ஒரு பொறியாளரின் இறுதிச் சடங்கில் ஆயிரக் கணக்காணோர் திரண்டது ஏன்?

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

பொறியாளர் மரணம், திரண்ட மக்கள் கூட்டம்

படத்தின் காப்புரிமை Reuters

பொறியாளர் ஒருவரின் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஒரு தேசத்தையே ஸ்தம்பிக்க செய்துள்ளனர். மக்களை விரட்ட போலீஸ் துப்பாக்கி சூட்டை நடத்தி இருக்கிறது. இந்த சம்பவம் நடந்தது எத்தியோப்பியாவில். ஸ்மிக்நியூ பெகெலெ என்பவர் எத்தியோபியா தேசத்தின் கனவு திட்டமான கிராண்ட் ரினைசன்ஸ் அணை திட்டத்தின் பொறியாளர். இந்த அணை திட்டத்தின் மொத்த மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த அணையானது நைல் நதிக்கு மத்தியில் கட்ட திட்டமிடப்பட்டு வந்த சூழ்நிலையில், இதனை எகிப்து அரசு எதிர்த்து வந்தது.

இத்திட்டத்தால் நைல் நதியிலிருந்து தங்களுக்கு கிடைக்கும் நீரானது பாதிப்புக்கு உள்ளாகும் என்பதுதான் அந்நாடு சொல்லிய காரணம். அணையை குறித்து ஓர் அரசியல் நிலவி வந்த சூழ்நிலையில் கடந்த வியாழக்கிழமை அணையின் பொறியாளர் எத்தியோப்பியா தலைநகரில் சுடப்பட்டு இறந்தார். இவரது இறுதி சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டு பொறியாளர் ஸ்மிக்நியூவை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

பரவும் காட்டுத்தீ

படத்தின் காப்புரிமை Getty Images

ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் அந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர பெரும் முயற்சிகள் எடுத்தாலும், கலிஃப்போர்னியா காட்டுத்தீ அதி வேகமாக பரவி வருகிறது என்கிறார்கள் அதிகாரிகள். வேகமாக வீசும் காற்று, கடும் வெப்பம் ஆகியவை நிலைமையை சிக்கலாக்குவதாக கூறுகிறார் ஒரு தீயணைப்பு வீரர்.

விரிவாக படிக்க: கலிஃபோர்னியா காட்டுத்தீ : இரண்டு சிறுவர்கள், மூதாட்டி பலி

ஆதரவு இல்லை

படத்தின் காப்புரிமை Reuters

தனது முன்னாள் கூட்டாளியான எமர்சன் முனங்காக்வாவை இன்று நடக்க போகும் தேர்தலில் ஆதரிக்க போவதில்லை என்று ஜிம்பாப்வே முன்னாள் ஆதிபர் ராபர்ட் முகாபே தெரிவித்துள்ளார்.

1980ல் ஜிம்பாப்வே விடுதலை பெற்றதில் இருந்து 37 ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக இருந்த 93 வயது ராபர்ட் முகாபே, இம்மாதத் தொடக்கத்தில் முனங்காக்வேவை துணை அதிபர் பதவியில் இருந்து நீக்கினார். தமக்கு அடுத்தபடியாக தமது இரண்டாவது மனைவி கிரேஸ் ஆட்சியையும் ஆளும் ஸானு-பி.எஃப். கட்சியையும் கைப்பற்ற வழி செய்வதற்காகவே அவர் இப்படி செய்தார் என்ற விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜிம்பாப்வே ராணுவம் தலையிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் ரகசிய இடத்தில் இருந்த முனங்காக்வா நாடு திரும்பினார், தற்காலிக அதிபராகவும் பொறுப்பேற்றார். அந்த நாட்டு நாடாளுமன்ற தேர்தல் உள்ளூர் நேரப்படி இன்று நடைபெறவிருக்கும் நிலையில், 'என்னை துன்புறுத்தியவர்களுக்கு ஆதரவாக தன்னால் வாக்களிக்க முடியாது' என முகாபே தெரிவித்துள்ளார்.

பின்னணியைத் தெரிந்துகொள்ள: முடிவுக்கு வந்ததா முகாபேயின் ஜிம்பாப்வே? அறிந்து கொள்ள 5 முக்கிய விஷயங்கள்

பத்திரிகையாளர்கள் மக்கள் விரோதிகள் அல்ல

படத்தின் காப்புரிமை Reuters

பத்திரிகையாளர்களை தொடர்ந்து மக்கள் விரோதிகளாக சித்திரிக்கும் போக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் பதிப்பாளர் வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது, ஊடகங்களுக்கு எதிரான வன்முறைக்கு வழிவகை செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அறுபது ஆண்டு காத்திருப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் காணாமல் போன பிரெஞ்சு பனிசறுக்கு வீரர் அடையாளம் காணப்பட்டார் என்கிறது இத்தாலி போலீஸ். சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட ஒரு கதை மூலம் அவர் குறித்த தகவல்கள் தெரிய வந்திருப்பதாக கூறுகிறது போலீஸ் கூறுகிறது. இத்தாலி ஆஸ்தோ பகுதியில் உள்ள பள்ளதாக்கின் உயரமான பகுதியில் மனித எச்சங்கள், பனிசறுக்கு உபகரணங்கள் மற்றும் கண்ணாடி ஆகியவை 2005 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. இது குறித்த தகவல்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து இருந்தனர் விசாரணை அதிகாரிகள். இதன் மூலம் அவர்கள் காணாமல் போனவரை அடையாளம் கண்டுள்ளனர்

மேலும் படிக்க.. இறந்து 60 ஆண்டுகளுக்குப் பின் அடையாளம் காணப்பட்ட பனிச்சறுக்கு வீரர்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :