தாய்லாந்து குகை: முக்குளிப்பு நிபுணர் மீது பாலியல் அவதூறு - மன்னிப்பு கோரிய தொழிலதிபர்

தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் சிக்கிக்கொண்ட சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட முக்குளிப்பு நிபுணர் ஒருவரை அவதூறாக பேசியதற்காக ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர் இலோன் மஸ்க் மன்னிப்பு கோரியுள்ளார்

படத்தின் காப்புரிமை Reuters

சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்த சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை தாம் வழங்கியது விளம்பரம் தேடும் நடவடிக்கை என்று முக்குளிப்பு நிபுணர் வெர்ன் அன்ஸ்வொர்த் கூறியதால், அந்தக் கோபத்தில் அவரைச் 'சிறுவர்களுடன் கட்டாயப் பாலுறவு கொள்பவர்' எனும் பொருள்படும் 'பீடோ கய்' (pedo guy) என்று விமர்சித்ததாக மஸ்க் கூறியுள்ளார்.

"அவர் எனக்கு எதிராகப் பேசியுள்ளார் என்பதற்காக அவருக்கு எதிராக நான் பேசுவது நியாயம் ஆகாது. அதற்காக அன்ஸ்வொர்த் மற்றும் நான் தலைமை பிரதிநிதியாக இருக்கும் நிறுவனங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்," என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.

தம்மை சிறுவர்களுடன் பாலுறவு கொள்ளும் நபர் என்று கூறியதற்காக மஸ்க் மீது தாம் வழக்குத் தொடரவும் வாய்ப்புண்டு என்று அன்ஸ்வொர்த் கூறியிருந்தார்.

இரண்டு வாரங்களுக்கு அந்த குகைக்குள் சிக்கியிருந்த அந்த 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் ஆகியோரை மீட்க, முக்குளிப்பு நிபுணர் அன்ஸ்வொர்த்துக்கு அந்த குகை குறித்த அறிவு மிகவும் முக்கிய பங்காற்றியது.

Image caption ராப் ஹார்பர் (இடது) உள்ளிட்ட முன்னணி சர்வதேச குகை மீட்பாளர்களை அழைத்து வருவதில் வெர்ன் அன்ஸ்வொர்த் (வலது) முக்கியப் பங்காற்றினார்.

சிறுவர்கள் காணாமல் போன தொடக்க நாட்களில் அந்த குகைக்குள் சென்று தேடலில் ஈடுபட்ட அவர், சர்வதேச மீட்புதவி நிபுணர்களை அழைத்து வரவும் உதவியாக இருந்தார்.

குகைக்குள் இருந்து சிறுவர்களை மீட்கும்பணி நடந்துகொண்டிருந்தபோது தாய்லாந்தில் உள்ள மீட்புதவி கட்டுப்பாட்டு இலோன் மஸ்க் அங்கு முக்குளிப்பு வீரர்களுக்கு ஒரு சிறிய ரக நீர்மூழ்கி கலத்தை அளித்தார்.

அந்தக் கலன் செயல்பட முற்றிலும் வாய்ப்பில்லை என்று கூறியிருந்த அன்ஸ்வொர்த், "அது எங்கே வேலை செய்யுமோ, அங்கு சென்று மஸ்க் அதை ஒட்டி வைக்க வேண்டும்," என்று விமர்சித்திருந்தார்.

இந்த விமர்சனத்துக்கு, அன்ஸ்வொர்த்தின் பெயரைக் குறிப்பிடாமல் ட்விட்டரில் 'நாட்டை விட்டு வெளியேறி தாய்லாந்தில் வாழும் பிரிட்டன் நபர்' என்று குறிப்பிட்டிருந்த மஸ்க், அந்த நீர்மூழ்கிக் கலன் குகைக்குள் செல்லும் காணொளி உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தபோது, முக்குளிப்பு நிபுணர் அன்ஸ்வொர்த்தை 'பீடோ கய்' என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

சுமார் 22 மில்லியன் பின்தொடர்வோரைக் கொண்டிருந்த மஸ்கின் ட்விட்டர் பக்கத்திலிருந்து, அந்தப் பதிவு பின்னர் நீக்கப்பட்டுள்ளது.

"தவறு என்னுடையது. என்னுடையது மட்டுமே," என்று பதிவிட்டுள்ள மஸ்க், அன்ஸ்வொர்த் தனது நீர்மூழ்கிக் கலன் குறித்து தவறான தகவல்களைக் கூறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அந்தக் கலன் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :