உலகப் பார்வை: சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள்: 200க்கும் மேற்பட்டோர் பலி

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள்

பட மூலாதாரம், AFP

தென் மேற்கு சிரியாவில் நடந்த ஒருங்கிணைந்த தாக்குதல்களில் குறைந்தது 215 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஒரு கண்காணிப்பு குழுவும் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை நடந்த இந்த தாக்குதல்களை தாங்கள் நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியா அரசின் பிடியில் உள்ள சுவேடா நகரிலும், புறநகர் பகுதிகளிலும் பல தற்கொலைப்படை தாக்குதல்கள் நடந்துள்ளன.

உறவை வலுவாக்க ஒப்புதல்

பட மூலாதாரம், Getty Images

புதன்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜாங் க்ளோட் உன்கருடன் தான் நடத்திய சந்திப்புக்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமெரிக்காவுக்கு உள்ள வர்த்தக ரீதியான தடைகளை சற்றே தளர்த்த அமெரிக்கா முயலும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே சேவை துறைகள் மற்றும் விவசாயத் துறையில் தற்போதுள்ள வர்த்தக உறவை மேலும் வலுவாக்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே நிலவும் பதற்றத்துக்கு மத்தியில், இந்த இரு தலைவர்களின் சந்திப்பும், ஒப்பந்தங்கள் கையெழுத்தும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் பங்குகள் சரிவு

பட மூலாதாரம், Reuters

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் பங்குகள் புதன்கிழமையன்று 20 சதவீதம் குறைந்து காணப்பட்டன. ஃபேஸ்புக்கின் வருவாய் மற்றும் அதன் பயன்பாட்டாளர்கள் குறைந்துள்ளதால், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு குறுகியதாக கூறப்பட்டுள்ளது.

ஜூன் மாத இறுதியில் 2.23 பில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டிருந்ததாக கூறப்படும் அந்நிறுவனம், போலி செய்திகள் மற்றும் தனிநபர் தகவல்களை பாதுகாக்கவில்லை என விமர்சிக்கப்பட்டது.

குடியரசு கட்சியினர் முயற்சி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

ராட் ரோஸன்ஸ்டீன்

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை நீதித்துறை அதிகாரியான ராட் ரோஸன்ஸ்டீன் மேற்பார்வையிடுவதை தடுக்க குடியரசு கட்சியினர் முயற்சித்து வருகின்றனர்.

விசாரணைகளுக்கு அவர் தடையாக உள்ளார் என்று குடியரசு கட்சியினரின் குற்றச்சாட்டை நீதித்துறை மறுத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :