‘சாலை திட்டம் சூழலியலை பாதிக்கும்’ - எதிர்க்கும் பிரிட்டன் மக்கள்

சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச் சாலைக்கு எதிராக நிலத்தை இழந்த மக்களும், செயற்பாட்டாளர்களும் போராடி வருகின்றனர். ஆர்ப்பாட்டம், பேரணி, வழக்கு மற்றும் திட்டத்திற்கு ரஜினியின் ஆதரவு என தினம் தினம் அந்த திட்டம் குறித்து ஏதேனும் ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. இது தமிழகத்தின் நிலை என்றால், இதுபோன்ற ஒரு சாலை திட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் பிரிட்டனில் கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன.

புறவழிச் சாலை

பிரிட்டனில் சூஸ்செக்ஸ் பகுதியில் புறவழிச் சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சாலை திட்டத்தினால் மிகவும் பழமையான மரங்கள் நிறைந்த தெற்கு டவுன்ஸ் தேசிய பூங்காவின் சில மரங்கள் வெட்டப்படலாம் என்பதால் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த தெற்கு டவுன்ஸ் பூங்காவின் தலைவர் மார்க்ரெட் பரென், இந்த பூங்காவிற்கு எந்த பாதிப்பும் வராமல் வேறு வழியில் சாலை திட்டத்தை நம் பொறியாளர்கள் மேற்கொள்வார்கள் என நம்புகிறேன் என்கிறார்.

இதே வழியில் இந்த சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால் பழமையான மரங்கள் பாதிக்கப்படும் என்கிறார் அவர்.

நெடுஞ்சாலைத் துறை இந்த சாலை திட்டத்தால் அருன்டெல் பகுதியின் நெரிசல் குறையும் என்கிறார்கள்.

ஆனால், இந்த திட்டத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டுவருபவர்கள், இந்த சாலையில் அதிகமாக வாகனம் செல்வதாக மிகையாக பொருளாதார அறிஞர்கள் கணக்கிட்டுவிட்டார்கள் என்கின்றனர்.

இந்த சாலை திட்டம் வேண்டும் என்பது சிலரின் கோரிக்கையாக இருக்கிறது. வேறுசிலர், இந்த திட்டம் வேண்டும். ஆனால், பூங்காவுக்கு பாதிப்பு ஏற்படாமல் வேறு பாதையில் செயல்படுத்த வேண்டும் என்கிறார்கள். இன்னொரு தரப்பு இந்த சாலை திட்டமே தேவையில்லை என்கின்றனர்.

சூழலியலை கெடுக்கும்

இந்த ஏ27 சாலை திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், எக்காரணத்தை கொண்டும் பூங்காவின் சூழலியல் கெடுவதை ஏற்று கொள்ள முடியாது என்கிறார் மார்க்ரெட் பரென்.

அருன்டெல் பகுதியின் வாகன நெரிசல் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால், அதற்கு தேசிய பூங்காவை அழிக்காமல் வேறு பாதையில் இந்த திட்டத்தை நிறைவேற்றலாம் என்பது மார்க்ரெட்டின் கருத்து.

அரசின் சட்டங்கள் தேசிய பூங்காக்களை அழிக்கும் திட்டங்களை எதிர்க்கிறது. தவிர்க்க முடியாத தருணங்களில் மட்டும் இப்படியான திட்டங்களை நிறைவேற்றலாம். ஆனால், அப்போதும் மக்களின் நலனுக்காகதான் இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்பதை மக்களுக்கு விளக்கி இருக்க வேண்டும்.

கவலை அளிக்கிறது. ஆனால்...

இந்த திட்டத்தினால் சூழலியலுக்கு பாதிப்பு ஏற்படுவது கவலை அளிக்கிறது. ஆனால், இது மிக முக்கியமான திட்டம் என்கிறார்கள் இந்த திட்டத்தை ஆதரிப்பவர்கள்.

அருண் மாவட்ட மன்றத்தின் உறுப்பினர், "மாவட்டத்திற்கு மிக முக்கியமான திட்டம் இது. இதனால் போக்குவரத்து மேம்படும். வணிகத்திற்கு உதவியாக இருக்கும்." என்கிறார்.

இந்த திட்டத்தை ஆதரிக்கும் நிக் ஃபீல்ட், "ஆம். என்னால் எதிர்ப்பாளர்களின் கருத்துகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இது வளர்ச்சிக்கான திட்டம். நெரிசலினால் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும்" என்கிறார்.

அருன்டெல் பகுதியில் மாலை நேர நெரிசலினால் 6 முதல் 10 நிமிடங்கள் வரை தாமதமாகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: