உலகப் பார்வை: வணிக விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் எதிரி: அமெரிக்க அதிபர் கருத்து

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

ஐரோப்பிய ஒன்றியத்தை கடுமையாக சாடும் டொனால்டு டிரம்ப்

வணிக விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் எதிரி என்று கடுமையாக சாடியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

தங்களது நலன்களுக்கு அமெரிக்காவை பயன்படுத்தி கொள்ளும் ஐரோப்பிய நாடுகள், நேட்டோ அமைப்புக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை மட்டும் செலுத்துவதில்லை என்றும் அவர் 'சிபிஎஸ் நியூஸ்' நடத்திய நேர்க்காணலில் கூறினார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க், ஐரோப்பிய ஒன்றியத்தை எதிரி என்று யார் சொன்னாலும், அது 'போலிச் செய்தி" என்று கூறினார்.

"வடகொரிய உணவக ஊழியர்களை கட்டாயப்படுத்தி அழைத்து சென்ற தென் கொரியா"

சீனாவின் நிங்போ நகரில் இயங்கும் வட கொரிய அரசு உணவகத்தில் வேலை செய்த 13 ஊழியர்கள், 2016ல் தென் கொரியாவுக்குத் தப்பிச் சென்றனர். அவர்கள் விருப்பத்தின் பேரில் தப்பி வந்ததாக இதுவரை தென் கொரியா கூறி வந்தது.

தற்போது வடகொரியாவின் அரசு ஊடகமான யோன்ஹாப்-புக்கு பேட்டி அளித்த அந்த உணவகத்தின் மேலாளர் ஹோ காங்-இல் தென் கொரியா கட்டாயப்படுத்தியே ஊழியர்களை தங்கள் நாட்டுக்குத் தப்பி வர வைத்தது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்த முழுமையான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்கா-சீனா வர்த்தக போர் - எச்சரிக்கும் போயிங் நிறுவனம்

வளர்ந்து வரும் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் கடும் சேதத்தை விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளார் அமெரிக்காவின் முன்னணி விமான மற்றும் பாதுகாப்புத் தளவாட நிறுவனமான போயிங்கின் தலைமை நிர்வாகி டென்னிஸ் முய்லேன்பர்க்.

திறந்த மற்றும் தங்குதடையற்ற வர்த்தச் சூழலிலேயே விமான உற்பத்தித் துறை வளரும் என்றும், மாற்றி மாற்றி வரிகள் விதிப்பதால் விமானங்களின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் என்றும் வணிகத் தகராறுகளுக்கு போயிங் நிறுவனம் மாற்றுத் தீர்வுகளைக் காண விரும்புவதாகவும் கூறியுள்ளார் முய்லேன்பர்க்.

உயிரிழந்த வீரருக்கு அஞ்சலி செலுத்திய 12 சிறுவர்கள்

வெள்ளம் சூழ்ந்த தாய்லாந்து குகையில் 17 நாள்கள் சிக்கியிருந்து சர்வதேச உதவியுடன் நடந்த மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை மூலம் காப்பாற்றப்பட்ட 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும், மீட்புப் பணியில் உயிரிழந்த வீரருக்கு அஞ்சலி செலுத்தினர்.

வெள்ளம் சூழ்ந்த குகையில் சுமார் 1 கி.மீ. ஆழத்தில் சிக்கிக் கொண்ட இவர்களுக்கு, மீட்பு நடவடிக்கைக்கு முன்னதாக, ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட தாய்லாந்து கடற்படையைச் சேர்ந்த முக்குளிக்கும் வீரர் சமன் குணன், திரும்பிவரும்போது தனது சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் உயிரிழந்தார்.

மீட்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்த 13 பேரும் சமன் குணனுக்கு மருத்துவமனையிலேயே அஞ்சலி செலுத்தினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :