குப்பை பொறுக்குவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள பறவைகள்

கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.

குப்பை பொறுக்க

பட மூலாதாரம், Getty Images

பிரான்ஸில் உள்ள தீம் பார்க் ஒன்று குப்பை பொறுக்குவதற்காக ஆறு புத்திசாலி பறவைகளை பணியமர்த்தி உள்ளது. அறு காகங்களுக்கு சிகரெட்டை பொறுக்கவும், குப்பைகளை அப்புறப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டு மேற்கு பிரான்ஸில் உள்ள புய் டு ஃபொ தீம் பார்க்கில் பணி அமர்த்தப்பட்டுள்ளது.

இவை அங்குள்ள குப்பைகளை அகற்றி குப்பை தொட்டியில் போடும். இதற்கு பரிசாக அதற்கு சிறப்பு உணவளிக்கப்படும். இந்த பூங்காவின் தலைவர் நிகோலஸ், " பறவைகளை கொண்டு குப்பைகளை அகற்ற வேண்டும் என்பது மட்டும் நம் நோக்கமல்ல. இயற்கையே சூழலை நமக்கு சூழலியல் குறித்து பாடம் எடுக்கிறது என்பதை உணர்த்துவதுதான் நம் நோக்கம்" என்கிறார்.

ரோமானிய போராட்டம்

பட மூலாதாரம், AFP/Getty

ஆயிரக்கணக்கான ரோமானிய மக்கள் மீண்டும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர். ரோமானிய தலைநகர் புக்கரஸ்டில் நடந்த முந்தைய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 400 பேர் காயமடைந்து இருந்தனர்.

ஆனாலும், மக்கள் அதற்கு அடுத்த நாளும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அரசாங்க அலுவலகம் அருகில் சனிக்கிழமை நடந்த அப்போராட்டத்தில் கூச்சல் இருந்தாலும், அமைதியாகவே செல்வதாக கூறுகிறார்கள் அரசாங்க அதிகாரிகள்.

இனி நைபால் எழுதமாட்டார்

பட மூலாதாரம், Getty Images

இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் சர் விஎஸ் நைபால் தனது 85 ஆவது வயதில் காலமானார். 1932 ஆம் ஆண்டு ட்ரினிடடில் உள்ள குக் கிராமம் ஒன்றில் பிறந்த இவர், 'எ பெண்ட் இன் தி ரிவர்' மற்றும் 'எ ஹவுஸ் ஃபார் மிஸ்டர் பிஸ்வாஸ்' ஆகிய நாவலுக்காக அறியப்பட்டார். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி உள்ள இவர், 1971 ஆம் ஆண்டு புக்கர் பரிசும், 2001 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசும் பெற்றார்.

கொல்லப்பட்ட பிஷப், கொலை செய்த துறவி

பட மூலாதாரம், Getty Images

ஆள் அரவமற்ற மடாலயம் ஒன்றில் கிறிஸ்தவ பிஷப் ஒருவரை கொன்றதாக துறவி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வட மேற்கு கைரோவில் உள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி பிஷப் எபிஃபானியஸ் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இந்த கொலை துறவி வேல் சாட் செய்ததாக கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

விமானத்தை திருடிய ஊழியர்

பட மூலாதாரம், AFP

சியாட்டில் விமான நிலையத்தில் பயணியர் யாரும் இல்லாத விமானம் ஒன்றை திருடி, மேலேழுந்து பறந்து அருகிலுள்ள தீவில் மோதியவர் அந்த விமான நிலையத்தை சேர்ந்த ஊழியர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தை திருடி, பறந்த அந்த ஊழியர் "ஹாரிசன் ஏர்" என்ற விமான நிறுவனத்தில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக விமானத்தை கட்டி இழுப்பது மற்றும் பயணிகளின் பைகளை விமானத்திலிருந்து வெளியே எடுப்பது போன்ற பணிகளை செய்து வந்ததது தெரியவந்துள்ளது.

உரிய அனுமதியின்றி எடுத்துச்செல்லப்பட்ட இந்த விமானத்தை இரண்டு ஃஎப்15 பைட்டர் ஜெட் விமானங்கள் துரத்தி சென்றன. ஆனால், புகெட் சவுண்ட் என்ற இடத்தில் விமானம் மோதியதில் அந்த நபர் இறந்துவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :