சந்தையை கைப்பற்ற குறைவான விலையில் களமிறங்கும் ஜியோமி மொபைல்

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம்.

களமிறங்கும் ஜியோமி மொபைல்

பட மூலாதாரம், XIAOMI

ஜியோமி மொபைல் பொகொ எஃப் 1 எனும் அதிக வசதிகள் கொண்ட ஒரு புதிய மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 9 இல் உள்ள வசதிகள் அனைத்தும் இந்த ஜியோமி மொபைலிலும் உள்ளது. ஆனால், இதன் விலை அதனுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.

ஜியோமி முன்பே இந்திய சந்தையில் வலுவாக கால் ஊன்றிவிட்ட நிலையில் பிற சந்தைகளை பிடிக்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளது. இதன் பேட்டரி -3,800 எம்ஏஎச் மற்றும் ரேம் 8 ஜிபி. இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த மொபைலின் பேஸிக் மாடலின் விலை 20,999 மற்றும் டாப் எண்ட் வெர்சனின் விலை 29,999.

ஆஸ்திரேலியாவின் வறட்சி

பட மூலாதாரம், LEBANESE MUSLIM ASSOCIATION

கேரளம், குடகு ஆகிய பகுதிகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரு வெள்ளம் என்றால், ஆஸ்திரேலியாவில் சமீப காலங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான வறட்சி நிலவி வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜூன் மாதம் பார்வையிட்ட ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம்,பருவநிலை மாற்றத்திற்கும் இப்போது ஆஸ்திரேலியா எதிர்கொண்டு வரும் வறட்சிக்கும் நேரடி தொடர்பு உள்ளது என்றார்.

ஆஸ்திரேலியாவில் செவ்வாய்க்கிழமை பக்ரித் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமியர்கள் தொழுகையின் போது மழை வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். சிட்டினியில் கூடிய 30 ஆயிரம் ஆஸ்திரேலிய முஸ்லிம்கள் இந்த மோசமான வறட்சி முடிவுக்கு வர வேண்டுமென கூட்டு தொழுகையை மேற்கொண்டார்கள்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை

பட மூலாதாரம், AFP

யூத குடியேற்றங்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் ஆயிரம் புதிய வீடுகளை கட்ட இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. 382 புதிய வீடுகள் கட்ட இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள வீடுகள் கட்டுவதற்கான செயல்திட்டம் தொடக்க நிலையில் உள்ளது. சர்வதேச சட்டத்தின்படி இந்த குடியேற்றங்கள் சட்டத்திற்கு புறம்பானது. ஆனால், இஸ்ரேல் இதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. பாலத்தீனியர்கள் தங்களுக்கு சொந்தமான நிலம் என்று சொல்லும் மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெரூசலேம் பகுதிகளில் இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட 140 குடியேற்றங்களில் 60,000 யூதர்கள் வசிக்கிறார்கள்.

ஐ.எஸ் தலைவரிடமிருந்து வந்த ஆடியோ

பட மூலாதாரம், AFP

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி பேசும் ஒலி செய்தி என்று கூறி ஒரு புதிய ஆடியோவை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அபுபக்கர் ஊனம் அடைந்துவிட்டார், இறந்துவிட்டார் என பல முறை தகவல்கள் பரவி உள்ளன. இப்படியான சூழலில் இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது எப்போது பதிவு செய்யப்பட்ட ஆடியோ என்று தெரியவில்லை. ஆனால் இதில், அண்மையில் துருக்கியில் கைது செய்யப்பட்ட அமெரிக்க பாஸ்டர் குறித்த செய்திகள் எல்லாம் இருக்கிறது. தமது கட்டுப்பாட்டில் சிரியா மற்றும் இராக்கில் இருந்த பெரும்பாலான பகுதிகளை ஐ.எஸ் அமைப்பு இழந்துவிட்டது.

ரஷ்யாவுடன் கூட்டுச்சதி

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் கூட்டுச்சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது தொடர்பான விசாரணையில் தான் பேச மிகவும் விருப்பமும், மகிழ்வும் கொள்வதாக டொனல்ட் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோவன் தெரிவித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய நிதி தொடர்பாக சட்டத்தை மீறி டிரம்புடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு ரகசியமாக பணம் அளித்ததாக நீதிமன்றத்தில் கோவன் செவ்வாய்க்கிழமையன்று ஒப்புக்கொண்டார்.'டொனால்ட் டிரம்ப் குறித்து தனக்கு தெரிந்த அனைத்தையும் கூற'  கோவன்  தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் லேனி டேவிஸ் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: