தேர்தலில் ஆதிக்கம் செலுத்த திட்டமா? 32 கணக்குகளை முடக்கிய ஃபேஸ்புக்

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

பக்கங்களை முடக்கியது ஃபேஸ்புக்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் இடைக்காலத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் நோக்குடன் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 32 ஃபேஸ்புக் கணக்குகளையும் சில பக்கங்களையும் ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கி உள்ளது. இது தொடர்பான முதற்கட்ட விசாரணை தொடங்கி இருப்பதாகவும் இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று இன்னும் தெரியவில்லை என்றும் கூறுகிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

பொய் கூறினார்

பட மூலாதாரம், Reuters

டிரம்பின் தேர்தல் பிரச்சர குழுத் தலைவர் பொய் கூறி இருக்கிறார் மற்றும் தன்னை சட்டத்திற்கு மேலானவராக கருதி செயல்பட்டிருக்கிறார் என்று விசாரணையின் போது அரசு தரப்பு வழக்குரைஞர் கூறி உள்ளார். டிரம்பின் தேர்தல் பிரச்சர குழுத் தலைவராக இருந்த பால் மனாஃபோர்ட் மீது வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. பால் தொடக்கத்திலிருந்தே தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

மெக்சிகோவில் விமான விபத்து

பட மூலாதாரம், PROTECCIÓN CIVIL DURANGO/TWITTER

மெக்சிகோ தலைநகரில் உள்ள டுரங்கோவில் நடந்த விமான விபத்தில் 85 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தானது விமானநிலையத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் நடந்துள்ளது. விமானத்தில் 101 பேர் இருந்ததாக கூறும் அதிகரிகள், 37 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். விபத்துக்கு உள்ளான விமானம் விக்டோரியா சர்வதேச விமானநிலையத்திலிருந்து மெக்சிகோ நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

வெடிகுண்டு தாக்குதல் 15 பேர் பலி

பட மூலாதாரம், Reuters

கிழக்கு ஆஃப்கனில் உள்ள ஜலாலாபாத்தில் நடந்த வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி தாக்குதலில் குறைந்தது 15 பேர் இறந்திருக்கலாம் என்கிறார் அதிகாரிகள். துப்பாக்கிதாரிகள் அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து சரமாரியாக சுட்டு இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

பாதுகாப்பு படை நடத்திய எதிர்தாக்குதலில் இரண்டு துப்பாக்கிதாரிகள் இறந்தனர்.

கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய அரபு கவிஞர்

பட மூலாதாரம், FREEDAREENTATOUR.ORG

வன்முறையை தூண்டுகிறார் மற்றும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய அரபு கவிஞரான தரீன் டாடூருக்கு ஐந்து மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இணையத்தில் 2015 ஆம் ஆண்டு அவர் பகிர்ந்த சில கருத்துகள் மற்றும் கவிதைகள் வன்முறையை தூண்டும் விதமாக இருந்தது எனும் அரசு தரப்பு வாதத்தை தொடர்ந்து மறுத்து வந்தார் தரீன். என்னுடைய கவிதைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டன என்கிறார் தரீன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :