உலகப்பார்வை: "வேலை செய்யவில்லை என்றால் உதையுங்கள்" - அதிபர் ஜான் மாகூஃபூலி

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

"வேலை செய்யவில்லை என்றால் உதையுங்கள்"

டன்சானியாவின் அதிபர் ஜான் மாகூஃபூலி, சிறைக்கைதிகள் நீண்ட நேரம் பணிபுரிய வேண்டும், அவர்கள் சோம்பேறித்தனமாக இருந்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிபரின் இந்த கருத்துக்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்துள்ளன மேலும் சகிப்புத்தன்மையற்று அவர் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளன.

சிறைக்கைதிகள் தங்களுக்கு வேண்டிய உணவை தாங்களே பயிரிட்டு கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"சிறைக்கைதிகளுக்கு தொடர்ந்து உணவு வழங்குவது நாட்டிற்கு அவமானம் எனவே அவர்களுக்கு தேவையான உணவுகளை அவர்களே பயிரிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

"சிறை ஊழியர்கள் சிலருக்கு வீடில்லை. சிறைக்கைதிகளை வேலை வாங்குங்கள், அவர்கள் இரவும், பகலும் செங்கல்களை உருவாக்கட்டும். அவர்கள் சோம்பேறித்தனமாக இருந்தால். உதையுங்கள், உங்களுக்கு இலவசமாக பணியாட்கள் இருக்கிறார்கள்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கியூபாவில் உருவாகிறது புதிய அரசமைப்பு சட்டம்

பல தொலைநோக்கு சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்படும் கியூபாவின் புதிய அரசமைப்பு சட்டத்தில், தனியார் நிலங்களை முதல் முறையாக சட்டரீதியாக அங்கீகரிக்கும் முடிவு இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

பிடல் காஸ்ட்ரோ கடந்த 1959ஆம் ஆண்டு பதவிக்கு வந்தவுடன் தனியார் நிலங்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் தடைவிதித்தார். ஆனால், கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின் மூலம் அத்திட்டம் முடிவுக்கு வந்தது.

உரையாடலை வெளியிட்ட டிரம்ப்

பிரிட்டிஷ் அரசி எலிசபெத்துடன் நடைபெற்ற தனிப்பட்ட உரையாடலின் ஒரு பகுதியை அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டன் செய்தித்தாள் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது ஒரு சிக்கலான நடைமுறை என அரசி குறிப்பிட்டுதாக டிரம்ப் தெரிவித்தார் என்று ஞாயிறன்று வெளியான மெயில் செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அதற்குமேல் எந்த ஒரு கேள்விக்கும் டிரம்ப் பதிலளிக்கவில்லை அரசியுடன் நடந்த உரையாடல் குறித்த எந்த கேள்வியும் எழுப்பாதீர்கள் என்று தெரிவித்துவிட்டார்.

மக்கள் போராட்டத்தை அடுத்து பதவி விலகிய பிரதமர்

ஹைதியில் எரிபொருள் விலையுயர்வுக்கு எதிராக கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை போராட்டங்களை அடுத்து, அந்நாட்டின் பிரதமர் ஜாக் கய் லபோன்டன்ட் பதவி விலகியுள்ளார்.

ஹைதியில் அரசாங்கத்திற்கு எதிராக நடந்து வந்த போராட்டங்களை அடுத்து ஆளும் கட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் உரையாற்றிய பிரதமர் ஜாக் கய் லபோன்டன்ட், தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :