ஜிம்பாப்வே: முகாபே ஆட்சிக்குபின் நடக்கும் முதல் தேர்தலில் பெருமளவு வாக்களிப்பு

  • 30 ஜூலை 2018
படத்தின் காப்புரிமை AFP

ஜிம்பாப்வேயின் வரலாற்றில் அந்நாட்டை வெகுகாலம் ஆட்சிசெய்த ராபர்ட் முகாபே அதிபர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் பொதுத்தேர்தலில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

ஜிம்பாப்வேயின் அடக்குமுறை மிகுந்த கடந்த காலத்தை உடைப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பென்று இந்த தேர்தலை வெளிநாட்டு தேர்தல் பார்வையாளர்கள் பாராட்டியுள்ளனர்.

ஜிம்பாப்வேயின் இடைக்கால அதிபரான எம்மர்சன் முனங்காக்வாவுக்கும், அவரது பிரதான போட்டியாளரான நெல்சன் சாமிசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அதிபர் தேர்தல் மட்டுமல்லாமல், அந்நாட்டின் நாடாளுமன்றம், உள்ளூர் தேர்தல்களும் தற்போது ஒருசேர நடந்து வருகிறது.

ஆளும் சனு-பிஎப் கட்சியின் தலைவரும், நாட்டின் இடைக்கால அதிபருமான எம்மர்சன் முனங்காக்வா, எம்டிசி கூட்டணியின் தலைவரான நெல்சன் சாமிசா இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரண்டு தலைவர்களும் முதல் முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஜிம்பாப்வே கடந்த 1980ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபிறகு, அந்நாட்டின் முதல் அதிபராக பதவியேற்ற முகாபே, இந்த தேர்தலில் இடைக்கால அதிபர் முனங்காக்வாவுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

ஆப்ரிக்க கண்டத்திலேயே ஒரு நாட்டை அதிக காலம் ஆட்சிசெய்த ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேவை, அந்நாட்டின் இடைக்கால அதிபரான கடந்த ஆண்டு ராணுவத்தின் உதவியுடன் பதவி நீக்கம் செய்தார்.

யார் இந்த சாமிசா?

படத்தின் காப்புரிமை Reuters
Image caption நெல்சன் சாமிசா

ஜிம்பாப்வேயின் இடைக்கால அதிபர் எம்மர்சன் முனங்காக்வாவுக்கு ஒரே போட்டியாளராக விளங்குகிறார் எம்டிசி கூட்டணியின் தலைவரான நெல்சன் சாமிசா.

25ஆவது வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினரான சாமிசா, 31 வயதில் கேபினட் அமைச்சரானார். தற்போது 40 வயதாகும் இவர், ஜிம்பாப்வேயின் அதிபராகும்பட்சத்தில் அந்நாட்டில் மிக இளம் வயதில் அதிபரானவர் என்ற பெயரை பெறுவார்.

தான் அதிபரானால் முடங்கிப்போயிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மறுக்கட்டமைப்பு செய்வேன் என்று இவர் வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், அதிவேக புல்லட் ரயில் அறிமுகம், ஜிம்பாப்வேயில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது போன்ற இவரது ஆடம்பரமான வாக்குறுதிகள் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :