ஒரு தீவு, ஆயிரக்கணக்கான அகதிகள், ஒரு பட்டினி போராட்டம் - பசிபிக் பெருங்கடல் சோகம்

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம்.

பட்டினி போராட்டம்

படத்தின் காப்புரிமை Getty Images/WORLD VISION AUSTRALIA

பன்னிரெண்டு வயது இரான் சிறுவன் மேற்கொண்ட பட்டினி போராட்டம் ஆஸ்திரேலியாவில் காத்திரமான ஒரு கோரிக்கைக்கு காரணமாகி உள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள நவ்ரா தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புகலிடம் தேடும் மக்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குழு ஒன்று அரசுக்கு கெடு விதித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடும் ஆயிரகணக்கான மக்கள் நவ்ரா தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த தீவில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

திடீர் வெள்ளப்பெருக்கு

படத்தின் காப்புரிமை EPA

தெற்கு இத்தாலியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக குறைந்தது எட்டு நடைபயண வீரர்கள் பலியாகி உள்ளனர். நான்கு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் கலப்ரியா பகுதியில் உள்ள தேசிய பூங்காவின் பள்ளதாக்கில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட பெருமழையில் சிக்கி மரணித்துள்ளனர்.

எடுத்த நடவடிக்கை எடுத்ததுதான்

படத்தின் காப்புரிமை AFP

அமெரிக்க பாஸ்டர் ஒருவரை தடுத்து வைத்திருப்பதன் காரணமாக துருக்கி மீது அமெரிக்க எடுத்த நடவடிக்கை திரும்ப பெற மாட்டாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். "துருக்கி செய்வது கவலை அளிக்கிறது. மோசமான தவறை துருக்கி செய்கிறது. எந்த சலுகைகளும் துருக்கிக்கு கிடையாது" என்று டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்க பாஸ்டர் துருக்கியில் ஆட்சி கவிழ்ப்புக்கு சதி திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்துயிர் பெற்ற ஜாம்பியா ஏர்வேஸ்

படத்தின் காப்புரிமை Universal Images Group

சரியாக 24 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெற்றிருக்கிறது ஜாம்பியா விமான சேவை நிறுவனம்.இந்த நிறுவனமானது எத்தியோப்பியன் விமான சேவை நிறுவனத்துடன் 30 மில்லியன் டாலர் மதிப்புமிக்க ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆஃப்ரிக்க, ஐரோப்பியா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா ஆகிய நாடுகளுக்கு விமான சேவையை விரைவில் மேற்கொள்ள இருக்கிறது ஜாம்பியா ஏர்வேஸ் நிறுவனம்.

கடவுளின் மக்கள்

படத்தின் காப்புரிமை Reuters

குழந்தைகளுக்கு எதிராக நடைபெறுகிற பாலியல் வன்கொடுமை "அராஜகங்கள்" மற்றும் அது தேவாலயங்களால் மறைக்கப்படுவது குறித்து கண்டித்து போப் ஃபிரான்ஸிஸ் உலகில் உள்ள 1.2பில்லியன் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்"கடவுளின் மக்களுக்கான" கடிதம் என்று குறிப்பிடப்பட்ட அக்கடிதத்தில், "மரண கலாசாரத்துக்கு" முடிவு கட்ட வேண்டும் என கோரியுள்ள அவர் தேவலாயங்களில் பாலியல் வன்முறைகள் குறித்து மறைக்கப்படுவதும், மன்னிப்பு கோராமல் இருப்பது குறித்தும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :