இரான்: நடனமாட விரும்பும் பெண்கள் கொடுக்கும் விலை என்ன?

  • 3 ஆகஸ்ட் 2018

இரான் நாட்டில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான பெண் ஒருவர் தனது நடனத்தை காணொளியாக வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கத்திய கலாசாரம் என்று கருதப்படும் செயல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகளை மீறியதுதான் இதற்கு காரணம்.

படத்தின் காப்புரிமை FERANAK AMIDI
Image caption நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபடும் ஃபெரனாக் அமிதி

இரானில் நடனமாடும் அந்தப் பெண்ணுக்கு நேர்ந்தது என்ன என விளக்குகிறார் பிபிசி உலக சேவையின் பெண்கள் விவகார செய்தியாளர் ஃபெரனாக் அமிதி.

"இரான் நாட்டில் 1979ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி நிகழ்ந்தது. கடினமான மாற்றங்கள் நிகழ்ந்த அந்த கால கட்டத்தில்தான் நான் அங்கு வளர்ந்தேன்.

அங்கு ஒழுக்கம் என்ற பெயரில் நிறைய கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன. சாலைகளில் நடப்பது, பாட்டு கேட்பது உதட்டுச் சாயம் பூசிக்கொள்வது, நகச்சாயம் பூசிக்கொள்வது ஆகியவற்றுக்கு... அவ்வளவு ஏன் வண்ணமயமான ஆடைகள் அணியக் கூட தடை இருந்தது.

1980-88 காலகட்டத்தில் இரான் - இராக் போர் நிகழ்ந்தது. அப்போது உணவுப் பொருட்கள் ரேஷன் முறையில் விநியோகிக்கப்பட்டன. பல சமயங்களில் அதுவும் கூட கிடைக்காது.

அந்த இருண்ட காலத்திலும் எனது தோழிகளுடன் சேர்ந்து நடனமாடியது இன்னும் நினைவில் இருக்கிறது. சட்ட விரோதமாக இசை கேசட்டுகளை விற்பவர்களிடமிருந்து அதை வாங்கினோம்.

வெளியுலகை தெரிந்து கொள்ள இந்த வியாபாரிகள்தான் எங்களுக்கு ஒரே ஜன்னலாக விளங்கினர். ஈரானிய பாப் பாடகர்கள் இஸ்லாமிய புரட்சிக்கு பின் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். அவர்களின் பாப் பாடல் கேசட்டுகளை அந்த வியாபாரிகள் எங்களுக்கு விற்றுவந்தனர். மைக்கேல் ஜாக்ஸனின் பாட்டுகள், பிரேக் டான்ஸ், வாம் இசைக்குழுவின் பாடல்கள் போன்றவற்றை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது அந்த வியாபாரிகள்தான்".

படத்தின் காப்புரிமை FERANAK AMIDI

பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர்கள் அருகில் இல்லாவிட்டால் நாங்கள் பாடுவதுடன் நடனமும் ஆட ஆரம்பித்து விடுவோம். ஆடல் பாடலுக்கு தடை என்ற எழுதப்படாத விதி இருப்பது எங்களுக்கு தெரிந்தே இருந்தது.

ரகசிய இடங்களை நோக்கி...

நடனமாடுவது குற்றம் என இரானிய சட்டத்தில் எங்குமே கூறப்படவில்லை. ஆனால் அது தொடர்பான அம்சங்கள் தெளிவற்றதாக உள்ளன.

பொது இடங்களில் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது இரானிய சட்டம். இரானில் மேடைகளில் நடன நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. ஆனால் ஆண்கள் மட்டுமே அதில் நடனமாடுவார்கள்.

சமூக ஊடகங்களில் ஒழுங்கின்மையை பரப்புவதும் ஊக்குவிப்பதும் குற்றம் என்கிறது இரானிய சட்டம். கிளப்புகளோ பார்களோ இல்லை என்பதால் பார்ட்டி நிகழ்வுகளே நடனமாடுவதற்கும் மற்றவர்களுடன் கலந்து பழகுவதற்கும் ஏற்ற இடமாக இருந்தது. அதே சமயம் நுணுக்கமாக பார்த்தால் இது போன்ற பார்ட்டிகளும் கூட சட்ட விரோதமானவைதான்.

திரைமறைவில் நடக்கும் பார்ட்டிகள் இஸ்லாமிய புரட்சி முடிந்த உடனேயே தொடங்கிவிட்டது. அவற்றை எந்த சக்தியாலும் தடுத்துநிறுத்த முடியவில்லை.

படத்தின் காப்புரிமை FERANAK AMIDI

குடும்ப பார்ட்டிகள், திருமண பார்ட்டிகள் என்ற பெயரில் நடப்பவையே அதிகம். இதில் இளைஞர்கள் மது அருந்துவது பாடுவது ஆடுவது எல்லாம் சகஜம்.

மக்கள் அலறியபோது...

1990களில் நான் பள்ளிப்படிப்பை முடித்தேன் அச்சமயங்களில் டெஹ்ரானில் ரகசியமாக நடன நிகழ்ச்சிகள் நடந்துவந்தன. நாங்கள் விடுமுறைக்காக வெளிநாடு சென்று திரும்பும்போது இசை சிடிக்கள் போன்றவற்றை கொண்டுவருவோம்.

வார இறுதிகளில் யாராவது ஒருவரின் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் ஆடல் பாடல்கள் நடைபெறும்.

இது போன்ற பார்ட்டிகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு கைதுகளும் நடக்கும். இதில் பங்கேற்பவர்கள் குறைந்தது ஒரு முறையாவது கைதாகியிருப்பார்கள். நானும் கூட கைதாகியுள்ளேன்.

பார்ட்டியில் மது அருந்தப்பட்டிருப்பது தெரியவந்தால் உடல் ரீதியாக துன்முறுத்தும் தண்டனை கிடைக்கும். ஒரு இரவு வெளியில் சென்றதற்காக நூறு சவுக்கடி வாங்கியவர்களை எனக்கு தெரியும்.

டெஹ்ரானிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ள ஷெம்ஷாக் என்ற இடத்தில் நடந்த பார்ட்டியில் பங்கேற்றேன். அந்த பார்ட்டியை நாங்கள் ஷிபிஜா என பெயரிட்டு அழைத்தோம். இபிஜா என்ற இடத்தில் உள்ள உலகளவில் பிரபலமான பார்ட்டி ரிசார்ட் நினைவாக இப்பெயரை வைத்திருந்தோம். அந்த அறை இருட்டாக இருந்தது. மின்னி மறையும் விளக்குகளின் வெளிச்சம் மட்டுமே அங்கு நடனமாடுபவர்கள் இருப்பதை காட்டியது.

ஒரு முறை வெளிச்சக் கீற்று வந்த போது ஒரு முகத்தை நான் பார்த்தேன். தாடி வைத்திருந்த அந்த நபரை இதற்கு முன் நான் பார்த்தது இல்லை. மற்றொரு முறை வெளிச்சக்கீற்று வந்த போது அந்த நபரின் ஆக்ரோஷமான முகத்தை பார்த்தேன்.

படத்தின் காப்புரிமை FERANAK AMIDI
Image caption 'ரேவ் பார்ட்டி' ஒன்றில் ஃபெரனாக் அமிதி

திடீரென்று எல்லா விளக்குகளும் எரிந்தன. பஸிஜ் மிலிடியாஸ் என்ற தன்னார்வ பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சோதனையிட தொடங்கினர். அங்கிருந்தவர்கள் அலறயடித்து ஓடத்தொடங்கினர்.

சோதனையிட வந்தவர்கள் தங்கள் கைகளில் இருந்த தடியால் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். நானும் எனது நண்பர்களில் சிலரும் குளியலறையில் புகுந்து உள்ளே பூட்டிக் கொண்டோம்.

பெண்கள் அலறுவதையும் கதறி அழுவதையும் கேட்க நேர்ந்தது. ஆண்கள் உயிர் பிச்சை கேட்டு மன்றாடினர்.

இந்த களேபரம் ஒரு மணி நேரம் நீடித்தது. பிறகு நிசப்தம் நிலவியது. அப்போது நாங்கள் மெல்ல கதவை திறந்து வெளியே வந்தோம். எங்கள் நண்பர்கள் தரையில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தன. அந்த சமயத்தில் கூச்சலிட்டுக்கொண்டே ஒருவர் உள்ளே நுழைந்தார்.

படத்தின் காப்புரிமை FERANAK AMIDI
Image caption அரசு எவ்வளவு தடைகள் வைத்தாலும் இரான் இளைஞர்கள் கொண்டாட்டங்களைத் தவிர்ப்பதில்லை

அவரை பிடித்துச்சென்ற முரட்டுக் கும்பல் பணம் பெற்றுக்கொண்டு அவரை விடுவித்திருந்தது. "இது நமக்கு அதிர்ஷ்டமான இரவு. அவர்கள் பணத்திற்காகத்தான் இத்தனையையும் செய்திருக்கிறார்கள்" என உற்சாக கூச்சலிட்டுக்கொண்டே அவர் வந்தார். பின்னர் நாங்கள் மகிழ்ச்சி பொங்க விடியவிடிய நடனமாடினோம்.

எப்போதும் புதுமை

அடுத்தடுத்த பார்ட்டிகளுக்கு நாங்கள் சென்றபோது சோதனைகளும் கைதுகளும் நிற்கவில்லை. இது போன்ற தொடர் சிக்கல்களில் இருந்து தப்பிக்க புதுமையான வழிகளை கடைபிடிக்க தொடங்கினோம்.

போலீஸ்காரர்களுக்கு பணம் தந்தோம்...பார்ட்டி அரங்கிற்கு வெளியே கார்கள் நிற்காதவாறு பார்த்துக்கொண்டோம். நண்பர்களை மட்டுமே பார்ட்டியில் சேர்த்துக்கொள்வது என்பதில் உறுதியாக இருந்தோம்.

ஆடல் பாடல் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க ஜன்னல்களில் தலையணையை வைத்து அடைத்தோம். இது போன்ற அடக்குமுறைகளை இளம் இரானியர்கள் எதிர்கொண்டுவருகின்றனர். இன்ஸ்டாகிராமில் நடனத்தை வெளியிட்ட மதே ஹொஜாப்ரியை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் கண்டனக்குரல்கள் பரவி வருகின்றன.

இந்த குரல்கள் அடக்கப்பட்டாலும் இளைஞர்கள் மனம் தளராமல் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துகொண்டே உள்ளனர். கடந்த தலைமுறையினரான நாங்கள் பார்ட்டிகளில் கலந்துகொண்டபோது வந்த தடைகளுக்கு நாங்கள் காட்டிய அதே எதிர்ப்புதான் இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :