சாமுராய் போர் வாளால் ஐஸ் கிரீம் வாகனத்தைத் தாக்கியவர்

வரலாற்றின் மத்திய காலத்தில் இருந்த ஜப்பானிய போர் தளபதிகளான சாமுராய்கள் பயன்படுத்துவத்தைப் போன்ற வாள் ஒன்றை வைத்து, ஐஸ் கிரீம் பெட்டிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை தாக்கிய பிரிட்டன் நபருக்கு சுமார் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஜூலை ஒன்றாம் தேதி நடந்த இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஜேமி டிக்கில் எனும் அந்த நபர், அச்சம்பவத்தின்போது ஐஸ் கிரீம் வாங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் பயத்தில் கூச்சலிட்டபோதும், அவர்கள் முன்னிலையில் வாகனத்தின் உரிமையாளரை மிரட்டியுள்ளார்.

அப்போது 32 வயதாகும் ஜேமி டிக்கில் குடிபோதையில் இருந்தது மட்டுமல்லாது, கொக்கைன் போதைப்பொருளை அதிக அளவு உட்கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

மெர்சிசைட் எனும் நகரில் நடந்த இந்த சம்பவத்துக்கு பின், டிக்கில் தலைமறைவானபோதும், சில மணி நேரங்களிலேயே கைது செய்யப்பட்டார்.

படத்தின் காப்புரிமை CPS

"திடீரென நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் டிக்கில் ஏன் ஈடுபட்டார், எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை. எனினும் இது பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியான பேரழிவை உண்டாக்கியுள்ளது," என்று நீதிபதி ஸ்டீஃபன் எவெரெட் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை CPS

ஜேமி டிக்கிலால் மிரட்டப்பட்ட நன்டஃபோன் வாட்கின்சன் எனும் பெண் அவர் 90 சென்டிமீட்டர் நீளமுள்ள வாளை வைத்துக்கொண்டு அவர் தன் அருகில் வந்ததாகவும், தாம் அப்போது ஐஸ் கிரீம் வழங்கிக்கொண்டிருந்த மூன்ற குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தே தாம் மிகவும் கவலைப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

தாக்குதல் நடந்த ஜூலை ஒன்றாம் தேதி நன்டஃபோனின் 34வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :