பாகிஸ்தான் தேர்தல்: 3 பெருங்கட்சிகளும், அதுகுறித்த தகவல்களும்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வரும் 25 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தருணத்தில் பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் மூன்று முக்கிய கட்சிகள் குறித்த தகவல்களை இங்கே பகிர்ந்துள்ளோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்)

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ், அந்நாட்டின் முன்னாள் ஆளுங்கட்சி. இதன் தலைவராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் இருந்தார். ஒரு ஊழல் குற்றச்சாட்டின் காரணாமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், பிரதமராக இருக்கவும், கட்சித் தலைவராக பதவி வகிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது சகோதரர் சஹாபாஷ் ஷரீப் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சிதான் பாகிஸ்தானின் மிகப்பெரிய கட்சி. தன்னை அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் சட்டபூர்வமான வாரிசு என்று கூறுகிறது அது. பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பஞ்சாபில் வலுவான அடித்தளம் இக்கட்சிக்கு இருக்கிறது. இந்த கட்சியின் முக்கியத் தலைவர்கள் நகர்ப்புற பெரு வணிகர்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி மூன்று முறை மத்தியிலும், பஞ்சாப் மாகாணத்திலும் பொறுப்பில் இருந்திருக்கிறது. 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி பிளவுபட்டதை தொடர்ந்து இந்த கட்சி உருவானது.

ராணுவ சர்வாதிகாரியான ஜியா உல் ஹக் - ஆல் ஆதரிக்கப்பட்டவர் என்று ஷெரீப்பை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். முதல் முறையாக நவாஸ் ஷெரீப்பை 1981 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தது ஜியாதான்.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி ஆட்சி கவிழ்ப்பை அடுத்து 1999 ஆம் ஆண்டு ஆட்சியை இழந்தது. அதன் தலைவராக இருந்த நவாஸ் செளதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 2013 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்றதை அடுத்து இந்த நாடு கடத்தல் ஒரு முடிவுக்கு வந்தது.

பனாமா ஊழல் வழக்கில் நவாஸின் குடும்பத்திற்கு பங்கு இருக்கிறது என குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நவாஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார். உச்சநீதிமன்றமும் அவரை தகுதி நீக்கம் செய்தது.

தகுதி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து நவாஸ் நாட்டின் ராணுவத்தின் மீதும், நீதித் துறை மீதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

நவாஸால் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்திற்கு அவர், தனது மகள் மர்யத்தின் துணையுடன் தலைமை தாங்கி வருகிறார்.

பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப்

பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சிதான் பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சி.

இந்த கட்சி 1996 ஆம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானால் நிறுவப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

'மாற்றம்' என்ற முழக்கத்தை முன்வைத்து நிறுவப்பட்ட இந்த கட்சி தொடக்கத்தில் மக்கள் செல்வாக்கை பெரிதாக பெறவில்லை. 2002 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சி சார்பாக போட்டியிட்டவர்களில் இம்ரான்கான் மட்டும்தான் வெற்றி பெற்றார்.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல நிலைமை மெல்ல மாறியது. இம்ரான் கானுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்க தொடங்கியது. 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லாகூரில் அவர் கட்சி சர்பாக நடைபெற்ற பேரணி அனைவரையும் திரும்பிபார்க்க வைத்தது. ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் அந்த பேரணியில் கலந்து கொண்டதாக கணக்கிடப்பட்டது. அதுவும் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் நகர்ப்புற படித்த செல்வந்த இளைஞர்கள்.

"பாகிஸ்தானில் ஊழல் இல்லாத மக்கள் நல அரசை நிறுவப்படும், அங்கு சமூக நீதி நிலவும். அனைவருக்கும் நல்ல சுகாதாரமும் கல்வியும் கிடைக்கும்" என்ற செயல் திட்டத்துடன் மக்களை சந்தித்தது இந்த பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சி.

ஏறத்தாழ 7.5 மில்லியன் வாக்குகளை, 2013 பொது தேர்தலில் பெற்று, அந்நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக மாறியது பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சி. அந்த கட்சியால் அப்போது மத்தியில் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், வட மேற்கு கைபர் மாகாணத்தை ஆட்சி செய்தது.

தேர்தலில் மோசடியில் ஈடுப்பட்டதாக கூறி நவாஸுக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு நடந்த ஒரு நீண்ட பேரணிக்கு தலைமை தாங்கினார் இம்ரான் கான். இந்த பேரணியை தொடர்ந்து, ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு அங்கு ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்தன. இதனால் நவாஸ் அரசு ஸ்தம்பித்தது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி

ஜூல்ஃபிகர் அலி பூட்டோவால் 1967 ஆம் ஆண்டு பாகிஸ்தானில், ஒரு இடதுசாரி சோசலிச முன்னேற்ற கட்சியாக நிறுவப்பட்டதுதான் இந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி. ஜியா உல் ஹக்கால் ஜூல்ஃபிகர் தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பை பெனாசீர் பூட்டோ ஏற்றார். இப்போது ஜூல்ஃபிகரின் பேரன் பிலாவால் பூட்டோ கட்சியை நடத்தி வருகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தான் மக்கள் கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்ந்து வந்தது. எழுபதுகளின் பெரும்பகுதி அக்கட்சி ஆட்சியில் இருந்தது. ஆனால், ஜியா காலத்தில் அக்கட்சி மிகமோசமாக நடத்தப்பட்டது.

ஜூல்ஃபிகர் தூக்கிலடப்பட்ட பின் கட்சியின் பொறுப்பை பெனாசீர் ஏற்றார். தேசத்தின் ஜனநாயகத்தை மீட்க பெரும்பாடுபட்டார். 1988 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றினார்.

1988 ஆம் ஆண்டும், 1993 ஆம் ஆண்டும் பெனாசீர், ஆட்சி பொறுப்பை கைப்பற்றி இருந்தாலும் அவரால் தான் ஆட்சிகாலத்தை பூர்த்தி செய்யமுடியவில்லை. 2008 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின், மீண்டும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.

ஆனால், அதன் பின் மெல்ல இந்தக் கட்சி பொதுவில் மக்கள் செல்வாக்கை இழக்க தொடங்கியது. இருந்தபோதிலும் இந்த கட்சி தெற்கு சிந்து மாகாண பகுதியில் வலுவாகவே உள்ளது.

மதவாத கட்சிகள்

பாகிஸ்தானில் மதவாத கட்சிகளும் வலுவாகவே உள்ளன. அவர்களால் இதுநாள் வரை ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், மத்தியிலும் மாகாணங்களிலும் அவர்கள் கிங் மேக்கர்களாக இருக்கின்றனர். அவர்களின் ஆதரவு ஆட்சியை கைப்பற்ற இன்றியமையாததாக இருக்கிறது.

த்ரீக்-இ-லப்பை யா ரசூல் அல்லா, பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் ஆகிய மதவாத கட்சிகள் அங்கு வலுவாக உள்ளன.

பிற செய்திகள்:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உங்கள் தலைக்கு எப்படி பேன் வருகிறது தெரியுமா? (காணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்