பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிய பெண்கள்

பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக மிக அதிக அளவிலான பெண்கள் அங்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டனர்.

படத்தின் காப்புரிமை TWITTER/FACEBOOK

அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் தேர்தலில், நாடாளுமன்றத்திற்கு பல புதுமுகங்கள் அறிமுகமாகியிருக்கின்றனர். புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இம்ரான்கானின் பி.டி.ஐ கட்சி அரசமைக்கப் போவதை உறுதி செய்தது.

கிரிக்கெட்டில் சிறப்பான பங்களித்து, சிறந்த வீரராக பரிணமித்த இம்ரான் கான், அரசியல் கட்சி தொடங்கி பாகிஸ்தான் அரசியலில் முக்கியமான இடத்தை பெற்றாலும், முக்கிய மூன்று கட்சிகளில் ஒன்று என்ற நிலையில் தான் அவரது பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சி இருந்தது.

பாகிஸ்தானின் அரசியல் சூழலை ஒரு ஊழல் வழக்கு மாற்றிப்போட, வழக்கிற்கு வித்திட்ட இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகிறார். பாகிஸ்தானில் அரசியல் நிலைமைகள் மாறியது போலவே பெண்களின் பங்களிப்பிலும் இந்த தேர்தல் ஒரு முக்கியமான மாற்றத்தை பதிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் தேர்தல்

2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் தேர்தல் சட்டத்தின் 206வது பிரிவின்படி, நாட்டின் அனைத்து கட்சிகளும் தேர்தலில் 5 சதவிகித பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இதனால், பல்வேறு கட்சிகளும் தற்போது 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட மொத்தம் 171 பெண்களை வேட்பாளர்களாக களம் இறக்கின.

பாகிஸ்தான் மக்கள் கட்சி அதிகபட்சமாக 19 பெண் வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தால், வலதுசாரி கட்சியான முதாஹிதா மஜ்லிஸ்-இ-அமல் (எம்.எம்.ஏ) கட்சி 14 பெண்களை தேர்தல் களத்தில் இறக்கியது.

படத்தின் காப்புரிமை SHAUN CURRY/ GETTY IMAGES

பி.டிஐ கட்சி 11 பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க, ஜமாத்-உத்-தாவாவின் அல்லாஹ்-ஓ-அக்பர் கட்சி மூன்று பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தது.

2018 தேர்தல் களத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள்

பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக மிக அதிக அளவிலான பெண்கள் தேர்தல் களத்தில் இறக்கப்பட்டனர். 2013ஆம் ஆண்டு தேர்தலில் 135 பெண்கள் தான் தேர்தலில் போட்டியிட்டனர்.

ஆணாதிக்கம் மிக்க கபாய்லி தொகுதியின் முதல் பெண் வேட்பாளர் அலி பேகம் என்பதை குறிப்பிட்டுச் சொல்லாம்.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் ஒரு விதிமுறையின்படி, எந்தவொரு தொகுதியிலும் பெண் வேட்பாளர்களின் பங்களிப்பு 10 சதவிகித்ததிற்கும் குறைவாக இருந்தால் தேர்தல் நடைமுறை ரத்து செய்யப்படவேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் அரசியல் கட்சிகள் அனைத்துமே தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தாலும், கட்சிகள் பலவீனமாக இருக்கும் தொகுதிகளிலேயே பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்ததாக எல்லா கட்சிகளின் மீதும் மகளிர் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த சூழ்நிலையில் இந்த தேர்தலில் சில பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

Image caption பாகிஸ்தானில் பெண்கள் மட்டும் வாக்களிக்கும் வகையில் சிறப்பு வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

ஜுக்னூ மோஹ்சின்

பஞ்சாப் பிராந்தியத்தில் ஜுக்னூ மோஹ்சின் வெற்றி பெற்றுள்ளார். சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கிய இவர் வெற்றிப் பெற்று அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பஞ்சாப் மாகணத்தின் முன்னாள் முதலமைச்சர் நஜம் சேடியின் மனைவி ஜுக்னூ மோஹ்சின். நஜம் சேடி தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பதவி வகிக்கிறார்

பத்திரிகையாளரான ஜுக்னூ, 'த ஃப்ரைடே டைம்ஸ்' பத்திரிகையின் நிறுவனர்.

நவாஸ் ஷெரீஃப் அரசு 1999ஆம் ஆண்டில் நஜம் சேடியை பத்திரிகையுடன் தொடர்புடைய விவகாரங்களுக்காக கைது செய்தது.

கணவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேச அளவில் பிரசாரத்தை முன்னெடுத்த ஜுக்னூ, பிரபலமானார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption ஜுக்னூ மோஹ்சின்

ஜர்தாஜ் குல்

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இன்சாஃப் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கிய ஜர்தாஜ் குல், தெற்கு பஞ்சாப் மாகாணத்தின் 191 டேரா காஜி கான்-III தொகுதியில் வெற்றி பெற்றார்.

ஜர்தாஜ் குல், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சர்தார் ஓவைஸ் லெக்ரீயை தோற்கடித்தார்.

79 ஆயிரத்து 817 வாக்குகளை ஜர்தாஜ் குல் பெற, அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர் 54 ஆயிரத்து 548 வாக்குகளை பெற்றார்.

வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்ட பிறகு, ஜர்தாஜ் குல் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் அல்லாவுக்கும், கட்சித் தலைவர் இம்ரான்கானுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

1994ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஃபாடா பிராந்தியத்தில் பிறந்த ஜர்தாஜ் குல்லின் தந்தை வஜீர் அஹ்மத் ஜயீ, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை TWITTER/ZARTAJ GUL
Image caption ஜர்தாஜ் குல்

ஷம்ஸ் உன் நிசா

பாகிஸ்தான் மக்கள் கட்சியில் ஈடுபாட்டுடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடும் ஷம்ஸ் உன் நிசா, தாடா பகுதியில் வேட்பாளராக களம் இறங்கி, வெற்றிக்கனியை பறித்துவிட்டார்.

ஷம்ஸ் உன் நிசா பெற்ற வாக்குகளே அவரது தொகுதியில் அவருக்கு கிடைத்த ஆதரவை பறை சாற்றுகிறது. 1,52,691 வாக்குகளை ஷம்ஸ் உன் நிசா பெற, இரண்டாவது இடத்தை பிடித்த பி.டி.ஐ வேட்பாளர் அர்ஸ்லன் பக்‌ஷ் ப்ரோஹி 18,900 வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது.

இதே தொகுதியில் 2013ஆம் ஆண்டிலும் ஷம்ஸ் உன் நிசா வெற்றி பெற்றார். இரட்டை குடியுரிமை வைத்திருந்த குற்றச்சாட்டில் 2013இல் சாதிக் அலி மேமனுக்கு வாய்ப்பு பறிபோக, ஷம்ஸ் உன் நிசாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

டாக்டர் ஃபஹ்மீதா மிர்ஜா

நாடாளுமன்றத்தின் முன்னாள் அவைத் தலைவர் டாக்டர் ஃபஹ்மீதா மிர்ஜா, தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கிராண்ட் டெமாக்ரடிக் அலயன்ஸ் (ஜி.டி.ஏ) கட்சியின் சார்பில் சிந்து மாகாணத்தின் வாதின் தொகுதியில் போட்டியிட்ட ஃபஹ்மீதா ஐந்தாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகிறார்.

ஒரே தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெறும் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமையையும் ஃபஹ்மீதா மிர்ஜா பெற்றுள்ளார்.

1997ஆம் ஆண்டு பி.பி.பி கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஃபஹ்மீதா, 2002, 2008, 2013 தேர்தல்களிலும் பி.பி.பியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் பி.பி.பி கட்சியை விட்டு விலகி ஜி.டி.ஏவுடன் இணைய முடிவெடுத்தார் ஃபஹ்மீதா.

படத்தின் காப்புரிமை FACEBOOK/NA225
Image caption ஃபஹ்மீதா மிர்ஜா

பாகிஸ்தான் தேர்தலில் பெண்கள் முன்பைவிட அதிகரித்து வருவது அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பதற்கு காரணமாகலாம். பெண்களின் நிலையையும் முன்னேற்றலாம்.

இருந்தபோதிலும், பாகிஸ்தான் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது நீண்டகாலமாக இருந்து வந்திருப்பதையும் காணமுடிகிறது. பெனசீர் பூட்டோ பிரதமராக பதவி வகித்திருக்கிறார். நவாஜ் ஷெரீஃபின் மகள் மரியம் ஷெரீஃப் முதல் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கார் வரை பாகிஸ்ஹானின் அதிகாரம் மிக்க நாற்காலிகளை ஏற்கனவே பல பெண்கள் அலங்கரித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்

இந்தச் செய்தி குறித்து மேலும்