‘இத்தாலி முதல் வெனிசுவேலா வரை’ உலகெங்கும் உச்சத்தில் குடியேறிகள் பிரச்சனை

கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.

வெனிசுவேலா, நிகராகுவே, இத்தாலி என உலகெங்கும் குடியேறிகள் விவகாரம்தான் உச்சத்தில் இருக்கிறது. அரசியல் ஸ்திரமற்றதன்மை, பொருளாதாரம் என பல காரணிகளால் உலகெங்கும் பல நாடுகளில் கொத்து கொத்தாக மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மூன்று நாடுகளில் நிலவும் பிரச்சனைகளை மட்டும் இன்றைய உலகப் பார்வையில் தொகுத்துள்ளோம்.

வெனிசுவேலா குடியேறிகள்

படத்தின் காப்புரிமை Getty Images

வெனிசுவேலா குடியேறிகளை தங்கள் நாட்டிற்குள் அதிக எண்ணிக்கையில் வருவதை தடுக்க பெரு நாடு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. வெனிசுவேலா மக்கள் இனி வெறும் அடையாள அட்டையை மட்டுமே வைத்துக் கொண்டு பெரு நாட்டிற்குள் நுழைந்துவிட முடியாது. இதுபோன்ற சட்டத்தை அண்மையில் ஈக்வேடர் அரசாங்கம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையால் வெனிசுவேலா மக்கள் தங்கள் நாட்டிலிருந்து தப்பி பிற நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

நிகராகுவே குடியேறிகளுக்கு ஆதரவாக

படத்தின் காப்புரிமை Reuters

கோஸ்டா ரிக்கா சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நிகராகுவே குடியேறிகளுக்கு ஆதரவான பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணியானது சான் ஜோஸீல் நடந்தது. நிகராகுவேயில் அரசியல் ஸ்திரமற்றத்தன்மை நிலவுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பி பிற நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் கோஸ்டா ரிக்காவில் குடியேறிகளுக்கு எதிரான அர்ப்பாட்டம் நடந்தது. அந்தப் போராட்டம் வன்முறையில் முடிந்தத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். சனிக்கிழமை குடியேறிகளுக்கு ஆதரவாக நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் நிகராகுவே அதிபருக்கு எதிரான வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

விசாரணையில் அமைச்சர்

படத்தின் காப்புரிமை EPA

கடலில் தத்தளித்த குடியேறிகளை நாட்டிற்குள் அனுமதிக்காத விவகாரத்தில் சிசிலி அரசு தரப்பு இத்தாலி உள்துறை அமைச்சர் மாட்டியோ சல்வினியை விசாரித்து வருகிறது. குடியேறிகள் விஷயத்தில் ஒரு தீர்வு எட்டப்படும் வரை குடியேறிகளை கப்பலைவிட்டு இறங்க அனுமதிக்க முடியாது என இத்தாலி அரசு கூறுகிறது.

வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது

படத்தின் காப்புரிமை AFP

ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் வெற்றியை உறுதிப்படுத்தி அந்நாட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவை ஏற்க மறுத்தார் ஜிம்பாப்வே எதிர்க்கட்சி தலைவர் நெல்சன் சமிசா. நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி,"நீதிமன்ற முடிவு மக்கள் முடிவல்ல" என்றார். நெல்சனின் எம் டி சி கூட்டணி கட்சி சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஜிம்பாப்வே தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டியது. ஆனால், முறைகேடு தொடர்பாக போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி அரசமைப்பு நீதிமன்றம் எமர்சனின் வெற்றியை உறுதி செய்துள்ளது.

காலமானார் ஜான் மெக்கைன்

அமெரிக்காவின் அதிபர் தேர்தலின் முன்னாள் வேட்பாளர் ஜான் மெக்கைன் காலமானார். ஜான் மெக்கைன், வியட்நாம் போரின் நாயகனாகவும் பின்னர் அமெரிக்க செனட்டராகவும் இருந்த குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளர் இந்திய நேரப்படி இன்று  காலமானார். அவருக்கு வயது 81. 

விரிவாக படிக்க:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்