பாகிஸ்தான் தேர்தல்: மோதியைப் பற்றி இம்ரான்கான் என்ன நினைக்கிறார்?

பாகிஸ்தானில் புதன்கிழமை நடந்த தேசிய மற்றும் மாகாண தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தாமதமாக வெளியாகிவரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி முன்னிலை வகித்துவருகிறது.

பாகிஸ்தானில் அதிகாரம் மிக்கதாக இருக்கும் ராணுவத்துக்கு விருப்பமான வேட்பாளரான இம்ரான்கான் பிரதமராகும் வாய்ப்பு அதிகம் என்று தேர்தலுக்கு முன்பிருந்தே அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலகக் கோப்பை வென்று தந்தவரான இம்ரான்கான், தற்போது நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் இருக்கிறார்.

நீதித்துறையும், நாட்டின் சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பான ராணுவமும் தேர்தலில் மோசடி செய்வதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன; ஆனால் குற்றச்சாட்டுகளை நீதித்துறையும், ராணுவமும் மறுக்கின்றன.

இந்நிலையில், காஷ்மீர் பிரச்சினை, இந்தியா-சீனாவுடன் உறவு, ராணுவ அதிகாரம் ஆகியவை பற்றியும், இந்தியப் பிரதமர் மோதி பற்றியும் இம்ரான்கானின் கொள்கைகள் என்ன, அவரது ஆளுமை வளர்ந்தது எப்படி என்று பார்ப்பது சுவாரசியமானது.

பாகிஸ்தான் நாடாளுமன்ற மற்றும் மாகாணத் தேர்தல்களில் போட்டியிட்ட மூன்று முக்கிய கட்சிகளுள் ஒன்று இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி (பி.டி.ஐ).

படத்தின் காப்புரிமை AAMIR QURESHI/AFP/GETTY IMAGES

இம்ரான் கான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கான், நாட்டில் மிகவும் பிரபலமானவர், வலுவான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்ததற்காக அனைவராலும் பரவலாக நினைவுகூரப்படுபவர் இம்ரான்கான். அதுமட்டுமல்ல, நாட்டின் மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் கேப்டனாக இவர் கருதப்படுகிறார்.

1996ஆம் ஆண்டு அரசியலில் கால் பதித்த இம்ரான்கான் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

ஆனால் 2013 தேர்தலில் தான், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக உருவானது பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி.

ராணுவத்தின் மறைமுகமான ஆதரவு எப்போதுமே இம்ரான்கானுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ராணுவத்தின் செல்லப்பிள்ளை என்றும், பிடித்தமானவர் என்றும் அவரது அரசியல் போட்டியாளர்கள் குறிப்பிடுவது வழக்கம் என்றாலும், தனது கட்சியின் பிரபலத்திற்கு ராணுவத்தின் ஆதரவு இல்லை என இம்ரான்கான் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை AFP

2018 தேர்தல்களில் ராணுவம் தனது கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை இம்ரான் மறுக்கிறார். முழுநேர அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பு, பிரிட்டனில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்ததற்காக அனைவராலும் அறியப்பட்டார் இந்த பிரபல தலைவர்.

மூன்று முறை திருமணம் செய்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரரின் தனிப்பட்ட வாழ்க்கையில், உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் அதிக அக்கறை காட்டுகின்றன.

தற்போது, மதப்பற்று கொண்ட, பிரபல தலைவராக திகழ்கிறார் இம்ரான்கான்.

65 வயது இம்ரான்கான் தனது நலப்பணிகளுக்காகவும் அறியப்படுகிறார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது தாயின் பெயரில் இலவச புற்றுநோய் மருத்துவமனை ஒன்றை அவர் கட்டினார்.

படத்தின் காப்புரிமை AFP

முக்கிய பிரச்சினைகளின் இம்ரான் கானின் நிலை

இம்ரான்கானின் தேர்தல் பிரச்சாரத்தில் ஊழலுக்கு எதிரான முழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழல் செய்ததாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தவர்களில் இம்ரான்கானும் ஒருவர்.

நவாஸ் ஷெரிஃபுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்ததிலும், பொதுத் தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக அவர் சிறைக்கு சென்றதிலும் இம்ரான்கானின் கட்சிக்கு முக்கிய பங்கு உள்ளது.

வாரிசு அரசியலை தொடர்ந்து விமர்சித்துவரும் இம்ரான்கான், அதுவே பாகிஸ்தானின் நிர்வாகம் ஒழுங்கற்று இருப்பதற்கும், பலவீனமான நிர்வாக அமைப்பிற்கும் அடிப்படைக் காரணம் என்று கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை AAMIR QURESHI / GETTTY IMAGES

நாட்டின் அரசியலில் ராணுவத்தின் பங்கை பி.டி.ஐ தலைவர் ஒருபோதும் எதிர்த்ததில்லை. அரசியல் தலைவர்களுக்கும், ராணுவத் தலைவர்களுக்கும் இடையிலான முக்கியமான உறவுகளை முறையாக நிர்வகிப்பதுதான் சரியான நிர்வாகம் என்று இம்ரான்கான் கூறுகிறார்.

"செயல்படும், நன்மைகளை செய்யும் ஜனநாயக அரசுகளை கொண்டிருப்பது பலம். பாகிஸ்தான் அரசியலில் ராணுவத்தின் செல்வாக்கு இருக்கிறது. ஏனெனில் நாங்கள் மோசமான அரசாங்கங்களை பார்த்திருக்கிறோம்.

நான் அதை நியாயப்படுத்தவில்லை, ஆனால் வெற்றிடம் ஒன்று இருந்தால் அதை எதாவது நிரப்பித்தானே ஆகவேண்டும்" என்று இம்ரான்கான் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாக டான் பத்திரிகை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை SHAUN CURRY/ GETTY IMAGES

இந்தியாவுடனான உறவுகள் உள்ளிட்ட பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கைகள் பற்றிய இம்ரானின் கருத்துகள் பிரபலமானவை. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் கொள்கைகளே காரணம் என்று இம்ரான்கான் குற்றம் சாட்டுகிறார்.

"பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிப்பதுதான் நரேந்திர மோதி அரசின் கொள்கை என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருக்கின்றனர்.

ஏனெனில் அவர்கள் காஷ்மீரில் செய்துவரும் அனைத்து காட்டுமிராண்டித்தனத்திற்கும் பாகிஸ்தானையே குற்றம் சாட்ட விரும்புகிறார்கள்" என டான் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இம்ரான்கான் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை JEWEL SAMAD / GETTTY IMAGES

இஸ்லாமியத் தீவிரவாதத்தின் மீதான தனது "மென்மையான" நிலைப்பாட்டிற்காக விமர்சனங்களை எதிர்கொள்ளும் இம்ரான்கான், தீவிரவாதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இம்ரான்கானின் எதிர்ப்பாளர்கள் அவரை "தலிபான் கான்" என்று குறிப்பிடுகின்றனர்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் இம்ரான், பாகிஸ்தானில் நிலவும் பயங்கரவாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வது அவசியம் என்று கூறுகிறார்.

ஆஃப்கன் அதிபர் அஷ்ரப் கானி தலிபான்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை சுட்டிக்காட்டும் இம்ரான்கான், தனது நிலைப்பாடு சரியானது என்று கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை AFP

கட்சியும் அதன் வாக்குறுதிகளும்

தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், பாகிஸ்தானை "இஸ்லாமியர்களின் நலன்களுக்கான அரசு" ஆக மாற்றுவதாக உறுதியளித்துள்ளார் இம்ரான்கான்.

"புதிய பாகிஸ்தான்" என்பதை குறிப்பிடும் பி.டி.ஐ கட்சியின் தேர்தல் அறிக்கை, ஆட்சியில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்துவதாகவும், ஊழலை வேரோடு ஒழிப்பதாகவும், "உண்மையான பொறுப்பை" கொண்டு வருவதாகவும் உறுதிகூறுகிறது.

சமூக ஊடகங்களில் நடைபெறும் அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்களில் பி.டி.ஐ கட்சி வலுவான முன்னிலை வகிக்கிறது. சமுக ஊடகங்களில் வலுவாக இருக்கும் அக்கட்சிக்கு, பாகிஸ்தான் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது.

2013 தேர்தலில், இந்தியாவுடனான காஷ்மீர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவது என்பது பி.டி.ஐ கட்சியின் முக்கிய நான்கு திட்டங்களில் ஒன்றாக இருந்தது. இருந்தபோதிலும், ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், இந்த தேர்தலில், அதன் தேர்தல் அறிக்கையில் இந்த பிரச்சினை பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது.

படத்தின் காப்புரிமை WARRICK PAGE/GETTY IMAGES

காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தீர்மானங்களின் முடிவுகளுக்கு உட்பட்டு தீர்க்கும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதாக பி.டி.ஐ உறுதி கூறுகிறது. இது, பாகிஸ்தானின் பாரம்பரிய நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டது.

கிளர்ச்சிகள் அதிகரித்திருக்கும் பலூசிஸ்தான் மாகாணத்தில், "பலூச் தலைமையிடமும், அதிருப்திமிக்க பலூச் குழுக்களிடமும், குறிப்பாக இளைஞர்களிடம் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தை வழங்குவதாக உறுதி கூற வேண்டும்" என்று பி.டி.ஐ கூறுகிறது.

சீனாவுடனான உறவுகளை பலப்படுத்தப்போவதாகவும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை (CPEC) திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதாகவும் இம்ரான்கானின் பி.டி.ஐ கட்சி உறுதியளித்துள்ளது.

"உள்நாட்டு வளங்களை மையமாகக் கொண்டிருக்கும் CPEC மற்றும் OBOR [சீனாவின் பெல்ட் மற்றும் சாலை வர்த்தக முயற்சிகளின்] திட்டங்களின் வர்த்தக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, சீனாவுடன் வலுவான இரு வழி இணைப்புகளை நாங்கள் உருவாக்குவோம், வளர்ச்சி உத்திகளை ஊக்குவிப்போம்" என்று பி.டி.ஐ கட்சி உறுதியளித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

இந்தச் செய்தி குறித்து மேலும்