2014 காஸா போருக்கு பிறகு ஹமாஸ் மீது ’மிகப்பெரிய தாக்குதல்’ - இஸ்ரேல் பிரதமர்

2014ஆம் வருட போருக்கு பிறகு, காஸாவில் ஹமாஸ் தீவிரவாத குழுவுக்கு சொந்தமான இடங்கள் மீது இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை தொடுத்துள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.

காஸா

இந்த தாக்குதல், இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி என தெரிவித்த அவர் தேவைப்பட்டால் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் கூறினார். ஆனால் பாலத்தீனியர்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புகொண்டதாக தெரிவிக்கின்றனர்.

காஸா நகரில் நடைபெற்ற வான் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர் என பாலத்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏவப்பட்ட 90க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளில் ஒன்று தாக்கியதில் இஸ்ரேலை சேர்ந்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

ஹமாஸின், பெய்ட் லஹியாவில் உள்ள பட்டாலியன் தலைநகர், வடக்கு காஸாவில் உள்ள பயிற்சி முகாம், ஆயுத சேமிப்பு இடங்கள் மற்றும் ராக்கெட் லான்சர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புத் துறை அமைச்சர், தலைமை அதிகாரி, நாட்டின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி, ஆகியோருடன் கலந்து ஆலோசித்ததில் ஹமாஸ் பயங்கரவாதம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நேதன்யாஹு வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

"ஹமாஸ் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது, தேவைப்பட்டால் அது மேலும் கடுமையாக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஒப்புகொள்ளப்பட்டதாகவும், எகிப்து மற்றும் சர்வதேச நாடுகளின் முயற்சிகளுக்கு நன்றி என்றும் பாலத்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இஸ்ரேல் இந்த அறிக்கை குறித்து எந்தவித பதில் கருத்தும் தெரிவிக்கவில்லை.

காஸா நகரில் ஆளில்லா கட்டடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த பாதையை கடந்து சென்று கொண்டிருந்தவர்கள் கொல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் ராயடர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

வெள்ளியன்று எல்லையில் நடைபெற்ற போராட்டத்தின் போது இஸ்ரேல் படைகள் சுட்டத்தில் பாலத்தீனியர் ஒருவர் பலியானதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

காஸாவிலிருந்து டஜன் கணக்கான ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன.

ஸ்டராட் நகரில் உள்ள ஒரு வீட்டின் மீது ராக்கெட் ஏவப்பட்டதில், மூன்று பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சமீப மாதங்களில், அந்த பிராந்தியத்தில் எழுந்துள்ள வன்முறைக்கு மத்தியில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

எல்லை பகுதியில், தற்போது இஸ்ரேலாக இருக்கும் பகுதியில் உள்ள தங்கள் மூதாதையர் இல்லங்களுக்கு செல்வதற்கான பாலத்தீனியர்களின் உரிமைகளுக்காக ஆயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் எல்லை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளால் காஸாவிற்கு செல்வதற்கான பாதை அடைக்கப்பட்டுள்ளதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் கோரினர்.

இஸ்ரேல் மற்றும் எகிப்து இந்த தடை, தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கை என தெரிவித்துள்ளன.

போராட்டங்களின் போது 130 பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்றும், 15,000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்றும் காஸாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸா மற்றும் வெஸ்ட் பேங் ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட ஒரு பாலத்தீனியத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக கடந்த வருடம் ஹமாஸ் தெரிவித்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :