திருமணம், குழந்தை பேறை விரும்பாத தென் கொரிய பெண்கள் - காரணம் என்ன?

படத்தின் காப்புரிமை TASS

திருமணம் செய்துகொள்ள போவதில்லை, குழந்தை பெற்றுக்கொள்ள போவதில்லை, ஆண்களுடன் எவ்வித உறவையும் கொள்ளப்போவதில்லை என்று சமீப காலமாக தென் கொரியாவை சேர்ந்த பெண்கள் பலரும் கூறி வருகின்றனர்.

உலகிலேயே குறைந்தளவு குழந்தை பிறப்பை கொண்டுள்ள தென் கொரியாவில், பெண்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வராதவரை எதுவும் மாறுவதற்கு வாய்ப்பில்லை.

"வாழ்க்கையில் எப்போதுமே குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் எனக்கில்லை" என்கிறார் தென் கொரிய தலைநகர் சோலை சேர்ந்த 24 வயதாகும் ஜங் யூன்-ஹ்வா என்ற இளம்பெண்.

"பிரசவத்தின் உடல் வலி எனக்குத் தேவையில்லை. அது எனது வாழ்க்கைக்கு சீரழிவான அமையும்" என்று அவர் கூறுகிறார்.

"ஒரு குடும்பத்தின் உறுப்பினராக இருப்பதை காட்டிலும், நான் தனிமையில் வாழ்ந்து, எனது வாழ்க்கை லட்சியத்தை அடைவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்" என்று ஜங் யூன்-ஹ்வா கூறுகிறார்.

தொழில்ரீதியான வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் தனித்தனியாவை என்று ஜங் யூன்-வா மட்டுமல்லாமல் பல கொரிய பெண்களும் நினைக்கிறார்கள்.

Image caption யூன்-ஹ்வா

தென் கொரியாவில் பெண்கள் கர்ப்பமடைவதால் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படுவதை தடுக்கும் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், பல தொழில் அமைப்புகள் இந்த சட்டங்கள் நடைமுறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்று கூறுகின்றன.

சோல் நகரின் வடக்குப்பகுதியில் வசிக்கும் சோய் மூன்-ஜியாங் வாழ்க்கை கதை இந்த பிரச்சனையின் வீரியத்தை மேலும் உணர்த்துகிறது. தனக்கு ஒரு குழந்தை பிறக்கவுள்ளதாக அவர் தனது முதலாளியிடம் கூறியவுடன், அவர் வெளிக்காட்டிய எதிர்வினையை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

"உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால், அதுதான் முதன்மை இடத்தை பெறும், அதனால் அலுவலக பணி பின்தள்ளப்படும். அப்படிப்பட்ட நிலையில் நீங்கள் வேலையில் தொடர முடியுமா?" என்று தனது முதலாளி கேட்டதாக அவர் கூறுகிறார்.

"மேலும், அவர் தனது கேள்வியை தொடர்ந்த வண்ணம் இருந்தார்."

மூன்-ஜியாங் அப்போது வரி கணக்காளராக பணியாற்றிக்கொண்டிருந்தார். சிறிது காலத்திற்கு பிறகு மூனுக்கு அவரது முதலாளி அதிகளவிலான வேலைப்பளுவை அளிக்க தொடங்கினார். இதுகுறித்து மூன் புகாரளித்தபோது, அவர் கடமையுணர்ச்சியுடன் பணிபுரியவில்லை என்று கூறப்பட்டது, பிரச்சனையின் வீரியத்தை மேலும் அதிகப்படுத்தியது.

"அவர் என்னிடம் கத்திக்கொண்டிருந்தார், நான் என் நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன், மொத்த மன அழுத்தமும் என் உடலில் ஊடுருவ தொடங்கியது. என்னால் கண்களை திறக்க முடியவில்லை" என்று மூன் தன்னுடைய நிலையை விவரிக்கிறார்.

Image caption சோய் மூன்-ஜியாங்

"எனது சகப் பணியாளர் மருத்துவ உதவியாளரை அழைக்க, நான் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்."

அப்போது, மூனுக்கு ஏற்பட்டுள்ள அதிகப்படியான மனஅழுத்தம் கருச்சிதைவுக்கான தொடக்க அறிகுறிகளை காட்டுவதாக மருத்துவர்கள் கூறினர்.

ஒரு வாரகாலத்தை மருத்துவமனையில் கழித்த பின், தனது வயிற்றிலுள்ள குழந்தையை காப்பற்றினார். பிறகு, மீண்டும் பணிக்கு சென்ற மூனை வலுக்கட்டாயமாக பணியிலிருந்து வெளியேற வைப்பதற்கு இயன்ற அனைத்து காரியங்களையும் அவரது முதலாளி மேற்கொண்டார்.

இந்த வகையான அனுபவம் அசாதாரணமானது அல்ல என்று கூறும் மூன், "என்னுடன் பணிபுரியும் பல பெண்களுக்கு குழந்தைகளே இல்லை, அவர்களுக்கு குழந்தையை பெற்றுக்கொள்ளும் திட்டமும் இல்லை" என்று மேலும் கூறுகிறார்.

கடுமையாக, அதிக நேரம், கடமையுணர்ச்சியுடன் பணியாற்றுவது கடந்த ஐம்பதாண்டுகாலத்தில் தென் கொரியா பெற்ற மிகப் பெரிய வளர்ச்சியின் காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆனால், தென் கொரியாவின் இந்த வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்புக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கப்படுவதில்லை என்று யூன்-ஹ்வா கூறுகிறார்.

"தென்கொரியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகக் குறைந்த ஊதியத்தில் தொழிற்சாலைகளில் பணியாற்றிய பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது" என்று அவர் கூறுகிறார்.

ஆனால், சிறிதுகாலம் முன்புவரை ஆண்கள் மட்டுமே செய்யும் தொழில்களாக அறியப்பட்ட வேலைகளை தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் அதிகளவில் செய்து வருகின்றனர். விரைவான சமூக, பொருளாதார மாற்றங்கள் இருந்த போதிலும், பாலினம் குறித்த மனப்போக்குகள் மெதுவாகவே மாறிவந்தன.

"இந்நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு சியர்லீடர்களாக இருப்பதற்கு எதிர்பார்க்கின்றனர்" என்று யூன்-ஹ்வா கூறுகிறார்.

தான் திருமணம் செய்துகொண்டு செல்லும் குடும்பத்தின் ஒட்டுமொத்த தேவையை பெண்கள் கவனிக்க வேண்டும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறுகிறார்.

"என் ஆளுமை இதுபோன்ற பாத்திரத்திற்கு பொருந்தாது," என்னும் யூன்-ஹவா, "நான் என் சொந்த வாழ்க்கையில் பிஸியாக இருக்கிறேன்" என்று கூறுகிறார்.

தென் கொரிய ஆண்கள் அந்நாட்டு பெண்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை ஒரு வார்த்தையில் விவரியுங்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, "அடிமைகள்" என்று அவர் பதிலளிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :