வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதியளித்த அதிபர்

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதி அளித்த அதிபர்

படத்தின் காப்புரிமை Reuters

வெள்ளையர்களின் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் உறுதி அளித்துள்ளார். இன ஒற்றுமைக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஜிம்பாப்வேயில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி நடந்த பொது கூட்டத்தில் அவர் இவ்வாறாக பேசி உள்ளார்.

ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே அரசாங்கம் நூற்றுகணக்கான வெள்ளைக்கார விவசாயிகளிடமிருந்து நிலத்தை கைப்பற்றுவதை ஆதரித்தது. ஆனால், அவை கடந்த காலம் என்று எமர்சன் கூறி உள்ளார். "கருப்பு விவசாயியோ, வெள்ளை விவசாயியோ, அவர் ஜிம்பாப்வே விவசாயி" என்று தனது உரையில் அதிபர் குறிப்பிட்டார்.

உண்மையான வர்த்தக போர் - எச்சரிக்கும் நிதி அமைச்சர்

படத்தின் காப்புரிமை Reuters

வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது என பிரான்ஸ் நாட்டின் நிதி அமைச்சர் ப்ரூனோ லே மேரே எச்சரித்துள்ளார். அர்ஜென்டினாவில் ஜி 20 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.

தன் நாட்டினை பற்றி மட்டுமே யோசிக்கும் வகையில், அமெரிக்காவின் வரி விதிப்பு கொள்கை ஒருதலைபட்சமாக  இருப்பதாகவும் ப்ரூனோ தெரிவித்தார். ஆனால், இதனை மறுத்த அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் நுசின், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் சந்தைகளை திறந்து, போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் படிக்க:"வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது"

தனது முன்னாள் வழக்கறிஞரை கண்டித்த டிரம்ப்

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் டீ கோஹனை கண்டித்துள்ளார். முன்னாள் ப்ளேபாய் மாடல் கரெனுக்கு பணம் வழங்கியது தொடர்பாக நடந்த உரையாடலை மைக்கேல் ரகசியமக பதிவு செய்தார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள சூழ்நிலையில் டிரம்ப் மைக்கேலை கண்டித்துள்ளார்.

நியூயார்க்கில் உள்ள மைக்கேலுக்கு சொந்தமான இடத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் எஃ.பி.ஐ சோதனை நடத்தியது. அங்கு கைப்பற்றப்பட்ட டேப்புகளில் இந்த உரையாடல் உள்ளதாக கூறப்படுகிறது. அதிபர் டிரம்புடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறும் கரென் மெக் டொகலுக்கு பணம் அளிப்பது தொடர்பாக, டிரம்ப் மற்றும் கொஹென் பேசிக் கொள்ளும் ஆடியோ அதில் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வெப்ப அலை, எச்சரிக்கும் அரசு

படத்தின் காப்புரிமை Reuters

ஜப்பானில் வெப்ப அலை காரணமாக ஏறத்தாழ 30 பேர் பலியானார்கள். கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் வெப்பம் காரணமாக ஏற்பட்ட உடல் நலக் கோளாரினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மத்திய ஜப்பானில் வெப்ப அளவு 40.7 டிகிரி செல்சியஸை எட்டி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் மத்திய மற்றும் மேற்கு ஜப்பானில் பெய்த பெருமழையின் காரணமாக நூற்றுகணக்கானோர் மரணமடைந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :