"நான் அப்படிச் சொல்ல வரவில்லை": ரஷ்ய விவகாரத்தில் தலைகீழாக டிரம்ப்

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற அமெரிக்க உளவு நிறுவனங்களின் கருத்துக்கு மாறாக, ரஷ்ய அதிபரின் கருத்தை ஆதரித்துப் பேசிய டிரம்ப், அமெரிக்காவில், குறிப்பாக சொந்தக் கட்சியில் எழுந்த அதிருப்திகள், கண்டனங்களை அடுத்து, தான் அப்படிச் சொல்லவரவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹெல்சின்கி செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப்.

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட்டு டிரம்புக்கு ஆதரவாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டனுக்கு எதிராக செயல்பட்டது என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் முடிவுக்கு வந்தன.

தேர்தல் நேரத்தில் ஹிலரி கிளிண்டனுக்கு எதிராகச் செயல்பட்டு இமெயில்களை ஹேக் செய்ததாக ரஷ்ய உளவுத்துறையைச் சேர்ந்த 12 பேரை கடந்த வாரம் குற்றம்சாட்டியிருந்தார் அமெரிக்க அட்டர்னி ஜெனரல்.

இந்நிலையில் ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி-யில் ரஷ்ய பிரதமர் விளாதிமிர் புதினை திங்கள்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப், பிறகு புதினோடு சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது என்ன சொன்னார்?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டிரம்ப்: அடடா போட்ட பால் தப்பா போச்சே...

அந்த சந்திப்பின் போது, "2016ல் நடந்த அமெரிக்கத் தேர்தலில் தலையிடவில்லை என்று அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார். எல்லா அமெரிக்க உளவு நிறுவனங்களும் ரஷ்யா தலையிட்டதாக முடிவுக்கு வந்துள்ளன. என்னுடைய முதல் கேள்வி, இதில் யார் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்கள்" என்று கேட்டார் ஒரு செய்தியாளர்.

அவருக்குப் பதில் அளித்த டிரம்ப், "என்னுடைய அதிகாரிகள் என்னிடம் வந்து ரஷ்யா செய்ததாக கூறினார்கள். அதிபர் புதின் ரஷ்யா அப்படிச் செய்யவில்லை என்றார். (ரஷ்யா) அப்படிச் செய்திருக்கும் என்று கூறுவதற்கான காரணம் ஏதும் எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்.

இந்த கருத்து தமது சொந்த நாட்டு உளவு நிறுவனங்களை மறுத்து, எதிராளி நாட்டின் அதிபரின் கருத்தை ஆதரித்த செயலாக அமெரிக்காவில் பார்க்கப்பட்டது. டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சி செனட்டர்கள் உள்ளிட்டோர், இதற்கு எதிரான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். துணை அதிபர் மைக் பென்ஸ் டிரம்பை ஆதரித்தார்.

முன்னதாக, செய்தியாளர் சந்திப்பில் நடந்த உரையாடல்களின் எழுத்தாக்கம் அமெரிக்க அதிபர் மாளிகையில் இருந்து வெளியாகி இருந்தது.

இப்போது என்ன சொல்கிறார்?

படத்தின் காப்புரிமை Getty Images

செய்தியாளர் சந்திப்பு உரையாடல்களின் எழுத்தாக்கத்தை தாம் படித்ததாகவும், எனவே தாம் சொல்ல வந்ததது குறித்த விளக்கம் அளிக்க விரும்புவதாகவும் கூறிய டிரம்ப், "செய்தியாளர் சந்திப்பில் நான் சொன்ன முக்கியமான ஒரு வாக்கியத்தில் 'வுட்நாட்' என்று சொல்வதற்குப் பதிலாகத் தாம் 'வுட்' என்று கூறிவிட்டதாக" தெரிவித்தார். "(ரஷ்யா) அப்படி செய்திருக்காது என்பதற்கான காரணம் எதுவும் எனக்குத் தெரியவில்லை" அல்லது "அது ஏன் ரஷ்யாவாக இருக்காது?" என்பது போன்ற இரட்டை எதிர்மறை வாக்கியமாக அது இருந்திருக்கவேண்டும் என்றார் டிரம்ப்.

"2016 தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக நமது உளவு நிறுவனங்கள் முடிவுக்கு வந்துள்ளதை நான் ஏற்றுக்கொள்கிறேன். வேறு யாரும்கூட இதைச் செய்திருக்கலாம். நிறைய பேர் இருக்கிறார்கள்" என்று மேலும் தெரிவித்தார் டிரம்ப்.

ஆனால், அந்த தலையீடுகள் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார். இந்தத் தேர்தலில்தான் ஹிலரி தோற்று டிரம்ப் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இத்தனை சீற்றம்?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பேச்சு கை கொடுக்கல சார்....

ரஷ்யா அமெரிக்கா இடையே நீண்ட காலப் பகைமை நிலவுகிறது. முக்கிய உலகப் பிரச்சினைகளில் அவை நேரெதிர் நிலை எடுக்கின்றன. இருநாட்டு உறவில் நிலவும் பிரச்சனைகளுக்கு ரஷ்யாவை குற்றம்சாட்டாமல் இருநாடுகளுமே அதற்குக் காரணம் என்று டிரம்ப் கூறியது பல முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிருப்தியைத் தந்தது.

டிரம்பின் மிகத் தீவிரமான ஆதரவாளரான நீயூட் ஜிங்க்ரிச் என்பவர்கூட, ஹெல்கின்சியில் டிரம்ப் கூறிய கருத்துகள், "அவரது அதிபர் பதவிக்காலத்தின் மிக மோசமான தவறு" என்று விமர்சித்தார்.

டிரம்ப்பின் கருத்தை தீவிரமாக டிவிட்டரில் விமர்சித்து வந்த ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷும்மர் என்பவர், டிரம்ப் தன் கருத்தை மாற்றிக்கொண்டதை அடுத்து அதை கோழைத்தனம் என்பதாக விமர்சித்தார். "தற்போது சொல்ல முயல்வதை புதின் முகத்துக்கு எதிராகச் சொல்லும் துணிச்சல், வலிமை, தீர்மானம் டிரம்புக்கு இல்லாததால் அதை தொடர்ந்து சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் புதின்" என்று அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :