ஃப்ளோரிடா: வீடியோ கேம் போட்டியில் தோல்வி அடைந்ததால் துப்பாக்கிச் சூடு?

  • 27 ஆகஸ்ட் 2018

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பொழுதுபோக்கு வளாகம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவரால் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை GLHF GAME BAR

துப்பாக்கிதாரியின் பெயர் டேவிட் கேட்ஸ். 24 வயதுடைய அவர் பால்டிமோரை சேர்ந்தவர். அவர் சம்பவ இடத்தில் தன்னை தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வேறுயார் மீதும் சந்தேகமில்லை.

இந்த சம்பவத்தில் 11 காயமடைந்துள்ளனர்.

பெரிய ஷாப்பிங், பொழுதுபோக்கு மற்றும் உணவக வளாகத்தில் வீடியோ கேம் போட்டி நடந்து கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதுவரை நடைபெற்ற போலிஸாரின் விசாரணையில் சந்தேக நபரான கேட்ஸ் கைதுப்பாக்கியை பயன்படுத்தினார் என்று தெரியவந்துள்ளது.

வீடியோ கேம் போட்டியில் தோல்வியடைந்ததில் ஆத்திரமடைந்த அவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார் என்ற உள்ளூர் ஊடகங்களின் செய்தியை போலிஸார் உறுதிபடுத்த மறுத்துவிட்டனர்.

ஃப்ளோரிடா மாகாணம் இதுவரை பல பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்களை சந்தித்துள்ளது. 2016ஆம் ஆண்டு ஓர்லாண்டோவில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் பலியாகினர். பார்க்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிப்ரவரி மாதம் 17 பேர் கொல்லப்பட்டனர்.

என்ன நடந்தது?

வீடியோ கேம் போட்டி இணையத்தில் ஒளிபரப்பப்பட்டபோது அந்த வீடியோ காட்சியில் பல துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டன.

வீடியோ கேம் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ட்ரினி ஜோகா என்னும் 19 வயது நபர் தனது அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

தனது வழ்நாளின் மோசமான தினம் இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் துப்பாக்கி குண்டு தனது கட்டை விரலை தொட்டுச் சென்றது என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Drini Gjoka

துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் மக்கள் சிதறி ஓட தொடங்கினர் பின் சிறப்பு போலிஸார் அவர்களை அமைதிபடுத்தி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் வேறு யாரேனும் உள்ளனரா என சோதனையிட்டனர்.

தீயணைப்பு மீட்புத் துறையினரால் ஒன்பது பேர் மீட்கப்பட்டு அருகாமையில் இருந்த மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதில் சிலருக்கு துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன. காயம் அடைந்தவர்கள் இருவர் அவர்களே மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption துப்பாக்கிதாரியை நேரில் பார்த்த டேய்லர் பாய்டெக்ஸ்டெர்

சிக்காகோவை சேர்ந்த டேய்லர் பாய்டெக்ஸ்டெர் துப்பாக்கிதாரியை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

"நாங்கள் அவரை பார்த்தோம், இரண்டு கைகளால் துப்பாக்கியை பிடித்துக் கொண்டு சுற்றி வந்தார். நான் என வாழ்க்கை குறித்தும் எனது நண்பர்கள் வாழ்க்கை குறித்தும் மிகவும் அச்சமடைந்தேன்" என்கிறார் டேய்லர் பாய்டெக்ஸ்டெர்.

காயமடைந்தவர் குறித்து அவர்கள் உறவினர்களிடம் தெரிவிக்காதவரையில் அவர்களின் விவரங்கள் வெளியிடப்படமாட்டாது.

"பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கடினமாக உழைக்க வேண்டும் என்பதை தீவிரவாக வலியுறுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது" என சம்பவம் நடைபெற்ற ஃப்ளோரிடா மாகாணத்தி உள்ள ஜேக்சன்வில்லி நகரின் மேயர் லென்னி கர்ரி தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியை ஒருங்கிணைத்த, மேடன் என்ற கால்பந்து வீடியோ கேமின் உரிமை நிறுவனமான `ஈஏ ஸ்போர்ட்ஸ்`(EA sports) அதிகாரிகளுடன் இணைந்து நடந்தவை குறித்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த "மோசமான சம்பவம்" குறித்து தனது அனுதாபத்தையும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்