அமெரிக்க இலக்குகளை தாக்குவதற்கு பயற்சி அளிக்கிறதா சீனா?

பசிபிக் பகுதியில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு சீன ராணுவம் பயிற்சி அளித்து வருவதாக தோன்றுகிறது என்று பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரித்துள்ளது.

அமெரிக்க இலக்குகளை தாக்குவதற்கு சீனா பயற்சி அளிக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images

இந்தப் பகுதிகளில் அதிக போர் விமானங்களை அனுப்புவதற்கான திறனை சீனா அதிகரித்து வருவதாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அளித்துள்ள ஆண்டறிக்கையில் பென்டகன் தெரிவிக்கிறது.

பாதுகாப்பு செலவாக மதிப்பிடப்படுகின்ற 190 பில்லியன் டாலர் தொகை உள்பட சீனா அதிகரித்து வருகின்ற ராணுவ திறன்கள் இந்த அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. சீனாவின் ராணுவ செலவு அமெரிக்காவின் ராணுவ செலவில் மூன்றில் ஒரு பகுதியாகும்.

இந்த அறிக்கை பற்றி சீனா இதுவரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

அறிக்கையின் விவரங்கள்

சீனாவின் ராணுவ மற்றும் பொருளாதார அபிலாஷைகள் பற்றிய ஒருங்கிணைந்த ஆய்வின் ஒரு பகுதியாக வான்வழி தாக்குதல்கள் பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"கடந்த மூன்று ஆண்டுகளில் முக்கிய கடல் பிரதேசங்களில் சீன மக்கள் விடுதலை படை அனுபவங்கள் பெற்று, அவற்றின் மீது வான்வழியாக தாக்குதல் நடத்துகின்ற கடற்பரப்புகளை விரைவாக விரிவாக்கியுள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிலுள்ள இலக்குகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு பயிற்சி பெற்று வருவதாக தோன்றுகிறது" என்று இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற போர் விமானங்கள் மூலம் சீனா எதை நிரூபிக்க முயல்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகின்றது.

பட மூலாதாரம், Getty Images

"குவாம் உள்பட பசிபிக் பெருங்கடலின் மேற்கிலுள்ள அமெரிக்கா, அதன் கூட்டணி படைப்பிரிவுகள் மற்றும் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திறனை வெளிப்படுத்த சீன மக்கள் விடுதலை படை முயற்சிக்கலாம்" என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

"போரிடவும், வெற்றியடையவும்" தனது தரைப் படைப்பிரிவுகளில் மறுசீரமைப்பு மேற்கொண்டு வருவதாக சீனா தெரிவிக்கிறது.

"மேலதிகமாக நடமாடும், மாதிரி அணுகுமுறை கொண்ட மற்றும் தீவிர தாக்குதல் படைப்பிரிவாக சீன தரைப் படையை உருவாக்கி, கூட்டு நடவடிக்கைகளின் மையமாக செயல்படும் திறன் கொண்டதாக மாற்றுவதே இந்த சீர்திருத்தங்களின் நோக்கமாகும்" என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த ஆய்வு அறிக்கையின்படி, அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவின் ராணுவ பட்ஜெட் 240 பில்லியன் டாலருக்கு மேலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளியை ராணுவமயமாக்குவதற்கு எதிரான பொது நிலைப்பாட்டை சீனா எடுத்திருந்தாலும், சீனா அதிகரித்து வருகின்ற விண்வெளி திட்டங்களையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.

பதற்றம் ஏற்படுத்தும் பகுதிகள்

அமெரிக்கா இப்போது முக்கிய பங்காற்றி வருகின்ற பசிபிக் பகுதிகளில் அதிகரித்து வருகின்ற சீனாவின் செல்வாக்கு தொடர்பாக அமெரிக்கா கவலையடைந்துள்ளது.

பட மூலாதாரம், Reuters

உயரிய முக்கியத்துவம் பெறுகின்ற பகுதிகளில் ஒன்றான தென் சீனக் கடலின் பெரும் பகுதி சீனாவாலும், பிற நாடுகளாலும் உரிமை கொண்டாடப்பட்டு வருகிறது.

தென் சீனக் கடலின் மேலே அவ்வப்போது பறந்து, அந்தப் பகுதி வழியாக செல்லுகின்ற சுதந்திரத்தை நிலைநாட்ட அமெரிக்க ராணுவம் முயற்சித்து வருகிறது.

இந்தப் பகுதியில் ராணுவ வசதிகளாகவும், பவளப்பாறைகளாகவும் தோன்றுபவற்றை சீனா அதிகரித்து வருகின்றது. ராணுவ பயிற்சிகளின்போது, இப்பகுதியின் வெளிநிலைகளில் போர் விமானங்களை சீனா இறக்கியுள்ளது.

இன்னொரு முக்கிய சர்ச்சையாக இருப்பது தைவான். பிரிந்திருக்கும் ஒரு மாகாணமாக சீனா இதனை பார்க்கிறது.

ஆயுத சக்தி மூலமாக தைவானை ஆக்கிரமித்து கொள்ளும் நிலைமையை சீனா உருவாக்கி வருவதாக தோன்றுகிறது என்று இந்த ஆவணம் எச்சரிக்கிறது,

"அமெரிக்கா இதில் தலையிட்டால், தனது செயல்திறன்மிக்க தலையீட்டை தாமதப்படுத்த சீனா முயலலாம். குறுகிய கால சிறிய போர் மூலம் மிக விரைவாக வெற்றி காண முயற்சிக்கலாம் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

தென் சீனக் கடல் பகுதியை ராணுவ மயமாக்கி வருவதாக அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுமே பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றன

சீனாவுக்கு சரியென தலையாட்டிவிட்டு, 1979ம் ஆண்டு தைவானோடு இருந்த முறையான உறவுகளை அமெரிக்கா துண்டித்துவிட்டது. ஆனால், நெருங்கிய அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகளை இன்னும் தைவானோடு தொடர்வது சீனாவை ஆத்திரமூட்டி வருகிறது.

சீனாவோடும், பிலிப்பைன்ஸோடும் எல்லைகள் தொடர்பான சர்ச்சைகளை கொண்டிருக்கும் ஜப்பானில், அமெரிக்கா முக்கியமானதொரு ராணுவ தளத்தை பராமரித்து வருகிறது.

இவை தவிர ராணுவமற்ற துறைகளிலும் பதற்றங்கள் தொடாந்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் சீனா இருதரப்பும் ஒன்று மற்றென்றில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ளன.

பதற்றத்தை குறைக்கும் செயல்பாடுகள்

ஆக்கபூர்வமான மற்றும் முடிவு சார்ந்த உறவு சீனாவோடு அமைய அமெரிக்கா விரும்புவதை பென்டகனின் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

அமெரிக்க மற்றும் சீன ராணுவ அதிகாரிக்ளுக்கு இடையில் தொடர்பு இருந்து வருகிறது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் சீனாவில் பயணம் மேற்கொண்ட ஜேம்ஸ் மேதிஸ், 2014ம் ஆண்டுக்கு பிறகு சீனாவில் பயணம் செய்த முதல் அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆவார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :