அமெரிக்க தேர்தல்: இமெயில் ஹேக் செய்ததாக 12 ரஷ்ய உளவு பிரிவினர் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடுவதற்காக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினரின் இமெயில்களை ஹேக் செய்ததாக 12 ரஷ்ய உளவுப் பிரிவினர் மீது அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ரோட் ரோசன்ஸ்டெயின் குற்றம்சாட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை CBS

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சிப் பிரமுகர்களின் இமெயில்களை திறந்து பார்ப்பதற்காக, அவர்களுக்கு பாஸ்வேர்டு திருடும் பிஷ்ஷிங் இமெயில்களை ரஷ்ய உளவுத்துறையினர் அனுப்பியதாகவும் வைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

2016 அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ராபர்ட் முல்லர் விசாரித்து வருகிறார். இந்த விசாரணையில் ஏற்கனவே 20 நபர்களின் மீதும், மூன்று நிறுவனங்களின் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ராபர்ட் முல்லர்

அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டனுக்காக பிரசாரம் செய்த அவரது கட்சித் தொண்டர்கள் மற்றும் ஊழியர்களின் மின்னஞ்சல் கணக்குகளில் இணைய தாக்குதல்களைத் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் தொடங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சதித்திட்டம் நடைபெற்றபோது அவர்கள் பல அமெரிக்கர்களை தொடர்பு கொண்டதாக கூறிய ரோஸன்ஸ்டெயின், ஆனால் எந்த அமெரிக்க குடிமக்கள் மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை என்று கூறினார்.

ரஷ்ய உளவுத்துறைக்கு இவர்கள் இரு பிரிவாக பிரிந்து பணியாற்றியதாக ரோசன்ஸ்டெயின் தெரிவித்தார்.

"குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரகசியமாக கணினிகளை கண்காணித்ததுடன், தீங்கிழைக்கும் குறியீடு கொண்ட நூற்றுக்கணக்கான கோப்புகளை கணினிக்குள் செலுத்தி, மின்னஞ்சல்கள் மற்றும் பிற ஆவணங்களை திருடினார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: