இரான் மீது தடை: ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விலக்களிக்க அமெரிக்கா மறுப்பு

இரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகளில் இருந்து ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கும்படி ஐரோப்பிய ஒன்றியம் வைத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

ஐரோப்பிய நிறுவனங்கள்.

இரான் மீது அதிகபட்ச அழுத்தத்தை செலுத்த அமெரிக்கா விரும்புவதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையை நிராகரிப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்தார். அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு நன்மை பயக்கும் என்றால் மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிதித்துள்ள புதிய வர்த்தகத் தடைகளால் பல நூறு கோடி டாலர் மதிப்புள்ள வணிகம் பாதிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அஞ்சுகிறது.

"முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக நிதிசார்ந்த அழுத்தத்தை இரான் அரசுக்கு எதிராக உருவாக்க விரும்புவதாகவும்" அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருவூலச் செயலாளர் ஸ்டீவன் நுசின் என்பவரும் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக என்.பி.சி. நியூஸ் தெரிவிக்கிறது.

மிகக் குறிப்பான தருணங்களைத் தவிர மற்ற நேரத்தில் தனது இரான் கொள்கையில் விதிவிலக்குகளை அளிக்கும் நிலையில் அமெரிக்கா இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு கையெழுத்தான இரான் அணுத் திட்டம் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய பிறகு கடந்த மே மாதம் இந்தக் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டன.

2015 ஒப்பந்தத்துக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த இரானுக்கு எதிரான தடைகள் எல்லாம் அப்போதும் இரான் மீது மீண்டும் விதிக்கப்பட்டன.

அமெரிக்கா ஒப்பந்தத்தில் இருந்து விலகியபோதும் பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தில் தொடர்கின்றன.

மூன்றாண்டுகளுக்கு முன்பு இரானுடன் உலக வல்லரசுகள் செய்துகொண்ட அந்த அணு ஒப்பந்தத்துக்குப் பிறகு ஐரோப்பாவின் மிகப்பெரிய நிறுவனங்கள் இரானுடன் வணிகம் செய்ய ஆர்வம் காட்டின.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: