மகப்பேறு விடுமுறைக்குபின் பணிக்கு திரும்பிய நியூசிலாந்து பிரதமர்; பணியை துறந்த கணவர்

  • 2 ஆகஸ்ட் 2018
படத்தின் காப்புரிமை Getty Images

தனது ஆறு வாரகால மகப்பேறு விடுமுறைக்கு பின் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.

38 வயதாகும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கடந்த ஜூன் மாதம் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் மூலம் ஒரு நாட்டின் பிரதமாக இருக்கும்போதே குழந்தையை பெற்றெடுத்த இரண்டாவது பிரதமர் என்ற பெயரையும் பெற்றார்.

ஜெசிந்தா விடுமுறையில் இருக்கும்போது, தனது பணிகளை நாட்டின் துணை பிரதமரான வின்ஸ்டன் பீட்டர்ஸிடம் ஒப்படைத்து சென்றார்.

தனது மகள் நேவே டே அரோஹாவுடன் சில மகிழ்ச்சிகரமான வாரங்களை கழித்த பின்னர் பணிக்கு 'முழுமையாக' செல்வதற்கு தயாராக உள்ளதாக ஜெசிந்தா கூறியுள்ளார்.

"நியூசிலாந்து மக்கள், எனது அணியினர் மற்றும் செயல் பிரதமரின் உதவியின் காரணமாக நேவேவுடன் என்னால் அருமையான நேரத்தை செலவிட முடிந்ததாக உணருகிறேன்" என்று டிவிஎன்ஜீயிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

"ஆனால் நிச்சயமாக, இது ஒரு தனிப்பட்ட சூழ்நிலை, நான் பணியாற்றுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்."

நேவே பிறந்தவுடன் சில வாரங்களை அவர்களின் வீடு அமைத்துள்ள ஆக்லாந்தில் செலவிட்டனர். ஆனால், நியூசிலாந்தின் நாடாளுமன்றம் அமைந்துள்ள வெலிங்டன் நகருக்கு சனிக்கிழமையன்று திரும்ப உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

ஜெசிந்தாவின் கணவரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான கிளார்க் கைபோர்ட், தனது மனைவி நாட்டை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துவதற்காக தான் வீட்டிலேயே இருந்து குழந்தையை பார்த்துக்கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஜெசிந்தா, பல பெண்களுக்கு கிடைக்காத பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளதாக கூறுகிறார்.

ரேடியோ என்ஜீ என்ற வானொலியிடம் பேசிய ஜெசிந்தா, "என்னுடைய கணவர் எப்போதும் எனக்கு துணை நிற்கிறார். ஒரு பெற்றோருக்கான பொறுப்புணர்வில் பெருமளவை ஏற்றுக்கொண்டு அவர் செயல்படுகிறார்" என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெசிந்தா, தனக்கும் கிளார்க்கும் குழந்தை பிறக்கவுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தனர்.

1856யிலிருந்து இதுவரையிலான காலத்தில் நியூசிலாந்தின் இளம் பிரதமராக விளங்கும் ஜெசிந்தா, தான் மகப்பேறு விடுமுறையில் இருந்தபோது கூட அமைச்சரவை சார்ந்த ஆவணங்களை படித்ததுடன், முக்கியமான விவகாரங்களில் அரசுக்கு ஆலோசனையையும் வழங்கினார்.

கடந்த 1990ஆம் ஆண்டு குழந்தையை பெற்றெடுத்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இறந்த பெனாசீர் பூட்டோதான், ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும்போதே குழந்தையை பெற்றெடுத்த முதல் தலைவராவார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: