புதைத்தோரை தோண்டி எடுக்க செய்யும் ‘வாடகை கல்லறை சட்டம்‘ மீளாய்வு

கல்லறைகளை வாடகைக்கு விடுகின்ற ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸின் சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றை பொது விசாரணைக்கு உட்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

படத்தின் காப்புரிமை Oscar Gonzalez/NurPhoto via Getty Images

பிராந்திய கல்லறைகள் மற்றும் எரியூட்டும் சட்டத்தில் ஜூன் மாதம் அறிமுகப்படுத்திய பின்னர் வாடகைக்கு விடப்படுகின்ற கல்லறைகள் பற்றி நியூ சௌத் வேல்ஸ் அரசு மீளாய்வு செய்ய போவதாக 'சிட்னி மானிங் ஹெரால்டு' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தங்களின் பாசத்திற்குரியோருக்கு நிரந்தரமான கல்லறைகள் அமைக்க முடியாதோருக்கு, உறவினர்கள் 25 முதல் 99 ஆண்டுகள் வரை கல்லறைகளை வாடகைக்கு மட்டுமே எடுத்துக்கொள்ள இந்த சட்டம் அனுமதிக்கிறது.

இறந்தோரை கல்லறைகளில் அடக்கம் செய்வது அதிக செலவழிக்க செய்கின்ற வியாபாரம் என்று கூறும் நியூ சௌத் வேல்ஸ் அரசு நூலகம், ஒரு கல்லறைக்கு 2,970 முதல் 4,800 டாலர் வரை செலவாகும் என்று தெரிவித்துள்ளது.

அரசியல் சர்ச்சை

தற்போது நடைமுறையில் இருக்கின்ற சட்டப்படி, இறந்தோர் அடக்கம் செய்யப்படும் இடத்திற்கான தொகையின் காலக்கெடு முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குள் உறவினர்கள் புதுப்பிக்காவிட்டால், இறந்தோரின் கல்லறை மீது வைக்கப்பட்டிருக்கும் பெயர் பொறித்த கல்லை மாற்றிவிடலாம்.

அவர்களின் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு, பழைய எலும்புகளின் நிலவறை அல்லது "எலும்பு அறை" என்று கூறப்படும் இடத்தில் போடப்பட்டுவிடும். அந்த கல்லறையை மீண்டும் வாடகைக்கு விட்டுவிட முடியும்.

இறந்தோரை கல்லறைகளில் அடக்கம் செய்வதை "உணர்வுபூர்வமான விடயம்" என்பதை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்று 'சிட்னி மானிங் ஹெரால்டு' நாளிதழிடம் தெரிவித்த நியூ சௌத் வேல்ஸின் நிலம் மற்றும் காடுகள் துறை அமைச்சர் பால் டூலெ, மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்ற கல்லறைகளால்தான், இந்த அடக்க முறையை தொடர செய்யும் என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP

கல்லறைகளை மீண்டும் பயன்படுத்த கூடாது என்று போதிக்கும் மதங்கள் அல்லது கலாசார குழுக்களுக்கு இந்த சட்டம் விலக்கு அளிப்பதை நியூ சௌத் வேல்ஸ் யூத வரியத்திலுள்ள வின் அல்ஹாடெஃப் என்பவர் தான் அளித்த பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் கல்லறைகளை மீண்டும் பயன்படுத்துகின்ற இந்த சட்டத்தால் யூத சமூகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் மீண்டும் பயன்படுத்தப்படுகின்ற கல்லறைகள் "பலவீனமான முடிவு" மற்றும் "பல குடும்பங்களில் கொடூரமான முடிவுகளை எடுக்க செய்வது" என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் அரசியல்வாதி மைக் வெய்டெக் விமர்சனம் செய்துள்ளார்.

"இந்த விதிமுறை இறந்தோரை அடக்கம் செய்வதில் இரண்டு வகுப்பினரை உருவாக்கும். செலவு செய்யக்கூடிய வலுவுடையோர் நிரந்தர நினைவு சின்னங்களை (கல்லறைகளை) கொண்டிருப்பர். இந்த செலவை ஏற்க முடியாதோர் தங்களின் பாசத்திற்குரியோர் தோண்டப்படுவதை காண்பர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மேலவை ஒழுங்காற்று குழு நடத்துகின்ற இந்த சட்டம் பற்றிய விசாரணையில், செப்டம்பர் 7ம் தேதி வரை பொது சாட்சியங்கள் பெறப்படும். அடுத்த மாதம் மீளாய்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்