மீண்டும் அதிகரிக்க தொடங்குகிறதா எச்.ஐ.வி. தாக்கம்?

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

மீண்டும் அதிகரிக்க தொடங்குகிறதா எச்.ஐ.வி. தாக்கம்?

பட மூலாதாரம், Getty Images

கடந்த சில ஆண்டுகளாக எச்.ஐ.வி. தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நிதியுதவிகள் குறைந்து வருவதால், அதன் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் ஆபத்தான சூழல் நிலவி வருவதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே நிலை தொடரும் பட்சத்தில், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் எச்.ஐ.வி. நோய் தொற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கை அடைய முடியாது என்று 'தி லான்செட்' என்ற ஆய்விதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூஜ்டிமோன் மீதான பிடியாணை ரத்து

பட மூலாதாரம், Getty Images

ஸ்பெயினின் கேட்டலோனியா மாகாணத்தின் முன்னாள் அதிபரான சார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள அவரது நான்கு ஆதரவாளர்கள் மீதான ஐரோப்பிய கைதாணையை திரும்ப பெறுவதாக அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கேட்டலோனியா சுதந்திரத்துக்காக கிளர்ச்சியை உண்டாக்கியதாக பூஜ்டிமோன் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்கொள்வதற்காக அவரை ஸ்பெயினிடம் ஒப்படைக்க முடியாது என்று ஜெர்மனின் நீதிமன்றம் ஒன்று தெரிவித்திருந்தது.

எகிப்தில் திறக்கப்பட்ட 2000 வருட மர்ம சவப்பெட்டி

பட மூலாதாரம், EPA

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் எகிப்தின் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட 2000 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாத கருப்பு நிற கிரானைட்டில் செய்யப்பட்ட கல் சவப்பெட்டி திறக்கப்பட்டது.

இதற்குள், பழங்கால கிரேக்க அரசர் அலெக்ஸாண்டரின் உடல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்று எலும்பு கூடுகளும், தாங்கமுடியாத அளவுக்கு மோசமான துர்நாற்றத்தை ஏற்படுத்திய செம்பழுப்பு நிற கழிவுநீரும் இருந்தது தெரியவந்துள்ளது.

பெரு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விலகல்

பட மூலாதாரம், Getty Images

பெருவின் சட்ட அமைப்பையே ஆட்டிப் படைத்ததுடன், தொடர்ந்து பெரிதாகி வரும் ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் புதிய திருப்புமுனையாக அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகியுள்ளார்.

நீதிமன்றம் அளிக்கும் தண்டனைகளை பணம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும் என்று டபுர்லி ரோட்ரிக்ஸ் பேசும் ஒலிநாடா கடந்த வாரம் வெளியாகியதை தொடர்ந்து, அவர் தற்போது பதவி விலகியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :