ஜிம்பாப்வே: தேர்தலில் மோசடி என அதிபர் முனங்காக்வா மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

அதிபர் தேர்தலில் தங்களது கட்சியின் தோல்விக்கு மோசடிதான் காரணம் என்பதை நிரூபிக்க தேவையான ஆதாரங்களுடன் நீதிமன்றத்திற்கு செல்லவிருப்பதாக ஜிம்பாப்வேவின் எதிர்க்கட்சி தலைவர் நெல்சன் சாமிசா தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption நெல்சன் சாமிசா

ஆதாரங்களை அழிப்பதற்காக தனது கட்சி அலுவலகங்களில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாக சாமிசா மேலும் கூறியுள்ளார்.

வெறும் 51 சதவீகித வாக்குகள் பெற்ற முனாங்காக்வா குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் சாமிசாவுடன் இரண்டாம் கட்ட மோதலை தவிர்த்துள்ளார்.

முன்னதாக, ஜிம்பாப்வே-யில் நடந்த பொதுத் தேர்தலில் அந்நாட்டு அதிபர் எமர்சன் முனங்காக்வா, மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் உறுதி செய்தது.

Image caption அதிபர் எமர்சன் முனங்காக்வா

நாட்டில் உள்ள 10 மாகாணங்களிலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முனங்காக்வா 50.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சாமிசா 44.3 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அறிவிக்கப்பட்டத் தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சித் தலைவர்கள் நிராகரித்தபோது, போலீஸ் அதிகாரிகள் தேர்தல் ஆணைய வளாகத்தை விட்டு அவர்களை வெளியேற்றினர். வாக்கு எண்ணிக்கையை சரிபார்க்க முடியவில்லை என்கிறது சாமிசாவின் எம்.டி.சி. கூட்டணி.

50 சதவீதத்துக்கும் அதிகமாக மயிரிழை அளவு அதிக வாக்குகள் பெற்றதால் சாமிசாவுடன் இரண்டாம் கட்ட மோதலை எதிர்கொள்ளவேண்டிய தேவையை முனங்காக்வா தவிர்த்துள்ளார்.

முடிவுக்குத் தலைவணங்குவதாக டிவிட்டரில் கூறிய அதிபர் முனங்காக்வா, தேர்தல் முடிவுகளை புதிய தொடக்கம் என்று வருணித்திருக்கிறார். "தேர்தலில் நம்மிடையே பிளவு ஏற்பட்டிருந்தாலும், நம்முடைய கனவு ஒன்றே" என்றும் அவர் அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆளும் ஜானு பிஎஃப் கட்சி அலுவலகம் ஒன்றின் வெளியே வரையப்பட்ட பழைய அதிபர் ராபர்ட் முகாபேயின் ஓவியத்தில் அவரது முகத்தின் மீது ஒட்டப்பட்டுள்ள முனங்காக்வா தேர்தல் விளம்பரம்.

1980ல் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 37 ஆண்டுகள் அதிபராக இருந்த ராபர்ட் முகாபே 2017 நவம்பரில் ஒரு கிளர்ச்சியின் மூலம் பதவி விலகும்படி செய்யப்பட்டார். இதையடுத்து முகாபேவால் துணை அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, வெளிநாடு தப்பிச் சென்ற முனங்காக்வா நாடு திரும்பினார். அவரை அந்நாட்டு நாடாளுமன்றம் அதிபராகத் தேர்ந்தெடுத்தது.

இந்நிகழ்வு பற்றி தெரிந்துகொள்ள: முகாபே வீழ்ச்சி: முனங்காக்வா முதல் முதலில் அதிபரானது எப்படி?

அதன் பிறகு நடந்த முதல் தேர்தலில் வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடந்தது. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களில் 70 சதவீதம் பேர் இத்தேர்தலில் வாக்களித்தனர். ஆனால், தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டம் வன்முறையாக மாறியது. பாதுகாப்புப் படையினர் சுட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில்தான் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. முன்னதாக வாக்குப் பதிவுக்கு மறுநாள் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகும் முன்பே சாமிசாவின் எம்.டி.சி. கூட்டணி தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவித்தது. இதனால், அந்தக் கட்சி ஆதரவாளர்கள் பல இடங்களில் கொண்டாடத் தொடங்கினர். இதை ஆளும் ஜானு பிஎஃப் கட்சி மறுத்தது. தேர்தல் முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவும் எதிர்க்கட்சியினர் ஆத்திரமடைந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இது போன்ற போராட்டங்களை அரசு சகித்துக்கொள்ளாது என்று அறிவித்தார் உள்துறை அமைச்சர் ஒபர்ட் முபோஃபு. "போரில் கொல்வதற்கு பயிற்றுவிக்கப்பட்டவர்கள் சிப்பாய்கள். குடிமக்கள் அரசின் எதிரிகளா?" என்று கேள்வி கேட்டார் எதிர்க்கட்சித் தலைவர் சாமிசாவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்