பாகிஸ்தான் தேர்தல்: என்னவாகும் நவாஸ் ஷெரீஃபின் எதிர்காலம்?

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வரும் 25 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இது தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் குறித்து இங்கே பகிர்கிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

வரும் ஜுலை 25-ஆம் தேதியன்று பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ள சூழலில், ஊழல் வழக்கு ஒன்றில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கைதானது அவரது கட்சியின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் அளவு முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஜுலை 13-ஆம் தேதியன்று, பிரிட்டனில் இருந்து விமானம் மூலம் லாகூர் வந்து இறங்கிய நவாஸ் ஷெரீஃப் மற்றும்  அவரது மகள் மரியம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது அவர்கள் ராவல்பிண்டியில் உள்ள சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தங்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர்கள் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளனர்.

லண்டனில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது தொடர்பாக பொறுப்பு கோரல் நீதிமன்றம் நவாஸுக்கும் அவரது மகளுக்கும், பத்து மற்றும் ஏழு ஆண்டுகள் என முறையே ஜூலை 6 ஆம் தேதி தண்டனை வழங்கியது.

எதிர்த்து நிற்கும் நவாஸ்

கடந்த ஓராண்டாக நவாஸுன் அரசியல் வாழ்க்கை அமைதியானதாக இருக்கவில்லை. தினம் தினம் போராட்டமாகதான் இருந்தது. இப்படியான சூழலில் இம்மாதம் வந்த இப்படியான தீர்ப்பு நிச்சயமாக பின்னடைவுதான்.

படத்தின் காப்புரிமை Getty Images

பனாமா ஊழல் வழக்கில் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் நவாஸ் பிரதமர் பதவியை இழந்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், நவாஸ் தேர்தலில் போட்டி இடுவதற்கு வாழ்நாள் தடை விதித்தது நீதிமன்றம்.

அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து, அந்நாட்டு நீதித்துறை மற்றும் ராணுவத்திற்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார் நவாஸ்.

தண்டனை, அதனை தொடர்ந்து கைது என கடினமான காலமாக இது இருந்தாலும், நவாஸ் மிக நம்பிக்கையாக இருக்கிறார். அவர் அளவுகடந்த உறுதியை வெளிப்படுத்துகிறார். பாகிஸ்தான் மக்களிடம் தமது கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வலியுறுத்தி உள்ளார்.

"எனது செய்தியை அனைத்து பகுதி முழுவதும் பரப்புங்கள். வரும் தேர்தலில் அவமானத்துக்குரிய ஒரு தோல்வியை எதிர்கட்சிகளுக்கு தாருங்கள். எதிர்காலத்தில் அவர்கள் மீண்டும் தலைதூக்க முடியாத வண்ணம் அந்த தோல்வி இருக்க வேண்டும்" என்ற அவர் பேசியதாக பாகிஸ்தானில் சமூக ஊடகங்களில் ஒலி வடிவில் ஒரு செய்தி உலவுகிறது.

இந்த ஆடியோவானது, அவர் லண்டனில் இருந்த போது ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக இருக்கலாம் என்கின்றன ஊடகங்கள்.

தேர்தலில் எதிரொலிக்குமா?

பஞ்சாப் மாகாணத்தின் காபந்து நிர்வாகத்தை கடுமையாக விமர்சிக்கின்றன ஊடகங்கள். நவாஸ் ஷெரீஃப் லண்டனிலிருந்து திரும்பிய அன்று, அவரை வரவேற்க ஆயத்தமாகிய பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியின் உறுப்பினர்களை அதிகளவில் கைது செய்தது பஞ்சாப் நிர்வாகம். இதனைதான் ஊடகங்கள் விமர்சிக்கின்றன.

இதுபோன்ற நடவடிக்கைகள் பாகிஸ்தானில் நியாயமான தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் எழுப்புவதாக கூறுகின்றன ஊடகங்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

"பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தலைவர்கள் மீதான பஞ்சாப் நிர்வாகத்தின் நடவடிக்கை ஓர் அச்சுறுத்தல் நடவடிக்கையாகும். அந்த கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக தடைகளை உருவாக்குகிறது நிர்வாகம்" என்று பாகிஸ்தான் நாளிதழான ’தி நேஷன்’ எழுதுகிறது.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது என்கிறது டான் நாளிதழ்.

பொது வாழ்விலும் மற்றும் தனிப்பட்ட வாழ்விலும் நவாஸுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது அந்நாளிதழ்.

பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவான நாளிதழ் என்று கருதப்படும் அப்சர்வர் நாளிதழும் இப்படியான கருத்தைதான் பதிவு செய்கிறது.

அது தனது தலையங்கத்தில், "பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைமை துணிவாக தம்மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அந்தக் கட்சியின் தொண்டர்கள் விரும்பினார்கள். அப்போதுதான், தேர்தலில் தங்கள் கட்சியின் வெற்றி பிரகாசமாகும் என்று நினைத்தார்கள். ஆனால், அப்போது வராமல் பிரிட்டனில் அவர்கள் தங்கி இருந்தது, வதந்திகளுக்கு காரணமாக அமைந்தது" என்ற தொனியில் தலையங்கம் எழுதி உள்ளது அந்த நாளிதழ்.

மீண்டும்மீண்டு வருவாரா?

தன் முன் உள்ள அனைத்து தடைகளையும் தகர்த்து மீண்டும் மீண்டும் நவாஸ் வருவார் என சிலர் நம்புகின்றனர்.

நவாஸ் தனது வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை எதிர்கொண்டு அதனை கடந்து வந்திருக்கிறார். 1999 ஆம் ஆண்டு ராணுவ ஆட்சி கவிழ்ப்பை கடந்துதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். நிச்சயம் இதனையும் அவர் எதிர்கொள்வார் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

’தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்’ நாளிதழ் நவாஸின் வருகையை ஆதரித்து எழுதி இருக்கிறது.

அரசியல் உள்நோக்கங்களை எல்லாம் கடந்து, நவாஸ் மற்றும் அவரது மகள் நீதிமன்றத்தின் முன்பு சரண் அடைந்தது, நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. சட்டத்தை எதிர்கொள்ளாமல் தப்பி ஓடும் பர்வேஸ் முஷ்ரஃப் போன்றவர்களுக்கு இது நிச்சயம் அழுத்தம் கொடுக்கும் என்று அந்நாளிதழ் எழுதி உள்ளது.

ஏராளமான தடைகளை கடந்து, லாகூரில் நவாஸூக்கு ஆதரவாக திரண்ட கூட்டம், கட்சியில் இன்னும் அவருக்கு அதிக அளவிலான செல்வாக்கு இருப்பதை உணர்த்துகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்