ஜிம்பாப்வே தேர்தல் வன்முறையில் மூவர் பலி: நிதானம் கடைபிடிக்க ஐநா வலியுறுத்தல்

துப்பாக்கி வீரர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

ஹராரேவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாப்புப் படையினர்.

ஜிம்பாப்வே நாட்டில் நடந்த தேர்தலில் ஆளும் சானு பி.எஃப் கட்சி அதிக நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக இன்னும் முழுமையாக வெளியாகாத அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆளும் ஜானு-பிஎஃப் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, போராட்டக் காரர்கள் மீது அரசு அடக்குமுறையை ஏவி வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் அவையும், பிரிட்டனும் வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்திருக்கின்றன.

அரசுத் துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூவர் கொல்லப்பட்டனர்.

தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டுகிறது.

எதிர்க்கட்சியான எம்.டி.சி. கூட்டணி தமது வேட்பாளர் நெல்சன் சாமிசா அதிபர் எமர்சன் முனங்காக்வாவை தோற்கடித்துவிட்டதாக கூறுகிறது.

இந்நிலையில், ஜிம்பாப்வே அரசியல்வாதிகள் நிதானத்தைக் கடைபிடிக்கவேண்டும் என்று ஐ.நா. தலைமைச் செயலாளர் அண்டோனியோ கட்டர்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஹாரியட் பால்ட்வின், இந்த வன்முறையால் 'ஆழ்ந்த கவலை' அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், ZINYANGE AUNTONY

திங்களன்று நடந்த தேர்தலில் அதிபர் எமர்சன் முனங்காக்வாவின் கட்சி நாடாளுமன்றத்தில் கணிசமான பெரும்பான்மையை பெறும் நிலையில் உள்ளது. சுமார் 37 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே பதவியில் இருந்து நீக்கப்பட்டபின் நடைபெற்ற முதல் தேர்தல் இது.

திங்களன்று நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி, ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் கற்களை வீசி போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீது, போலிஸார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

செயலில் உள்ள வெடிபொருட்களை ராணுவத்தினர் பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆளும் ZANU-PF கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றுள்ளதாக ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் அறிவித்தபின் போராட்டங்கள் வெடித்தன. இப்பெரும்பான்மை அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்தும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் நடந்த அதிபர் தேர்தலுக்கான முடிவுக்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அதிபர் எமர்சன் முனங்காக்வா மக்கள் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்த்தின்போது ஊடகங்கள் பாரபட்சம் காட்டியதாகவும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட மிரட்டப்பட்டதாகவும், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் பார்வையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

எமர்சன் முனங்காக்வா

ஆளும் சானு பி.எஃப் கட்சி 110 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எதிர்க் கட்சிகளின் எம்.டி.சி கூட்டணி இதுவரை 41 இடங்களைப் பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடந்த தேசிய அவை என்று அழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் கீழவையில் 210 இடங்கள் உள்ளன.

திங்களன்று நடந்த தேர்தலில் 70% வாக்குப்பதிவு நடந்தது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மதியம் 12.30 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அரசு தொலைக்காட்சியான சீ.பி.சி அறிவித்துள்ளது.

கண்காணிப்பாளர்கள் கூறுவது என்ன?

நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்த இந்தத் தேர்தல், ஜிம்பாப்வேயில் அரசியல் மாற்றத்திற்கான முக்கியமான தருணம் என்று ஆப்பிரிக்க ஒன்றியம் கூறியுள்ளது.

தெற்கு ஆப்பிரிக்க வளர்ச்சி குழுவைச் சேர்ந்த தேர்தல் பார்வையாளர்களின் முதல்கட்ட அறிக்கையில் தேர்தல் பெரும்பாலும் அமைதியாகவும் சட்டப்படியும் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

40 வயதாகும், எம்.டி.சி கூட்டணியின் தலைவர் நெல்சன் சாமிசா

"ஜிம்பாப்வே வரலாற்றில் அரசியல் திருப்புமுனையாக உள்ள இந்தத் தேர்தல், மக்களாட்சியை வலுப்படுத்த உதவும்," என்று அந்தக் குழுவின் பிரதிநிதியான அங்கோலா நாட்டு வெளியுறவு அமைச்சர் மனுவேல் டோமிங்கோஸ் அக்ஸ்த்தோ கூறியுள்ளார்.

கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான பொதுச் சந்தை எனும் அமைப்பு வாக்காளர்களின் கைரேகைகளைக் கொண்டு அவர்களின் பெயர்களைப் பதிவு செய்து கள்ள வாக்குகள் பதிவு செய்வதற்கான வாய்ப்புகளை குறைத்தது என்று பாராட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க மேற்பார்வைக் குழுக்கள் புதன்கிழமையின் பிற்பகுதியில் தங்களின் அறிக்கையை வெளியிட உள்ளன.

எதிர்க் கட்சிகள் சொல்வது என்ன?

ஜிம்பாப்வேயின் முக்கிய எதிர்க்கட்சி தங்களது வேட்பாளர் நெல்சன் சாமிசா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளது. அவர் வெற்றிபெற்றதாக, செவ்வாயன்று அவரது ஆதரவாளர்கள் தெருக்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

படக்குறிப்பு,

நெல்சன் சாமிசா வெற்றிபெற்றதாக கொண்டாட்டங்களில் ஈடுபட்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள்.

அதிபர் எமர்சன் முனங்காக்வாவை வெற்றிபெற வைப்பதற்காக ஆளும் கட்சியினர் தேர்தல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றசம் சாட்டியுள்ள எதிர்க் கட்சிகளின் எம்.டி.சி கூட்டணி, முடிவுகளை அறிவிப்பதில் உண்டாகும் தாமதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.

சானு பி.எஃ கட்சி மக்களின் விருப்பத்தில் தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ள எம்.டி.சி கூட்டணியின் தெண்டாய் பீட்டி, ஜிம்பாப்வேயில் குழப்பத்தை உண்டாக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், தெண்டாய் பீட்டி எதைப்பற்றி பேசுகிறார் என்றே புரியவில்லை என்று ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

இதனிடையே தேர்தல் முடிவுகள் குறித்து தாம் நேர்மறையாக இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிபர் முனங்காக்வா, இறுதி முடிவுகளுக்காக அமைதியுடன் காத்திருக்குமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: