‘தனி ஒருவனின் கதை’: அமேசானில் 22 ஆண்டுகள் தனி ஆளாக வாழ்ந்து வரும் மனிதன்

கடந்த 22 ஆண்டுகளாக பிரேசில் நாட்டில் அமேசான் காட்டுப் பகுதியில் தனி ஆளாக வாழ்ந்து வருகிறார் ஒரு பழங்குடி இன ஆண். இது தொடர்பான ஒரு காணொளி காட்சியை பிரேசில் அரசாங்கத்தின் ஃபுனாய் குழுமம் வெளியிட்டு இருக்கிறது.

தனது இனக்குழுவில் உள்ள அனைவரும் கொல்லப்பட்டப் பின் அவர் மட்டும் தப்பி பிழைத்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

ஃபுனாய் வெளியிட்டுள்ள அந்தக் காணொளியில் திடகாத்திரமான அந்த பழங்குடி மரங்களை கோடரி கொண்டு வெட்டும் காட்சிகள் இருக்கின்றன.

இந்த காணொளி காட்சியானது உலகெங்கும் பரவி இருந்தாலும், நமக்கு தெரியாத பல விஷயங்களும் இதில் இருக்கின்றன.

தனி ஒருவனின் கதை

ஏறத்தாழ 4000 ஹெக்டேர் பரப்பளவுக்கு அவர் வசிக்கும் பகுதி பரவி இருக்கிறது. அந்த இடத்தை சுற்றி தனியார் பண்ணைகளும், அழிக்கப்பட்ட காட்டு பகுதிகளும் இருக்கின்றன. ஆனால், அவர் வசிக்கும் பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. யாரும் காட்டிற்குள் சென்று அந்த மனிதருக்கு தொல்லை தரக் கூடாது என்பதற்காகதான் இந்த தடை.

ஃபுனாய் அமைப்பு 1996 ஆம் ஆண்டிலிருந்து அந்த தனி மனிதனை பின் தொடர்ந்து இந்த காணொளி காட்சியை உருவாக்கி இருக்கிறது. இன்னும் அந்த பகுதியில் ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அதனால் அவர் வசிக்கும் வட மேற்கு ரொன்டோனியா பகுதியின் மீது இருக்கும் தடையை நீட்டிக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த காணொளியை உருவாக்கி இருக்கிறார்கள்.

பிரேசில் நாட்டின் அரசமைப்பு சட்டத்தின்படி, அந்த நாட்டில் பூர்வகுடிகளுக்கு நிலத்தின் மீது உரிமை இருக்கிறது.

பழங்குடிகள் நல்வாழ்வுக்காக பணி செய்யும் சர்வைவல் இன்டர்நேஷனல் எனும் அரசு சாரா அமைப்பை சேர்ந்த ஃப்யோனா வாட்சன், "இந்த மனிதன் உயிரோடு இருக்கிறார் என்று அவர்கள் தொடர்ந்து நிரூபித்து கொண்டிருக்கிறார்கள்" என்கிறார்.

மேலும் அவர், இந்த காணொளியை இப்போது வெளியிடுவதற்கு பின்னால் அரசியல் நோக்கமும் இருக்கிறது என்கிறார்.

மண்ணின் மக்களுக்கு உள்ள உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் அவரின் இருப்பு குறித்து சொல்வது முக்கியமானதாக ஆகிறது என்கிறார்.

'வேறென்ன குறிப்புகள் '

அந்த தனி ஒருவன் குறித்து வேறென்ன குறிப்புகள் உள்ளன?

மிகக் குறைவான தரவுகளே உள்ளன. பல ஆராய்ச்சிகள் அந்த மனிதர் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. பத்திரிகைகளில் கட்டுரைகள் வந்துள்ளன. அமெரிக்க பத்திரிகையாளர் மோன்டி ரீல் எழுதிய 'தி லாஸ்ட் ஆஃப் தி ட்ரைப்: தி எபிக் குயஸ்ட் டு சேவ் எ லோன் மேன் இன் தி அமேசான்' என்ற ஒரு புத்தகமும் வந்துள்ளது.

யாரும் தொடர்பு கொள்ளாத மனிதர் என்ற பட்டியலில் அவர் இருக்கிறார். வெளி மனிதர்கள் யாரும் அவருடன் தொடர்பு கொண்டதே இல்லை என்பதுதான் இதன் பொருள் .

ஆறு பழங்குடிகளுடன் அவர் வசித்து இருக்கிறார். 1995 ஆம் ஆண்டு விவசாயிகள் அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து இருக்கிறார்கள். அந்த வன்முறை தாக்குதலில் தப்பி பிழைத்தவர் இவர் மட்டும்தான்.

அந்த பழங்குடி இனக்குழுவுக்கு இதுவரை பெயரிடப்படவில்லை. அவர்கள் என்ன மொழி பேசுகிறார்கள் என்றும் தெரியாது.

கடந்த காலங்களில் வைக்கோலால் வேயப்பட்ட வீட்டில் அவர் வசித்திருக்கிறார். அவரிடம் கைகளால் செய்யப்பட்ட கருவிகளும் இருந்துள்ளன.

ஏன் இந்த காணொளி காட்சி முக்கியமானதாக கருதப்படுகிறது?

இது நாள் வரை அவரின் கலங்கலான ஒரே ஒரு புகைப்படம்தான் அவரின் இருப்பிற்கு சாட்சியாக இருந்தது. ஒரு திரைப்பட இயக்குநர் அந்த புகைப்படத்தை எடுத்திருந்தார். ஃபுனாய் அமைப்புடன் இணைந்து ஒரு கண்காணிப்பு பயணம் மேற்கொண்ட போது அந்த புகைப்படத்தை அவர் எடுத்திருந்தார்.

செயற்பாட்டாளர்கள் இந்த காணொளி மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்கிறார்கள். அவர்கள், "அந்த மனிதர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார். இது மகிழ்ச்சியையும், வியப்பையும் தருகிறது" என்கிறார்கள்.

"அவர் ஆரோக்கியமாக, வேட்டையாடும் திறனுடன் இருக்கிறார். பப்பாளி மற்றும் சோளப் பயிர்களை பராமரித்து வருகிறார்" என்று கார்டியனிடம் தெரிவித்து இருக்கிறார் ஃபுனாய் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் அல்டைர் அல்கையர்.

அந்த மனிதர் வெளியுலக தொடர்புகளை விரும்புவது இல்லை. அப்படி அவருடன் தொடர்பு கொள்ள முயன்றவர்கள் வில்லால் தாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிறார் அல்டைர்.

'வெளிமனித தொடர்பு'

ஏன் அவர் வெளிமனிதர்களுடம் தொடர்பு கொள்வதை விரும்புவதில்லை? - இந்த கேள்விக்கான விடை அவர் கடந்த காலங்களில் எதிர்கொண்ட அனுபவங்களில் இருக்கிறது. "வன்முறை நிறைந்த அனுபவத்தைதான் அவர் எதிர் கொண்டு இருக்கிறார். அவரை பொருத்த வரை இவ்வுலகம் மிக அபாயகரமானது." என்கிறார் ஃயோனா வாட்சன், இவர்தான் அந்த பழங்குடி வாழ்ந்த பகுதியையும், அவரின் வசிப்பிடத்தையும் பார்வையிட்டவர்.

இந்த காணொளி துயர்மிகுந்த ஒன்றாக இருந்தாலும், அவரை பாதுகாக்க இந்த காணொளி தேவை என்கிறார்.

'அபாயகரமான வாழ்வு'

சாலை அவர்கள வாழ்வில் பேராபத்தை கொண்டு வந்து இருக்கிறது. அந்த பகுதியில் சாலை போடப்பட்டதும் வணிகம் செய்ய, நிறுவனம் அமைக்க என்று பலர் அங்கு வந்து இருக்கிறார்கள். இது 1970 - 1980 இடையேயான காலக்கட்டத்தில் நடந்து இருக்கிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் வசித்த, பெரும் எண்ணிக்கையிலான பழங்குடிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இப்போதும், விவசாயிகளும், சட்டவிரோத மர வணிகர்களும் அவர் நிலத்தை குறி வைத்து காய் நகர்த்துகிறார்கள்.

அந்த பழங்குடியும் துப்பாக்கி ஏந்திய குழுவை பல முறை எதிர்கொண்டிருக்கிறார்.

ஃபுனாய் அமைப்பு கண்காணிப்பிற்காக அந்த காட்டு பகுதிக்கு சென்றது. தங்குவதற்காக தற்காலிக கேம்ப் அமைத்து இருந்தது. ஆனால், இந்த கேம்பை சில ஆயுதமேந்திய குழுக்கள் சூறையாடி இருக்கின்றன.

சர்வைவல் இன்டர்நேசஷனல் ஆய்வின்படி, வெளி உலக தொடர்பு இல்லாத பல பழங்குடி குழுக்களுக்கு அமேசான் காடுதான் தாய்நிலமாக இருக்கிறது.

பழங்குடிகளுக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைவு என்பதால், அவர்கள் வெளி மனிதர்களுடன் தொடர்பு கொள்வது, அவர்களுக்கு சில தொற்று நோய்கள் வர காரணமாக அமையலாம்.

"அவரை பற்றி தெரிந்துக் கொள்ள தேவை எதுவும் இல்லாமல் நமக்கு இருக்கலாம். ஆனால், பாரிய அளவில் மனித பன்முகதன்மையை நாம் இழந்து வருகிறோம் என்தற்கான சான்று அவர்." என்கிறார் வாட்சன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :