்க நேரலாம். புற்று நோயால் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் மனைவி குல்சூமை மீண்டும் சந்திக்க முடியுமா என்ற கேள்வியுடன் தான் தற்போது நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் திரும்புகிறார்.

பாகிஸ்தான் பொதுத் தேர்தல்

  • பாகிஸ்தானில் 342 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.
  • பாகிஸ்தானின் பிரதான கட்சிகளான நவாஸ் ஷெரீஃப்பின் பி.எம்.எல்-என், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பி.டி.ஐ மற்றும் பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் பி.பி.பி கட்சியும் தேர்தலில் போட்டியிடுகின்றன.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, முறையாக தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படும் அரசிடம் ஆட்சியை ஒப்படைப்பது பாகிஸ்தான் வரலாற்றில் இது இரண்டாவது முறையாக இருக்கும்.
  • அரசியல் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் வாக்காளர்கள் என அனைத்து தரப்பினரையும், சக்தி வாய்ந்த பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்படுத்துவதாக ராணுவத்தை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.
  • தேர்தல் "சுதந்திரமாகவும், நியாயமாகவும்" நடைபெறுவதை உறுதிப்படுத்த, 3,71,000 க்கும் அதிகமான துருப்புகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: