’தடைகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை’ - ஐ.நா.

ஐ.நா.,வின் தடைக்கு பிறகும் வட கொரியா, அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தயாரிப்பு திட்டங்களை நிறுத்தவில்லை என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

சட்டத்துக்கு புறம்பான வகையில் கப்பல் வழியாக எண்ணெய் பொருட்களை கைமாற்றுவது மற்றும் அயல்நாட்டு ஆயுதங்கள் விற்பனை செய்ய முயல்வது போன்றவற்றில் வடகொரியா ஈடுபடுவது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

ஐநா பிரத்யேகமாக ஏற்பாடு செய்த சுயாதீன நிபுணர்கள் குழு, ரகசிய அறிக்கை ஒன்றை வெள்ளிக்கிழமையன்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஒப்படைத்தது.

ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து வடகொரியா இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அதிகாரிகளிடம் ஜூன் மாதம் வடகொரியா உறுதியளித்திருந்த போதிலும் புதிய பேலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை கட்டமைத்து வருகிறது என அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.

உளவு பார்க்கும் செயற்கைக்கோள் மூலம் வடகொரியாவின் அணு ஆயுத தயாரிப்பு தளத்தில் தொடர் செயல்பாடுகள் நடந்து வருவதும் பேலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரித்து வருவதும் தெரியவந்துள்ளதாக பெயர்வெளியிடாத அமெரிக்க அதிகாரிகள் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சிங்கப்பூரில் சந்தித்தனர். அதில் அணு ஆயுத ஒழிப்பு குறித்த வேலைகளில் ஈடுபவதற்கு இரு தலைவர்களும் உறுதியளித்தனர். ஆனால் எப்படி அது நிகழும், என்ன மாதிரியான செயல்முறைகள் செயல்படுத்தப்படவுள்ளது என அதில் குறிப்பிடவில்லை.

அணு ஆயுத திட்டங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளில் ஈடுபடவதற்கு எதிரான அமெரிக்கா மற்றும் சர்வதேச தடைகள் உள்ளிட்டவற்றை சந்தித்து வருகிறது வடகொரியா.

படத்தின் காப்புரிமை KCNA

.நா., அறிக்கை என்ன சொல்கிறது?

வடகொரியாவுக்கு எதிராக ஐநா விதித்துள்ள தடைகள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை நிபுணர் குழு கவனித்து வருகிறது. அதன் அடிப்படையில் ஐநாவின் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று பல ஊடகங்களில் இது காணப்பட்டது.

'' வடகொரியா தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்களை நிறுத்தவில்லை மேலும் பாதுகாப்பு அமைப்பின் தீர்மானங்களை மீறி சட்டத்துக்கு புறம்பான வகையில் கப்பல் வழியாக பெட்ரோலிய பொருட்களை கைமாற்றும் செயல் மற்றும் கடலில் நிலக்கரி கைமாற்றம் ஆகியவை 2018-ல் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது '' என்கிறது அந்த அறிக்கை.

''அயல்நாட்டு இடைத்தரகர்கள் மூலம் லிபியா, ஏமன், சூடான் நாடுகளுக்கு துப்பாக்கிகள், சிறு ஆயுதங்கள், மிதமான ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்க வடகொரியா முயற்சி செய்தது'' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகொரியாவின் இந்நடவடிக்கைகள் பொருளாதார தடைகளை பயனற்றதாக மாற்றியுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை KCNA
Image caption 2017-ல் வடகொரியா செய்த ஏவுகணை சோதனைகளில் ஒன்று

வடகொரியாவின் அணு ஆயுதமற்ற மண்டலமாக்கும் உறுதிமொழியை செயல்படுத்த அந்நாடு முயற்சி எடுக்கும் என்பதில் தனது தளரா நம்பிக்கை இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் மைக் பாம்பியோ கூறியிருந்த நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு மாநாடு தொடங்கு முன் பேசிய பாம்பியோ ''அணுஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான வேலைகள் தொடங்கிவிட்டது. கொரிய தீபகற்பத்தில் இந்த செயல்முறையை நிகழ்த்துவதற்கு சில காலம் தேவைப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும்'' என்றார்.

வடகொரியா அணுஆயுத ஒழிப்பு செயல்முறையில் முழுமையாக ஈடுபட்டு வெற்றிகாண்பதற்கு ராஜ்ய மற்றும் பொருளாதார அழுத்தங்களை தொடரவேண்டியது அவசியம் என அவர் வலியறுத்தினார்.

தடைகளை மீறி வடகொரியர்களை தனது நாட்டில் வேலை செய்ய ரஷ்யா அனுமதி வழங்கியது குறித்த அறிக்கைகளை தான் பார்த்ததாகவும் பாம்பியோ கூறியுள்ளார்.

''தீர்மானங்களை ஆதரித்த ஒவ்வொரு நாட்டுக்கும் நான் நினைவுபடுத்த விரும்புவது என்னவெனில், இது மிகவும் முக்கியமான விஷயம் என்பதே. மேலும் நாங்கள் மாஸ்கோவுடன் கலந்துரையாடுவோம். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை கடைபிடித்து வடகொரியா மீது தடைகளை சுமத்துவதில் ரஷ்யர்களும் மற்ற அனைத்து நாடுகளும் உறுதியாக இருப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்'' என்றார் மைக் பாம்பியோ.

ரஷ்யா தனது நாட்டில் வேலை செய்வதற்கு புதிதாக ஆயிரம் வடகொரியர்களை அனுமதித்துள்ளதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியான செய்தியை ரஷ்யா மறுத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :