"வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது": பிரான்ஸ் நிதி அமைச்சர்

"வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது" படத்தின் காப்புரிமை Getty Images

வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது என பிரான்ஸ் நாட்டின் நிதி அமைச்சர் ப்ரூனோ லே மேரே எச்சரித்துள்ளார்.

அர்ஜென்டினாவில் ஜி 20 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.

தன் நாட்டினை பற்றி மட்டுமே யோசிக்கும் வகையில், அமெரிக்காவின் வரி விதிப்பு கொள்கை ஒருதலைபட்சமாக இருப்பதாகவும் ப்ரூனோ தெரிவித்தார்.

ஆனால், இதனை மறுத்த அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் நுசின், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் சந்தைகளை திறந்து, போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கடந்த வாரம் இது தொடர்பாக பேசிய அதிபர் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தகத்தில் எதிரி என்று குறிப்பிட்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை Reuters

மேலும், 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க வரும் அனைத்து சீன பொருட்களுக்கும் கூடுதல் வரிகள் விதிக்கக்கூடும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் அர்ஜென்டினாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உலகின் சிறந்த பொருளாதாரம் கொண்ட முதல் 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

பிரான்ஸ் அமைச்சர் பேசியது என்ன?

தன்னை மட்டுமே யோசித்தால், அதன் அடிப்படையில் இவ்வுலகில் வர்த்தகம் இயங்காது என்று குறிப்பிட்ட அமைச்சர் ப்ரூனோ, வருங்கால சர்வதேச சந்தைக்கு இது ஒத்து வராது என்று தெரிவித்தார்.

இவ்வாறு இருப்பது, வளர்ச்சியை குறைத்து, பலவீனமான நாடுகளை மிரட்டுவது போல உள்ளதாகவும், இதனால் அரசியல் ரீதியான பல விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

வர்த்தக போர் என்ற ஒன்று தற்போது உண்மையாகிவிட்டதாக ப்ரூனோ தெரிவித்தார். மேலும், எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா திரும்பப் பெறாத வரை, அந்நாட்டுடன் சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் கருதாது என்றும் அவர் கூறினார்.

வர்த்தகங்கள் மோசமானது எப்படி?

கடந்த ஜூன் 1ஆம் தேதி, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு பொருட்களுக்கு 25 சதவீதமும், அலுமினிய பொருட்களுக்கு 10 சதவீத வரியையும் டிரம்ப் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.

இதனையடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக போர்பன் விஸ்கி, ஹார்லி டேவிட்சன் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு ஆகிய அமெரிக்க பொருட்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் வரி விதித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்கள் மீதும் வரி விதிக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக டிரம்ப் மிரட்டியிருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம், வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ள 200 டாலர் பில்லியன் மதிப்பிலான கூடுதல் சீன பொருட்களை அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது.

அதில் உணவு பொருட்கள், ஹேன்ட் பேக் போன்ற 6000 பொருட்களுக்கு 10 சதவீதம் விரி விதிக்கப்பட உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்