இரான் தலைவரை நேரில் சந்திப்பேன் என்கிறார் டிரம்ப்; என்ன சொல்கிறது இரான்?

Trump படத்தின் காப்புரிமை Getty Images

மிரட்டல் அறிக்கைகள், ஏவுகணை முயற்சிகள், அணுகுண்டு சோதனைகள், பொருளாதாரத் தடைகள் என்று கசந்து கிடந்த வட கொரியா-அமெரிக்கா உறவில் திடீரென ஒரு நாள் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு, கிம் ஜோங்-உன்-னை நேரில் சந்திக்கத் தயார் என்று அறிவித்தார் டொனால்டு டிரம்ப்.

உண்மையாகவா? என்று எல்லோரும் வியந்து பார்ப்பதற்குள் பரபரவென்று பேச்சுவார்த்தை ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பரம வைரிகளாக உலக அரங்கில் அறியப்பட்ட இருவரும் கை கொடுத்து சிங்கப்பூரில் பேச்சு வார்த்தை நடத்தி முடித்துவிட்டனர்.

பேச்சுவார்த்தையின் நோக்கங்கள், இலக்குகள் நிறைவேறுவதில் இன்னும் நிறைய சவால்கள் இருந்தாலும், போர் மேகம் சூழ்வது போன்ற பதற்றநிலை தற்போது தணிந்துள்ளது.

இதைப் போலவே, சர்வதேச சக்திகளுக்கும் இரானுக்கும் இடையிலான அணு ஒப்பந்தத்தில் இருந்து ஒரு தலைப்பட்சமாக அமெரிக்கா வெளியேறியது, இரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகள் விதித்தது போன்ற நடவடிக்கைகளால் முள்ளாகக் குத்திவரும் அமெரிக்க-இரான் உறவில் ரோஜா மொட்டுகள் தலைகாட்டுமோ என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆம். எந்த முன் நிபந்தனையும் இல்லாமல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இரான் தலைவர்களை சந்திக்கத் தயார் என்று அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

"நான் யாரை வேண்டுமானலும் சந்திப்பேன். எனக்கு சந்திப்புகளில் நம்பிக்கை உண்டு" என்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரூஹானி

டிரம்பும், இரான் அதிபர் ஹஸான் ரூஹானியும் கடந்த வாரம் வரைகூட ஒருவரைப் பார்த்து ஒருவர் எச்சரித்து வந்த நிலையில் திடீரென்று தற்போது மலர்ச்செண்டு நீட்டத் தயார் என்கிறார் டிரம்ப்.

இரானுக்கு எதிரான சர்வதேசத் தடைகளை நீக்குவதற்குப் பிரதிபலனாக, இரான் தமது அணு ஆயுத ஆராய்ச்சி நடவடிக்கைகளைக் கைவிடவேண்டும் என்பதாக போடப்பட்ட சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து கடந்த மே மாதம் அமெரிக்கா வெளியேறியது.

ஆனால், அந்தப் பலதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளும், சீனா, ரஷ்யாவும் தாங்கள் தொடர்ந்து ஒப்பந்தத்தை மதிக்க விரும்புவதாக அறிவித்தன. இந்த நாடுகளின் எதிர்ப்பையும் மீறி சில நாள்களில் இரான் மீது பழைய பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்க அமெரிக்கா தயாராகிவருகிறது.

இரான் பதில்

மத்தியக் கிழக்கில் இரான் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுக்கு ஆழமான சந்தேகங்கள் உள்ளன. இரானின் எதிரி நாடுகளான இஸ்ரேல், சவுதி அரேபியே இரண்டும் அமெரிக்காவின் நட்பில் உள்ளன.

இந்நிலையில்தான் "அவர்கள் சந்திக்க விரும்பினால், நாங்கள் சந்திப்போம்" என்று கூறியுள்ளார் டிரம்ப். இதற்கு டிவிட்டரில் பதில் அளித்த இரான் அதிபர் ஹசன் ரூஹானியின் ஆலோசகர் ஹமீத் அபவுட்டாலெபி, "மீண்டும் இரான் அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதும், இரான் நாட்டின் உரிமைகளை மதிப்பதும் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்".

ஆக, டிரம்ப் தமக்கு பேச்சுவார்த்தை நடத்த நிபந்தனைகள் இல்லை என்று கூறிவிட்டாலும், ரூஹானிக்கு நிபந்தனைகள் உள்ளன என்பது தெளிவாகிறது. இந்த நிபந்தனைகளை மீறி இந்த சந்திப்பு நடந்துவிட்டால் 1979 இரானியப் புரட்சிக்கு முந்திய காலகட்டத்தில் இருந்து இதுவரையிலான காலம் வரை அமெரிக்க-இரானிய அதிபர்களிடையே நடக்கும் முதல் கூட்டமாக அது அமையும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: