பாகிஸ்தான்: தேர்தல் களத்தில் தலித் வேட்பாளர்கள்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வரும் 25 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இது தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒரு இந்து சமய வேட்பாளர் குறித்து இங்கே பகிர்கிறோம்.

இந்துக்களின் நிலை

கன்ஷாமுக்கு கண்கள் ஏறத்தாழ தெரியாது. கோயிலில் பூஜைக்காக விளக்கை பற்ற வைக்க அவர் முயற்சித்தபோது, அவர்கள் கைகள் நடுங்குகின்றன. விளக்கை தடுமாறி ஏற்றுகிறார். மெளனமாக கடவுளை வணங்குகிறார்.

இந்திய எல்லையில் இருக்கும் தர்பார்கர் மாவட்டத்தில் உள்ள நன்கர்பார்கர் பகுதியில் உள்ள இந்து கோயில் ஒன்றுக்கு எப்போதாவது கன்ஷாம் வருவார். கைவிடப்பட்ட கோயில் அது. ஒரு காலத்தில் அந்த கோயில் பரபரப்பாகதான் இருந்தது. ஆனால், 1971 ஆம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் போருக்குப் பின், அந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் பலர் இந்தியாவுக்கு சென்றுவிட்டனர். அதன்பின், அக்கோயில் தன் உயிர்ப்பை இழந்தது.

கன்ஷாமின் தாத்தா, இந்திய பிரிவினைக்கு முன்பு கட்டிய கோயில் அது. அவர்களது குடும்பம்தான் அந்த கோயிலை இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் வரை நிர்வகித்து வந்தது.

அந்த கோயிலை சுற்றி இருந்த தங்கள் நிலத்தை அங்குள்ள நிலவுடமையாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டுகிறார் கன்ஷாம்.

கோயிலில் பூஜையை முடித்துவிட்டு நம்மிடம் பேசிய கன்ஷாம், "அது ஏறத்தாழ 12 ஆயிரம் சதுரடி நிலம் என்று என் அப்பா என்னிடம் கூறி இருக்கிறார்" என்றார்.

மேலும் கன்ஷாம், "கோயில் மட்டும்தான் எங்களுக்கு சொந்தமாக இருந்தது. நிலம் எப்போதும் அவர்களுக்கே சொந்தமாக இருந்து வருகிறது என்கிறார் அந்த நிலவுடமையாளர். என் சகோதரர் இதுகுறித்து அவரிடம் கேள்வி கேட்டபோது, என் சகோதரரை மிகவும் மோசமாக நடத்தினார். வேண்டுமானால் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என்கிறார் அவர்.ஆனால், எங்களால் நீதிமன்றத்திற்கு எல்லாம் செல்ல முடியாது. எங்களது பொருளாதார நிலை அதற்கெல்லாம் அனுமதிக்காது." என்று விளக்கினார்.

இவர் கூறுவது சாதாரணமாக தெரிந்தாலும், பாகிஸ்தான் தேர்தல் களத்தில் நிலம் மற்றும் நிலத்திற்கான போராட்டம் மையப்புள்ளியாக இருக்கிறது.

பாகிஸ்தானில் இந்துக்கள் : 5 தகவல்கள்

இந்துக்கள் மக்கள் தொகை: 33,24,392 (மொத்த மக்கள் தொகையில் 1.6 சதவிகிதம்).

இந்து வாக்காளர்களின் எண்ணிக்கை : 1.77 மில்லியன்

சிறுபான்மையினருக்கென 10 ரிசர்வ் தொகுதிகள் உள்ளன. ஆனால், அதே நேரம் பொது தொகுதிகளிலும் இந்துக்கள் போட்டியிடலாம்.

நாடெங்கும் இந்து மக்கள் சிதறி இருந்தாலும், தெற்கு சிந்து மாகாணத்தில் அடர்த்தியாக இருக்கிறார்கள்.

முந்தைய காலங்களில் இந்துக்கள், தலித்துகள் பாகிஸ்தானில் அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்கள். சிலர் பொதுத் தொகுதியில் கூட போட்டியிட்டு வென்று இருக்கிறார்கள். பாகிஸ்தானின் முதல் சட்டத் துறை அமைச்சரும் இந்துதான்.

சுரண்டும் நிலப் பிரபுத்துவம்

ஏறத்தாழ நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மித்தி நகரத்தில், சுனிதா பமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். சுனிதா தர்பார்கர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்.

மோட்டார் பொருத்தப்பட்ட சிறிய ரிக்‌ஷாதான் அவரது தேர்தல் வாகனம். அந்த வாகனத்தில் தனது மாமியருடன் சென்று, அந்த பகுதியில் உள்ள ஒரு சூஃபி தர்காவுக்கு சென்று வணங்கிவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

சிந்து பண்பாட்டில், மத வேற்றுமைகளை எல்லாம் கடந்து, இந்துகளும், முஸ்லிம்களும் சூஃபிகளை வணங்குவார்கள்.

அந்த தர்காவில் சுனிதாவின் பிரார்த்தனை தேர்தல் வெற்றியாகதான் இருந்தது. அங்கிருந்து கிளம்பி, அவர் அருகே உள்ள கிராமத்திற்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சென்றார். அங்கு அவருக்காக 50க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் காத்திருந்தனர்.

அங்கு இருந்த அவரது ஆதரவாளர்களிடம் சுனிதா, "இந்த நிலபிரபுத்துவ அமைப்பானது ஏழைகளை சுரண்டுகிறது, பாகுபாடுடன் நடத்துகிறது. பெண்களுக்கு இந்த சமூகத்தில் உள்ள உரிய வெளி மற்றும் உரிமைகளை மறுக்கிறது. இவர்களை வீழ்த்த வேண்டும்" என்கிறார்.

எனது சமூக மக்கள், குறிப்பாக பெண்கள், நான் அவர்களுக்காக குரல் கொடுப்பேன், அவர்களது உரிமைகளுக்காக போராடுவேன் என்று நம்புகிறார்கள். அதற்காகதான் என்னை களம் இறக்கி இருக்கிறார்கள் என்கிறார் சுனிதா.

ஆனால், சுனிதாவின் வெற்றி பிரகாசமானதாக இல்லை. இந்துக்கள் பாகிஸ்தானில் அதிக எண்ணிக்கையில் மத சிறுபான்மையாளராக இருந்தாலும், வலுவாகவெல்லாம் அவர்கள் இல்லை.

தர்பார்கர் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள்தான் என்றாலும், அவர்கள் அங்கு வளமாக எல்லாம் இல்லை. அவர்களுக்கென அரசியல் செல்வாக்கும் இல்லை. அதனால், பெருங்கட்சிகள் ஆதரித்தால் மட்டுமே அவர்களால் வெல்ல முடியும் என்ற நிலை.

தர்பார்கரில் வாக்காளர்களில் 33 சதவீத பேர் தலித்துகள். ஆனால், அவர்களுக்கென எந்த பிரதிநிதித்துவமும் இல்லை என்கிறார் பாகிஸ்தான் தலித் இயக்கத்தின் தலைவர் சோனு கன்காராணி.

'சீட்டு வழங்கவில்லை'

ஏறத்தாழ இருபது தலித்துகள் தேர்தலில் போட்டியிட சீட்டு கேட்டதாகவும், ஆனால் எந்த பெருங்கட்சியும் அவர்களுக்கு சீட்டு வழங்கவில்லை என்கிறார் சோனு.

கடந்த காலங்களில், எங்களது சமூகத்தை சேர்ந்த சிலர் வென்று நாடாளுமன்றத்திற்கு சென்று இருக்கிறார்கள். ஆனால், பெருங்கட்சிகளின் தலைமையுடன் அவர்களுக்கு இருந்த தனிப்பட்ட நெருக்கத்தால்தான் இது சாத்தியமானது. ஆனால், வென்று நாடாளுமன்றத்திற்கு சென்றவர்களும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அவர்கள் சார்ந்த கட்சியின் செயல்திட்டத்திற்கு கட்டுப்பட்டே அவர்கள் நடந்து கொண்டனர்.

அரசு தலித்துகளை பாகுபாடுடன் நடத்தவில்லை என்றும், தமது இந்து சமூகம்தான் அவ்வாறாக தங்களை நடத்துவதாக சோனு கூறுகிறார்.

சாதி இந்துவான மகேஷ் குமார் மலானிக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் மக்கள் கட்சி சீட்டு வழங்கி உள்ளது. மித்தியில் அவரது வீடு அமைந்துள்ள பகுதியே கொண்டாட்டமாகக் காணப்படுகிறது.

மகேஷ் மலானி, "இந்து, இஸ்லாமிய வாக்காளர்கள் இடையே எந்த பாகுபாடும் இல்லை" என்கிறார்.

பல காலமாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமையுடன் நெருங்கிய தொடர்பை பேணி வருகிறார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

"பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் நிச்சயம் என் மதம் குறித்து எல்லாம் கவலைப்படமாட்டார்கள். அவர்கள் என் கட்சிக்காக வாக்களித்து வெல்ல வைப்பார்கள்" என்கிறார்.

இந்த தேர்தலில் பாகிஸ்தானில் ஏராளமான தலித்துகள் சுயேச்சையாக போட்டி இடுகிறார்கள். வெற்றி பெறுகிறோமா என்பது முக்கியம் இல்லை. எங்களது இருப்பை பொதுசமூகத்திற்கு உணர்த்ததான் போட்டி இடுகிறோம் என்கிறார்கள் அம்மக்கள்.

பிற செய்திகள்:

காணொளிக் குறிப்பு,

உங்கள் தலைக்கு எப்படி பேன் வருகிறது தெரியுமா? (காணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :