"விஜய் மல்லையாவை அடைக்கும் இந்திய சிறையின் காணொளி வேண்டும்" - பிரிட்டன் நீதிபதி

  • 31 ஜூலை 2018
படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் நிதிமோசடி வழக்கில் சிக்கியிருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரும் வழக்கின் விசாரணை செப்டம்பர் மாதம் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, விஜய் மல்லையா இந்தியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டால் அங்கு அடைக்கப்படவுள்ள சிறையின் அமைப்பை காணொளியில் காண்பிக்குமாறு, வழக்கு விசாரணையில் ஆஜரான இந்திய அதிகாரிகளுக்கு தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

நிதிமோசடி சார்ந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள விஜய் மல்லையா தொடர்ந்து பிணையில் நீடித்து வருகிறார்.

செயல்பாட்டிலில்லாத தனது கிங்ஃபிஷர் நிறுவனம் மீது தொடுக்கப்பட்டுள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுகளை தொடர்ந்து விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கு நடந்து வரும் வழக்கை கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் அவர் சந்தித்து வருகிறார்.

விஜய் மல்லையா, தங்களிடமிருந்து பெற்ற சுமார் 750 மில்லியன் பவுண்டுகள் கடனை திரும்ப அளிக்கவில்லை என்று வங்கிகள் குற்றச்சாட்டும் நிலையில், அதனை அவர் மறுக்கிறார்.

கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தையும், போர்ஸ் இந்தியா பார்முலா ஒன் அணியின் நிறுவனர்களில் ஒருவராக மாறுவதற்கு முன்னர் விஜய் மல்லையா கிங்ஃபிஷர் என்னும் பீர் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.

கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் கடன் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த 2012ஆம் ஆண்டு அந்நிறுவனத்தை நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

தனது இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 62 வயதாகும் விஜய் மல்லையா பிரிட்டனுக்கு சென்றார்.

இந்தியாவிலுள்ள விஜய் மல்லையாவின் சொத்துகள் குறித்து விசாரணைகள் நடந்துவரும் நிலையில், அவரை பிரிட்டனிலிருந்து இந்தியா கொண்டுவருவதற்கு இந்திய அரசு முயற்சித்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :