கடலுக்கு அடியில் புதைக்கப்படும் ராணுவ டாங்கிகள் - ஏன்?

  • 29 ஜூலை 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

கடலுக்கு அடியில் ராணுவ டாங்கிகள்

படத்தின் காப்புரிமை EPA

போருக்கு மட்டும் அல்ல சுற்றுசூழலுக்காகவும் ராணுவ டாங்கிகளை பயன்படுத்தலாம் என்று தங்கள் செயல் மூலம் காட்டி இருக்கிறார்கள் லெபனான் சூழலியலாளர்கள். ஆம், அவர்கள் கடல் உயிரினங்களுக்கு புகலிடம் தருவதற்காக கடலுக்கடியில் 10 பழைய ராணுவ டாங்கிகளை செலுத்தி இருக்கிறார்கள். இந்த ராணுவ டாங்கிகள் அனைத்தும் கடலில் மூன்று கி.மீ அழத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனை சுற்றி விரைவில் கடல்பாசி வளரும், கடல் உயிரினங்களின் வசிப்பிடமாக இது மாறும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த பழைய ராணுவ டாங்கிகள் அனைத்தும் இஸ்ரேலை நோக்கி கடலுக்கடியில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

சிடோன் கடற்கரையின் நண்பர்கள் என்ற அமைப்பை சேர்ந்த காமில் கோஸ்பர், "பாலத்தீன மக்களுக்கு எங்கள் ஆதவரை காட்டுவதற்காக அந்த திசையில் நிறுத்தி இருக்கிறோம்" என்கிறார்.

ராஜிநாமா செய்த இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்

படத்தின் காப்புரிமை AFP

இஸ்ரேலை யூதர்களின் நாடாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டதை அடுத்து அந்நாட்டில் உள்ள இஸ்ரேலிய அரபு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெளகீர் பஹ்லவுல் தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இந்த சட்டத்தை நிறைவேற்றியதற்காக ஜெளகீர் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தை 'இனவாத' மற்றும் 'அழிவுக்கான'நாடாளுமன்றம் என்று வர்ணித்துள்ளார்.

முக்கிய எதிர்க்கட்சி பங்கேற்காத தேர்தல்

படத்தின் காப்புரிமை EPA

முக்கிய எதிர்க்கட்சி பங்கேற்காத நாடாளுமன்ற தேர்தல் கம்போடியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கம்போடியாவின் முக்கிய எதிர்க்கட்சியான கம்போடியா தேசிய மீட்பு கட்சி அந்நாட்டு உச்சநீதிமன்றத்தால் கலைக்கப்பட்டது. கடந்த தேர்தலில் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது இந்தக் கட்சி. விமர்சகர்கள் எதிர்க்கட்சி இல்லாமல் இப்போது நடந்துவரும் தேர்தலை போலியான தேர்தல் என்று விமர்சித்து வருகின்றனர். அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இந்த தேர்தல் குறித்து தங்கள் சந்தேகத்தை எழுப்பி உள்ளன. ஆனால், கம்போடியா ஆளுங்கட்சியான 'கம்போடியா மக்கள் கட்சி', இத்தேர்தலில் 19 கட்சிகள் போட்டியிடுவதாக கூறியுள்ளது.

கலிஃபோர்னியா காட்டுத் தீ

படத்தின் காப்புரிமை Getty Images

கலிஃபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி இரண்டு சிறுவர்கள் மற்றும் மூதாட்டி ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வியாழக்கிழமையன்று இதில் தீயணைப்பு வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், 17 பேரை காணவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். ஷாஸ்டா எனும் பகுதியில் காற்று வேகமாக வீசுவதால், "நெருப்பு சுழற்காற்று" உருவாகி மரங்களை வேரோடு சாய்ப்பதாகவும், கார்கள் அடித்து செல்லப்படுவதாகவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

பெருங்காற்றும், பெருமழையும்

படத்தின் காப்புரிமை EPA

ஜப்பானில் வீசிய பெரும் புயல் ஒன்று தொடர் மழையை கொண்டுவந்துள்ளது.மணிக்கு 180 கி.மீ அளவில் காற்று வீசி உள்ளது. பெருமழையினால் நிலச்சரிவு ஏற்படலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன் ஜப்பானில் வீசிய பெரும் புயலொன்றில் 200 பேர் மரணித்தனர். பின் ஏற்பட்ட அனல் காற்றின் காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்