நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நைபால் காலமானார்

நைபால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நைபால்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற 85 வயதான பிரபல நாவலாசிரியர் சர் நைபால் காலமானார்.

கடந்த 1932ஆம் ஆண்டு டிரினிடாட்டின் ஊரகப்பகுதியில் பிறந்த நைபால், 'எ பெண்ட் இன் தி ரிவர்' மற்றும் 'ய ஹவுஸ் ஃபார் மிஸ்டர் பிஸ்வாஸ்' போன்ற 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

"வெற்றியடைந்த அனைத்திலும் பேராற்றல் வாய்ந்தவர்" என்று நைபால் குறித்து அவரது மனைவி கூறினார்.

இந்நிலையில், "அற்புதமான படைப்பாற்றல் மற்றும் பெரு முயற்சி நிறைந்த ஒரு வாழ்வை வாழ்ந்த நைபால், தனக்கு பிடித்தவர்கள் சூழ்ந்திருக்க" லண்டனிலுள்ள தங்களது இல்லத்தில் உயிரிழந்துவிட்டதாக அவரது மனைவி கூறியுள்ளார்.

நைபாலின் நெருங்கிய நண்பரும், மெயில் பத்திரிகையின் ஆசிரியருமான ஜோர்டியே க்ரெய்க், நைபாலின் மறைவு 'பிரிட்டிஷ் இலக்கியத்தின் பாரம்பரியத்தில் இடைவெளியை உண்டாக்கியுள்ளதாகவும்' ஆனால் அவரது 'புத்தகங்கள் தொடர்ந்து வாழும்' என்பதில் துளியும் சந்தேகமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று பல்வேறு நாடுகளை சேர்ந்த எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் நைபாலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

"காலனித்துவ ஆதிக்கத்தால் மூழ்கடிக்கப்பட்ட மனிதர்களின் வரலாற்றை மென்மையாகவும், அதே சமயத்தில் நகைச்சுவை உணர்வுடனும் சொல்ல தெரிந்த அருமையான நாவலாசிரியர் நைபாலின்" என்று எழுத்தாளர் லைலா லலாமி கூறியுள்ளார்.

ஆங்கில நாவலாசிரியரும், பத்திரிகையாளருமான ஹரி குண்ஸ்ரு, "நாங்கள் நேர்காணலுக்காக உட்கார்ந்தவுடனேயே, 'நீங்கள் என்ன படித்தீர்கள் என்பதை பொய் சொல்லாமல் கூறிவிடுங்கள்' என்ற அவரது கேள்விக்கு பதில் கூறிய பிறகே, அவரிடம் கேள்வி கேட்க முடிந்தது" என்று நைபாலினுடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.

பட மூலாதாரம், GERRY PENNY/EPA/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு,

நைபால் நோபல் பரிசு பெற்றபோது...

'நவீனகால தத்துவவாதி'

ஷேக்ஸ்பியர் மற்றும் டிக்கென்ஸின் எழுத்துக்களை நைபாலுக்கு சிறுவயதிலிருந்தே அவரது தந்தை படித்துக் காட்டினார். நைபால், ட்ரினிடாடிலுள்ள குயின்ஸ் ராயல் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

அதன் பிறகு பிரிட்டனுக்கு சென்ற நைபால், ஒரு அரசாங்க உதவித்தொகையை பெற்று 1950ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

ஆனால், கல்லூரி மாணவராக இருந்தபோது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நைபால் தற்கொலைக்குகூட முயற்சித்துள்ளார்.

1951ஆம் ஆண்டு 'தி மிஸ்டிக் மஸ்ஸியுர்' என்னும் தனது முதல் புத்தகத்தை பதிப்பித்த நைபால், ஒரு தசாப்தகாலத்திற்கு பின்னர், மூன்றாண்டுகாலம் எடுத்துக்கொண்டு 'ய ஹவுஸ் ஃபார் மிஸ்டர் பிஸ்வாஸ்' என்னும் தனது மிகவும் பிரபலமான நாவலை வெளியிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நடிராவுடன் நைபால்

1957 முதல் 1961ஆம் ஆண்டுவரை பிபிசி உலகச் சேவையின் கரீபியன் பிரிவில் பணியாற்றிய நைபால், 'ய பிரீ ஸ்டேட்' என்னும் புத்தகத்துக்காக 1971ஆம் ஆண்டு புக்கர் பரிசை வென்றார்.

கடந்த 2001ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காக நைபாலை தேர்ந்தெடுத்த நோபல் அமைப்பு, "மறைக்கப்பட்ட வரலாற்றின் இருப்பைப் பார்ப்பதற்கு நம்மை உந்துவிக்கும் வகையில் ஒன்றிணைந்த பகுத்தறிதல் விவரிப்பு மற்றும் அழிவில்லாத ஆய்வு" நைபாலின் படைப்புகள் கொண்டிருப்பதாக கூறியது.

நைபாலின் மனைவி பாட்ரிசியா ஹாலே கடந்த 1996ஆம் ஆண்டு உயிரிழந்தவுடன், பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் நடிராவை திருமணம் செய்துகொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :