புகை பிடிக்காதோருக்கு நுரையீரல் புற்றுநோய் வருவது ஏன்?

  • நவோமி எல்ஸ்டர்
  • .

ஆன் மேரி பேர்டு தனது தொழிலைப் பற்றி பிறருக்கு கூறும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கருத்து தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Ronson /Alamy

"நீங்கள் எதற்காக ஆராய்ச்சி செய்ய வேண்டும்... அவர்கள் மரணத்திற்கு தகுதியானவர்கள்தானே...எப்படியும் சாகப் போகிறவர்கள்தானே" என்று ஒருவர் கூறியது ஆன் மேரி பேர்டால் மறக்க முடியாத கேள்வி...

டப்ளினில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் நுரையீரல் புற்றுநோய் ஆராய்ச்சியாளராகவும் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து தரும் பேஷன்ட் அட்வகேட்டாகவும் அவர் உள்ளார்.

உலகளவில் பல விதமான புற்றுநோய்கள் இருந்தாலும் அதிகம் பேரை தாக்குவது நுரையீரல் புற்றுநோய்தான்.

2012ம் ஆண்டில் மட்டும் புதிதாக 18 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டனர். இதுதான் மிகவும் அண்மையில் கிடைத்த புள்ளிவிவரம். உலகளவில் இந்நோய் பரவியிருந்தாலும் பாதிக்கப்பட்டோரில் 58% வளரும் நாடுகளில்தான் உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டனில் 45 ஆயிரம் பேருக்கும், அமெரிக்காவில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கும், ஆஸ்திரேலியாவில் 12ஆயிரத்து 500 பேருக்கும இந்த நோய் கண்டுபிடிக்கப்படுகிறது.

இவ்வளவு நவீன மருத்துவ வசதிகள் வந்துவிட்ட பின்னரும் நுரையீரல் புற்றுநோய் தாக்கியவர்கள் பிழைக்கும் விகிதம் மிகமிக குறைந்த அளவிலேயே அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Ronson /Alamy

1971-72ல் நோய் தெரியவந்தபின் 10 ஆண்டுகள் வாழ்பவர்கள் விகிதம் 3% ஆக இருந்தது. ஆனால் 2010-11ல் இது 5% ஆக மட்டுமே அதிகரித்துள்ளது.

ஆனால் மார்பக புற்றுநோய்க்கு ஆளான பெண்கள் நோய் தெரியவந்தபின் 10 ஆண்டுகள் வாழ்வது இரட்டிப்பாகியுள்ளது. 1971-72ல் 40% ஆக இருந்த உயிர் பிழைக்கும் விகிதம் 2010-11ல் 78.5% ஆக உயர்ந்துவிட்டது.

சிகரெட் பிடிப்பதால்தான் இந்த நோய் வருகிறது என்றும் அதை விட்டுவிட்டால் நோய் குணமாகிவிடும் என்பதும் பலரது பொதுவான புரிதல்.

ஆனால் இந்த புரிதலில் சில குறைகள் உள்ளன. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒருபோதும் குறைவதில்லை.

பெண்களை விட ஆண்களையே இந்த நோய் அதிகம் பாதிக்கிறது. ஆனால் அண்மைக்காலமாக நுரையீரல் புற்றால் இறக்கும் ஆண்கள் எண்ணிக்கை குறைவதாகவும், வெள்ளைக்கார இளம் பெண்களிடம் இது அதிகரிப்பதாகவும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

பட மூலாதாரம், Lucky Strike/Alamy

பிற நாடுகளிலும் கூட இதே நிலைதான். ஆனால் இதற்கு உறுதியான காரணங்கள் எதையும் ஆராய்ச்சியாளர்கள் கூறவில்லை.

ஆனால், இதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கலாம் என்றும், புகையிலையில் உள்ள கார்சினோஜென் ஆண்களின் டிஎன்ஏவை விட பெண்களின் டிஎன்ஏவை எளிதில் பாதிக்கிறது என்றும் அவர்கள் யூகிக்கின்றனர்.

ஆண், பெண் சமத்துவம் நிலவும் நூறு நாடுகளில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பாலின சமத்துவத்திற்கும் பெண்கள் புகை பிடிப்பதற்கும் தொடர்பு இருந்தது.

பெண்களுக்கு அதிகாரம் மிகுந்த நாடுகளில் அவர்கள் புகைப்பது ஆண்களை விட அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சாரா ஹிட்ச்மேனும் ஜியாஃப்ரி ஃபாங்கும் கூறுகின்றனர்.

பொதுவாக உலகளவில் பார்த்தால் புகைப்பதில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சில நாடுகளுக்கு இது பொருந்தாது. அமெரிக்காவில் 22% ஆண்களும் 15% பெண்களும் புகைக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவில் இது முறையே 19%, 13% ஆக உள்ளது. 13 - 15 வயது பிரிவில் அமெரிக்காவில் 15% சிறுவர்களும் 12% சிறுமியரும் புகைக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் இரு பாலரும் 5% என்ற அளவில் புகைக்கின்றனர்.

பட மூலாதாரம், Chesterfield Cigarettes/Getty

பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் 15 வயது சிறுவர்களை போல அதே வயது சிறுமிகளும் அதிகம் புகைக்கின்றனர்.

பெண்கள் தாம் விரும்பியதை செய்யக்கூடிய நிலைதொடர வேண்டும் என ஹிட்ச்மேனும் ஃபாங்கும் கூறுகின்றனர். ஆனால் நல்லவை இருக்கும்போது தீயவற்றை செய்யலாமா என்கின்றனர் அவர்கள்.

பிறரிடம் இருந்து தொற்றுதல்...

சுமார் 85% நுரையீரல் புற்றுநோய்களுக்கு புகைப்பதுதான் காரணம். ஆனால் புகைக்காவிட்டால் நுரையீரல் புற்றுநோய் உறுதியாக வராது என கூற முடியாதென்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

"எனது அனுபவத்தில் 5 - 10% நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புகைக்கும் பழக்கம் ஒருபோதும் இருந்தது இல்லை என்கிறார் சார்லஸ் ஸ்வான்டன். இவர் கேன்சர் ரிசர்ச் யூகே வின் தலைமை மருத்துவர் ஆவார்.

இந்த விஷயம் பெண்களை வேறு விதத்தில் பாதித்தது தெரியவந்தது. நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகும் ஐந்து பெண்களில் ஒருவர் ஒரு போதும் புகைத்ததில்லை. ஆனால், இது ஆண்களில் பத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் உள்ளது.

பிரிட்டனில் 2008-2014 வரை நுரையீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் புகைக்கும் பழக்கம் இல்லாதவர்களில் 67% பேர் பெண்கள் என தெரியவந்தது.

புகைக்கும் பழக்கம் இல்லாத பெண்களுக்கு அருகிலுள்ள புகை பிடிப்போரால் இந்த பாதிப்பு வந்திருக்கலாம் என தெரியவந்தது.

பட மூலாதாரம், Bantam/Alamy

சிகரெட் புகையை சுவாசிப்பதை தவிர்க்கும் வாய்ப்பு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பல சமயங்களில் வீட்டில் கூட கிடைப்பதில்லை.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் புகைப்பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகும் வாய்ப்பு 20-30% இருக்கிறது.

இதனால் மட்டும் உலகில் ஆண்டொன்றுக்கு 4 லட்சத்து 30 ஆயிரம் மரணங்கள் நிகழ்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இதில் 64% பேர் பெண்கள். சிகரெட் புகைதான் என்றில்லை... ஆண்கள், பெண்களுக்கு பணி ரீதியான காரணங்களும் கூட புற்றுநோய்க்கு காரணமாகின்றன.

வீடுகளில் அடுப்புக் கரியை பயன்படுத்தி சமைக்கும்போது வெளியாகும் புகை சீன பெண்களுக்கு எமனாக அமைந்துவிடுகிறது. இந்தியாவிலும் கூட இதே காரணத்தால் பெண்களுக்கு புற்றுநோய் வாய்ப்பு அதிகமாகிறது.

அமெரிக்காவில் 2011-13ல் நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களில் 17% பேர் புகைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் என்கின்றன ஆய்வுகள்.

இந்தப்போக்கு அதிகரித்து வந்துள்ளதையும் இந்த புள்ளிவிவரம் உறுதிப்படுத்துகிறது. 1990-95ல் புகைப்பழக்கம் இல்லாமல் இருந்து நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளானவர்கள் அளவு 8.9% ஆக மட்டுமே இருந்தது. ஆனால் 2011-13ல் இது 17% ஆக இருந்தது.

ஆனால் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், 2008ம் ஆண்டில் புகைப்பழக்கம் இல்லாமல் நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகி அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களின் விகிதம் 13% ஆக இருந்த நிலையில் 2014ல் இது 28% ஆக அதிகரித்தது தெரியவந்தது. தைவானில் இது 1999-2002ல் 31% ஆக இருந்த நிலையில் 2008-2011ல் 48% ஆக உயர்ந்தது.

இந்த ஆய்வு சிலரிடம் மட்டும் நடத்தப்பட்டது என்பதையும் அடுப்பு புகை போன்றவையும் ஆபத்தாக அமையலாம் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இது எல்லாவற்றையும் விட புகைப்பவர்களுக்கே அதிகமாக நுரையீரல் புற்றுநோய் வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

புகைப்பதால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய்க்கும் புகைக்காதவர்களுக்கு வரும் நுரையீரல் புற்றுநோய்க்கும் வித்தியாசம் உண்டு.

இரண்டிலும் மாற்றமடையும் ஜீன்கள் வேறுவேறானவை. புகைக்காதவர்களில் EFGR ஜீன்களில் ஏற்படும் மாற்றங்களாலும் புற்றுநோய் ஏற்படுகிறது. புதிய, வீரியம் மிகுந்த மருந்துகளால் இதை சரிசெய்ய முடியும்.

எதனால் வருகிறது புற்றுநோய்?

நம்மை உயிரோடும் ஆரோக்கியமாகவும் இருக்க வைக்க புதிய செல்கள் உடலில் உருவாகிக்கொண்டே உள்ளன. இந்த உருவாக்கம் தவறான பாதையில் செல்லும்போதுதான் புற்றுநோய் உருவாகிறது.

கார்சினோஜெனிக் வேதிப்பொருட்கள், புற ஊதாக்கதிர்கள், வைரஸ்கள் செல்களில் உள்ள டிஎன்ஏவை பாதிக்கின்றன. இதுவே செல் உருவாக்கத்தில் தவறுகள் உருவாக காரணமாகி புற்றுநோய்க்கு வித்திடுகின்றன.

ஆனால் பல புற்றுநோய்களில் அடையாளம் காணக்கூடிய புற அபாய காரணிகள் ஏதும் இல்லை. புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட இதுவும் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அடுப்புக்கரி போன்றவற்றால் வருவதை போல் ஆஸ்பெஸ்டாஸால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

இவை தவிர வாகன புகை போன்ற சுற்றுச்சூழல் மாசுகளும் நுரையீரல் புற்றுநோய்க்கு காரணமாக கூறப்படுகிறது.

டீசல் வாகன புகையாலும் கட்டுமான இட தூசிகளாலும் வெளியாகும் சிறு துகள்கள் (PM2.5s அளவுள்ளவை) காரணமாக 2013 ல் 2 லட்சத்து 23 ஆயிரம் மரணங்கள் நேர்ந்துள்ளதாக பன்னாட்டு புற்றுநோய் ஆராய்ச்சி முகமை கூறியுள்ளது.

இதில் பாதியளவு மரணங்கள் சீனாவிலும் கிழக்காசிய நாடுகளிலும் ஏற்பட்டுள்ளன. அங்கெல்லாம் நடந்தேறிய அதிவேக பொருளாதார வளர்ச்சியும் அதனால் உருவான புகை மிகு நகரங்களும் இப்பலிகளுக்கு பாதை அமைத்தது.

பிரிட்டனில் ஒவ்வோர் ஆண்டும் அடையாளம் காணப்படும் ஒவ்வொரு நூறு நுரையீரல் புற்றுநோயாளிகளில் எட்டு பேருக்கு PM2.5s துகள்களால் அந்நோய் வந்துள்ளது.

காற்று மாசு நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆனால் தனி நபர்களுக்கான நோய் வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என்கிறது கேன்சர் ரிசர்ச் யுகே அறிக்கை.

பட மூலாதாரம், Getty Images

புகைப்பழக்கம் அல்லாத வழிகளில் வரும் நுரையீரல் புற்றுநோய் குறித்து ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தந்துவருகின்றன.

இந்நிலையில் நுரையீரல் புற்றுநோய் குறித்து புகைக்காதோர் மத்தியில் பாதுகாப்பு குறித்த தவறான புரிதல் இருக்கிறது. இது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

நுரையீரல் புற்றுநோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் அது சிகிச்சையை மேலும் கடினமாக்கிவிடும்.

நுரையீரல் புற்றுநோய் தோன்றி முதல் ஆண்டிலேயே சிகிச்சை பெற்றவர்களில் 70% பேர் உயிரோடு உள்ளனர். ஆனால் நோய் முற்றிய பின் சிகிச்சை எடுத்தவர்களில் 14% பேரே பிழைத்துள்ளனர்.

மார்பில் கடும் வலி அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும். குறிப்பாக நீண்ட காலமாக இப்பிரச்னை இருந்தாலோ அல்லது ஆன்டி பயாடிக்ஸ் எடுத்தும் சரியாகாவிட்டாலோ அவசியம் மருத்துவரிடம் செல்லவேண்டும்.

இருமலின் போது ரத்தம் வெளிப்பட்டால் அது ஆபத்தான அறிகுறி. புகைப்பவர், புகைக்காதவர் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காமல் மருத்துவரை பார்ப்பது அவசியம் என்கிறார் டாக்டர் ஸ்வான்டன்.

நான் நுரையீரல் புற்றுநோய் நோயாளி என எவரும் முன் வந்து கூறுவதில்லை என்கிறார் பேர்டு. மார்பக புற்றுநோய் உள்ளிட்ட வேறு புற்றுநோய் உள்ளோர் கூட இதை வெளிப்படையாக கூறுகிறார்கள் என்கிறார் பேர்டு.

நுரையீரல் புற்றுநோய் இருப்பவர் எல்லாருக்கும் புகைப்பதனால்தான் அது வந்தது என்ற பொது நம்பிக்கை உள்ளது. புகைக்கும் பழக்கம் இல்லாதோருக்கு நுரையீரல் புற்று வந்தால் அதற்கு தாங்களே காரணம் என அவர்களே நம்பும் பழக்கம் உள்ளது.

புகைப்போர், அண்மையில் புகை பழக்கத்தை கை விட்டோர், புகைக்காதோர் என எல்லாத்தரப்பிடமும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சோதனை நடத்தினர்.

புற்று நோய் அதிகரிக்கும் பகுதியாக மாறுகிறதா டெல்லியின் ஷிவ் விஹார்?

காணொளிக் குறிப்பு,

புற்று நோய் அதிகரிக்கும் பகுதியாக மாறுகிறதாக டெல்லியின் ஷிவ் விஹார்

சுவாசம் தொடர்பான சிகிச்சை தருபவர் ஒருவரே," புகைப்பதால்தான் உங்களுக்கு இந்நோய் வந்தது" எனக் கூறியதாக சோதனைக்குட்படுத்தப்பட்டவர் ஒருவர் ஆராய்ச்சியாளர்களிடம் கூறினார்.

புகைப்பதே நுரையீரல் புற்றுக்கு காரணம் என்ற நம்பிக்கை பரவி விட்டது. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடக்கும் பன்னாட்டு அளவிலான புற்றுநோய் ஆராய்ச்சியில் நுரையீரல் புற்றுநோய்க்கு குறைவான தொகையே ஒதுக்கப்படுகிறது.

உதாரணமாக கனடாவை எடுத்துக்கொள்ளலாம். உலகிலேயே நுரையீரல் புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் இந்நாட்டுக்கு இரண்டாம் இடம். இங்கு

புற்றுநோய் மரணங்களில் 25% நுரையீரல் புற்றுநோயால் மட்டும் நிகழ்கிறது. ஆனால் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி செலவுகளில் 7%மட்டுமே நுரையீரல் புற்றுநோய்க்கு ஒதுக்கப்படுகிறது.

ஆனால் நம்பிக்கை தரும் வகையில் இந்த நிலை மாறிவருகிறது. 2016-17 நிதியாண்டில் யுனைட்டட் கிங்டமில் நுரையீரல் புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள் 11.5% ஆக உயர்ந்துள்ளது. புற்றுநோய்க்கான

டிராஸர் எக்ஸ் ஆய்வில் ஸ்வான்டன் 13 மில்லியன் பவுண்டு ஒதுக்கீட்டுடன் முன்னிலையில் உள்ளது.

இந்த மையம் 850 நுரையீரல் புற்றுநோயாளிகளை கொண்டு ஆய்வுகள் செய்துவருகிறது. இவர்களிடம் காலம் செல்லசெல்ல நோயின் தன்மை எப்படி மாறுகிறது என மருத்துவர்கள் ஆய்வு செய்கின்றனர்.

நோயாளிகளுக்கு இடையிலான வித்தியாசங்கள், புகைப்பவர், புகைக்காதவர் இடையிலான வித்தியாசங்கள், ஆண், பெண் இடையிலான வித்தியாசங்கள் என புற்றுநோயின் தாக்கங்கள் இந்த ஆய்வுகளில் ஆழமாக அறியப்பட்டது. இவற்றில் கிடைத்த முடிவுகள் தனிப்பட்ட நபர்களுக்கு சிறப்பான புற்றுநோய் சிகிச்சை தர உதவியது.

இவற்றின் மூலம் நுரையீரல் புற்றுநோய்க்கு எதிர்காலத்தில் சிறப்பான சிகிச்சை கிடைக்கும் என்பதற்கான நம்பிக்கை வலுப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :