சிரியாவில் இருந்து 'வெள்ளை ஹெல்மெட்' குழுவினர் வெளியேற்றம்- இஸ்ரேலுக்கு கண்டனம்

சிரியாவில் இருந்து வெள்ளை ஹெல்மெட்டுகள் என்று அழைக்கப்படும் சிவில் பாதுகாப்புக் குழுவினர் வெளியேற்றப்பட்டு அவர்கள் இஸ்ரேல் வழியாக ஜோர்டானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதற்கு சிரியா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption போர் பாதித்த பகுதி ஒன்றில் வெண்புறாவைப் பறக்கவிடும் வெள்ளை ஹெல்மெட் குழுவினர்.

சிரியாவின் தென் பகுதியில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் அரசுப் படைகள் முன்னேறி வருகின்றன.

அந்தப் பகுதி அரசின் வசமானால், வெள்ளை ஹெல்மெட்டு குழுவினர் ஆபத்துக்கு உள்ளாகலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து சண்டைப் பகுதியில் இருந்து சுமார் 422 வெள்ளை ஹெல்மெட் குழுவினரும் அவர்களது குடும்பத்தினரும் வெளியேறி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதி வழியாக ஞாயிற்றுக்கிழமை ஜோர்டான் அழைத்துச்செல்லப்பட்டனர்.

"வெள்ளை ஹெல்மெட் குழுவினர் வெளியேற்றப்பட்டது இஸ்ரேலும் அவர்களது கருவியாக செயல்பட்டவர்களும் செய்த குற்ற நடவடிக்கை" என்று விமர்சித்துள்ளது சிரியா.

"இந்த வெறுக்கத்தக்க செயலைப் பற்றி விமர்சிப்பதற்கு கண்டனச் சொற்கள் போதுமானதல்ல" என்று திங்கள்கிழமை கூறியது சிரியாவின் வெளியுறவு அமைச்சகம்.

வெள்ளை ஹெல்மெட்டுகள் "பயங்கரவாதிகளை" ஆதரித்ததாகவும், இந்தக் குழுவின் அபாயங்கள் பற்றி உலகை எச்சரித்ததாகவும் சிரியாவின் அரசு செய்தி முகமை சானா கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption போர்க் களத்தில் தீயணைப்புப் பணியில் வெள்ளை ஹெல்மெட்டு குழுவினர்.

வெள்ளை ஹெல்மெட்டு குழுவினர் மேற்கத்திய நாடுகளின் ஏஜென்டுகள் என்று கருதுகிறது அதிபர் பஷார் அல் அஸாத் அரசு. அவர்கள் கிளர்ச்சியாளர்களை ஆதரிப்பதாகவும், ஜிகாதிக் குழுக்களோடு அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும், பஷார் அல் அஸாத்தின் ஆதரவு சக்திகளும், கூட்டாளி நாடான ரஷ்யாவும் சொல்கின்றன.

ஆனால் குண்டு வீச்சுக்கு உள்ளான கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் அவர்கள் மேற்கொண்ட மீட்புப் பணிகளுக்காக அவர்களை நாயகர்களாகப் பார்க்கின்றனர் பஷார் அல்-அஸாத்தின் எதிராளிகள்.

தாங்கள் தன்னார்வலர்கள் என்றும், சிரியாவின் போர்க் களப் பகுதிகளில் மக்களைக் காப்பதற்காக செயல்பட்டதாகவும், வெள்ளை ஹெல்மெட் குழுவினர் தங்களைப் பற்றிக் கூறுகின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் வேண்டுகோளை ஏற்று வெள்ளை ஹெல்மெட் குழுவினர் வெளியேற உதவியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறுகிறது. சிரியாவின் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைக்குப் பிறகு தென் மேற்கு சிரியாவில் கோல்டன் ஹைட்ஸ் பகுதிக்கு அருகே எல்லைப் பகுதியில் இக்குழுவினர் சிக்கிக் கொண்டிருந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்