பிரேசில் விவசாயிகளை பணக்காரர்கள் ஆக்கிய இந்தியாவின் பாரம்பரிய மாடுகள்

  • ஜு ஆவ்ங் ஃபெல்லட்
  • பிபிசி, பிரேசில்

பிரேசிலின் பரானாவைச் சேர்ந்த விவசாயி செல்சோ கார்சியாவை, இந்தியாவில் இருந்து அவரது உதவியாளர் அனுப்பிய கடிதத்துடன் இருந்த ஓர் இளம் காளையின் புகைப்படம் ஈர்த்தது.

செல்சோ தன் உதவியாளர் இல்டெபோன்சோ டோஸ் சோர்சோவை 1958இல் மாடுகள் வாங்க இந்தியாவுக்கு அனுப்பியிருந்தார்.

"இந்த விலங்கைப் பற்றி சொல்லப்படுபவை அனைத்தும் இது குறித்த முழுமையான தகவல்களைத் தராது. இது அவ்வளவு பெரிய உருவம் கொண்டது," என்று சோர்சோ தனது கடிதத்தில் கூறியிருந்தார்.

கிருஷ்ணா என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் காளை, இந்தியாவின் கிர் வகையைச் சேர்ந்தது. அந்தக் காளையை உடனடியாக வாங்குமாறு தனது உதவியாளருக்கு தந்தி அனுப்பினார் அந்த விவசாயி.

1960இல் பிரேசிலுக்கு கொண்டுவரப்பட்ட அந்தக் காளை, கலப்பின இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது. கிருஷ்ணாவின் வழித்தோன்றல்கள் தற்போது பிரேசிலின் பால் உற்பத்தியில் 80% பங்கு வகிக்கின்றன.

"கிருஷ்ணா காளையைக் கொண்டு வந்தது பிரேசில் கால்நடை வளர்ப்பு வரலாற்றில் மிகவும் முக்கியமான திருப்புமுனை," என்கிறார் விவசாயி செல்சோவின் பேரன் குல்ஹெர்ம் சாக்டீன். அந்த கிர் வகைக் காளையின் மரபணுக் கலப்பு பிரேசிலின் பூர்விக மாட்டினங்களின் பால் உற்பத்தித் திறனைக் கணிசமாக அதிகரித்ததாகக் கூறுகிறார் அவர்.

படக்குறிப்பு,

இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளுடன் செல்சோ (மத்தியில்)

கிருஷ்ணா காளை பிரேசில் கொண்டுவரப்பட்ட அதே காலகட்டத்தில்தான் மரபணு மாற்றத் தொழில்நுட்பமும் பிரேசிலில் வளர்ச்சி கண்டது. இது அதிகத் திறன் கொண்ட காளைகள் மற்றும் பசுக்களின் மரபணு பிரேசில் முழுதும் பரவ வழிவகுத்தது.

பிரேசிலில் உள்ள கிர் வகைக் காளைகள் மற்றும் பசுக்களில் 80% கிருஷ்ணா காளையின் வாரிசுகள் என்கிறார் குல்ஹெர்ம். "இப்போது அமெரிக்க கண்டங்களில் உள்ள அனைத்து நாடுகளிலும் கிருஷ்ணாவின் வாரிசுகள் உள்ளன. அந்தக் காளையை இறக்குமதி செய்ததால் கோடிக்கணக்கானவர்கள் பயனடைந்துள்ளனர்," என்கிறார் அவர்.

விவசாயி செல்சோ தனது உதவியாளர் இல்டெபோன்சோவை இந்தியாவுக்கு 1950இல் அனுப்பி வைத்தபோது, அப்போதைய அதிகாரிகள் 1947இல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு அரச குடும்பத்தினருக்குச் சொந்தமான மாடுகளைக் கைப்பற்றி வந்தனர்.

படக்குறிப்பு,

தனது பண்ணையில் குல்ஹெர்ம் சாக்டீன்

தற்போதைய குஜராத்தில் உள்ள, பாவ்நகரின் அரச குடும்பத்தைச் சேர்ந்த மஹாராஜா ஸ்ரீ வீர்பத்ர சிங், தங்கள் குடும்பம் வளர்த்து வந்த மாடுகள் சிலவற்றை, அரசுக்குக் கொடுக்காமல் தன்வசமே வைத்துக்கொள்ள முடிந்தது. அவற்றில் ஒன்றுதான் கிருஷ்ணா எனும் அந்தக் காளை.

1972இல் இறந்த விவசாயி செல்சோவின் வாழ்க்கை வரலாற்றில், பிரேசிலுக்கு அந்தக் காளையைக் கொண்டுவர நடந்த முயற்சிகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

அந்தக் காளையை வாங்கி வருமாறு செல்சோ தனது உதவியாளர் இல்டெபோன்சோவுக்கு உத்தரவிட்டதும், கிருஷ்ணா காளையையும், பிற பசுக்களையும் தனக்கு விற்றுவிடுமாறு இல்டெபோன்சோ மஹாராஜாவை வலியுறுத்தினார்.

சுமார் ஓர் ஆண்டுக்குப் பிறகு அந்த மாடுகள் கப்பல் மூலம் இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு அனுப்பப்பட்டன. மொத்தம் 119 மாடுகளில் 103 மாடுகளே உயிருடன் பிரேசில் வந்தடைந்தன.

செல்சோவின் பண்ணையில் இருந்த கிருஷ்ணாவின் எடை விரைவில் அதிகரித்தது. ஓராண்டில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்தக் காளை இறந்தது.

அடுத்த நாளே விலங்குகளின் உடல்களை பதப்படுத்தி பாதுகாக்கும் நிபுணர் ஒருவரை அழைத்து வந்து கிருஷ்ணாவை பதப்படுத்தினார் செல்சோ.

இறப்பதற்கு சற்று நேரம் முன்பு ஓர் இளம் காளையுடன் கிருஷ்ணா சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக உள்ளூர் தொழிலார்கள் கூறுகின்றனர். கிருஷ்ணாவின் உடலைக் கூராய்வு செய்ததில், அதன் இதயத்தின் ரத்தக்குழாய் ஒன்றில் விரிசல் விட்டிருந்தது தெரிய வந்தது. சண்டையில் உண்டான பதற்றத்தில் அதற்கு மாரடைப்பு உண்டாகியிருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

கொஞ்ச காலம் மட்டுமே பிரேசில் மண்ணில் வாழ்ந்த கிருஷ்ணா ஒரே ஒரு வாரிசைத்தான் விட்டுச் சென்றது.

செயற்கை கருவூட்டல் முறை கிருஷ்ணாவின் மகனான சகினா ஆயிரக்கணக்கான வழித்தோன்றல்களை உருவாக்க உதவியது. சகினா மூலம் கிருஷ்ணாவின் மரபணு பிரேசில் முழுதும் பரவியது.

மாடுகளின் மரபணுவில் முன்னேற்றம் உண்டாகியுள்ளதால் கடந்த 20 ஆண்டுகளில் பிரேசிலின் பால் உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார், முன்னணி வேளாண்மை மற்றும் கால்நடை ஆய்வு நிறுவனமான எம்ப்ரபாவில் உள்ள உயிரியல் ஆய்வாளரான மார்கோஸ் டா சில்வா.

பிரேசிலிய கிர் வகை பசுக்கள் மற்றும் காளைகளை இறக்குமதி செய்ய இந்திய அதிகாரிகள் இந்த நிறுவனத்தை சமீப ஆண்டுகளில் தொடர்பு கொண்டதாக இந்நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

கிர் வகை மாடுகளை மீண்டும் இந்தியாவில் பரவலாக்க அந்த நிறுவனம் இந்தியாவுடன் ஒத்துழைக்கலாம் என்கிறார் செல்சோவின் பேரன் குல்ஹெர்ம்.

இந்தியாவுக்குத் தங்கள் குடும்பம் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளதாகக் கூறும் அவர், இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் மற்றும் பசுக்களைத் தங்கள் எப்போதுமே அரசன் மற்றும் அரசிகளைப் போலவே நடத்தியதாகக் கூறுகிறார்.

தனது தாத்தாவுக்கு தன்னிடம் இருந்த கால்நடைகளின் ஒரு பகுதியை வழங்கிய பாவ்நகரின் மஹாராஜா, தன்னிடம் இருந்த பசுக்கள் மற்றும் காளைகள் எவ்வாறு உள்ளன என்பதை அறிய பிரேசிலுக்கே ஒரு முறை வருகை புரிந்துள்ளார்.

படக்குறிப்பு,

மஹாராஜா ஸ்ரீ வீர்பத்ர சிங் (வலது) பிரேசில் சென்றபோது.

பிரேசிலில் தனது கால்நடைகள் பராமரிக்கப்படும் வித்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட அவர், 1965இல் இறக்கும் முன்பு தனது பண்ணையில் இருந்த அனைத்துப் பசுக்களையும் செல்சோவுக்கு அன்பளிப்பாக வழங்க விழைந்தார்.

இது குறித்து அவர் எழுதிய கடிதத்தை செல்சோவின் குடும்பத்தினர் இன்னும் பத்திரமாக வைத்துள்ளனர்.

எனினும், சுகாதாரக் கட்டுப்பாடுகளால் அவர்களால் மன்னர் வசம் இருந்த மீதமுள்ள மாடுகளை கடைசி வரை பிரேசிலுக்குக் கொண்டு வரவே முடியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :